ஆடலரசனுக்கு ஆனித்திருமஞ்சனம்!

ஆண்டுக்கு ஆறு அபிஷேகங்கள் மட்டும் காணும் ஆடலரசனான ஸ்ரீ நடராஜப் பெருமானின் திருமேனி அற்புதமானது.
ஆடலரசனுக்கு ஆனித்திருமஞ்சனம்!

ஆண்டுக்கு ஆறு அபிஷேகங்கள் மட்டும் காணும் ஆடலரசனான ஸ்ரீ நடராஜப் பெருமானின் திருமேனி அற்புதமானது. சிவபெருமானின் 64 மூர்த்தி வடிவங்களில் மிகவும் போற்றப்படுவது நடராஜர் திருவுருவமாகும். இவரது நட்சத்திரத்திற்கு ஏற்ப (திருவாதிரை) இவரது உடல் வெம்மையானது. கழுத்தில் நீலகண்டம், கையில் அக்னி, உடலில் சுடுகாட்டுச் சாம்பல் பூசப்பட்டு உஷ்ணமான திருமேனியாக இருப்பதால் சிவபெருமானை குளிர்விப்பதற்காக வருடத்திற்கு ஆறு அபிஷேகங்கள் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன. இதனை ஒரு விழாவாகவே, சிதம்பரம், திருவாரூர், உத்தரகோசமங்கை, ஆவுடையார் கோயில், கோனேரி ராஜபுரம் ஆகிய திருத்தலங்களில் நடத்துகிறார்கள்.

சித்திரை மாதம் திருவோணம், ஆனி உத்திரம், மாசி, ஆவணி, புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசி, மார்கழி திருவாதிரை திருநாளிலுமாக ஆறு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இதில் ஆனி உத்திரத் திருமஞ்சனமும் மார்கழி திருவாதிரையும் மிக முக்கியமானவையாகக் கருதப்படுகிறது. இந்த இரண்டு அபிஷேகமும் தில்லை சிதம்பரம் கோயிலில் ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெறுகின்றது. மற்ற அபிஷேகங்கள் அனைத்தும் கனக சபையில் நடைபெறும்.

மார்கழித் திருவாதிரையில் விடியற்காலையிலும் மாசியில் கால சந்தியிலும் சித்திரையில் உச்சிக்காலத்திலும் ஆனி உத்திரத்தன்று சாயரட்சையிலும் ஆவணி இரண்டாம் காலத்திலும் புரட்டாசியில் அர்த்த ஜாமத்திலும் என்று ஆறு அபிஷேகங்கள் ஓராண்டில் நடைபெறுகின்றன.

ஆனிமாதம் உத்திர நட்சத்திரத்திற்கு பத்து நாள்களுக்கு முன்பாகவே கொடியேற்றப்பட்டு அன்றிலிருந்து எட்டாம் நாள் வரை உற்சவ மூர்த்திகளான ஸ்ரீ சோமாஸ்கந்தர், சிவானந்த நாயகி, விநாயகர், சுப்ரமணியர், சண்டேசர் ஆகிய பஞ்சமூர்த்திகள் தனித்தனியாக வெள்ளி மற்றும் தங்க வாகனங்களில் வீதி உலா வருவார்கள். ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா நடைபெறும். பஞ்சமூர்த்திகள் ஐவரும் வீதி உலா வந்தபின்னர், ஸ்ரீ நடராஜரையும் அன்னை அபிராமியையும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளச் செய்து அபிஷேகங்கள் நடைபெறும்.

பின்னர், நாகை வேதாரண்யத்தில் "புவனிவிடங்கர்' ஆடும் நடனம் அம்சபாத நடனம் எனப்படுகிறது. இது, அன்னப்பறவை அடிமேல் அடியெடுத்து வைத்து அழகாக நடப்பது போன்ற தோற்றமாகும். திருவாரூர்- திருக்குவளைக்கு வடக்கே திருவாய்மூரில் "நீலவிடங்கர்' ஆடும் நடனம் "கமல நடனம்' ஆகும். இறைவன் காலனை அழித்தபின், ஆடிய "காலசம்ஹார தாண்டவ'த்தை மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திருக்கடையூர் தலத்தில் தரிசிக்கலாம். ஈரோடு அருகில் உள்ள கொடுமுடி தலத்தில் "சித்ராபௌர்ணமி' அன்று பரத்வாஜ முனிவருக்காக இறைவன் ஆடிய நடனத்தை "சித்திர நடனம்' என்று போற்றுவர்.

இறைவன் ஆடிய தாண்டவங்கள் பல இருந்தாலும் 108 தாண்டவங்கள் மிகவும் போற்றப்படுகின்றன. இறைவன் தாமாகவே ஆடியது 18. இறைவியுடன் ஆடியது 36. விஷ்ணுவுடன் ஆடியது 9. முருகனுக்காக ஆடியது 3. தேவர்களுக்காக ஆடியது 42.

திருச்சிக்கு அருகில் உள்ள வயலூர் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ நடராஜரின் திருமேனி விக்கிரகத்தில் திருவாசி இல்லை. திரிசடை ஜடாமுடி இல்லை. கிரீடம் மட்டும் அணிந்துள்ளார். இடது மேல் கரத்தில் அக்னியும் வலது மேல்கரத்தில் உடுக்கையும் வலது கீழ் கரம் அபயம் தரும் நிலையிலும் இடது கீழ்கரம் வலது பாதத்தைக் காண்பிக்கும் நிலையில் தொங்கவிட்டும் எழுந்தருளியுள்ளார். மேலும் இவரது காலடியில் முயலகன் மிதிபடவில்லை. முயலகன் இல்லாத அற்புதத் திருமேனி என்று போற்றுவர். கால்தூக்கி ஆடாமல், நடனக்கோலத்தில் சற்று நளினமாகக் காட்சி தரும் இத்திருமேனியை "சுந்தரத்தாண்டவ திருமேனி' என்றும் "உமா நடன வடிவம்' என்றும் போற்றுவர்.

சிவாலயங்களில் பஞ்சலோகத் திருமேனியில் காட்சி தரும் ஸ்ரீ நடராஜப் பெருமான், ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோச மங்கை திருத்தலத்தில் மரகதக்கல் (பச்சைக்கல்) திருவுருவில் எழுந்தருளியுள்ளார். இத்திருமேனிக்கு சந்தனக் காப்பு செய்திருப்பார்கள்.
- டி.ஆர். பரிமளரங்கன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com