நற்செயல்களால் நன்மதிப்பு

நன்மதிப்பும் நற்புகழும் விலை மதிப்பற்ற சொத்து. இச்சொத்தைப் பெறுவதே மனிதனின் புனித நோக்கமாக இருக்க வேண்டும்.
நற்செயல்களால் நன்மதிப்பு

நன்மதிப்பும் நற்புகழும் விலை மதிப்பற்ற சொத்து. இச்சொத்தைப் பெறுவதே மனிதனின் புனித நோக்கமாக இருக்க வேண்டும். இதனையே இவ்வுலகில் உதித்த நபிமார்கள் நவின்றனர். இதனை இப்ராஹீம் நபி இறைவனிடம் இறைஞ்சியதை நிறைவாய் நினைவுறுத்துகிறது குர்ஆனின் 26-84 ஆவது வசனம். "நல்ல மதிப்பை எனக்கு ஏற்படுத்து. எனது காலத்திற்குப் பிறகும் இந்த மனிதர்களிடம் நிலையான உண்மையான நியாயமான நற்பெயரையும் நன்மதிப்பையும் உருவாக்கித் தருவாயாக!''

இப்ராஹீம் நபியைப் பின்பற்றியோரும் அவர்களுக்குபபின் தோன்றிய நபிமார்களைப் பின்பற்றியோரும் இறுதி தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றும் இக்கால இஸ்லாமியர்களும் இப்ராஹீம் நபியைப் போற்றி பாராட்டுவது இப்ராஹீம் நபி இறை நம்பிக்கையோடு நற்குணத்தாலும் மென்மையான சொல்லாலும் செய்த நன்மை பயக்கும் நற்செயல்களால் இறைவன் இப்ராஹீம் நபியின் இறைஞ்சலை நிறைவேற்றி நீளுலகில் மனித ஆளுமை நடைபெறும் காலம் எல்லாம் நன்மதிப்பைப் பெற செய்தான்.

உன்னத புகழ் கடந்த கால களங்கம் இல்லா வரலாறு நன்மதிப்பு ஆகியன போட்டி உலகில் வெற்றியை நல்கும்;  அறியா புறத்திலிருந்து வரும் ஆபத்துகளைத் தடுக்கும்; மனித மனங்களை வெல்லும்; எண்ணம் விரிவடையும்; எண்ணியன எண்ணிய வண்ணம் பயன் தரும்.

யூசுப் நபி மீது பொய் குற்றம் சாட்டிய ஜூலைகாவின் பொய்யைப் பொய்யாக்கி நபியின் நற்செயல்களால் நபியின் நன்மதிப்பு உயர்த்தப்பட்டதை உத்தம குர்
ஆனின் 12-51 ஆவது வசனம் கூறுகிறது. 19-96 ஆவது வசனம் " நிச்சயமாக நம்பிக்கை கொண்டு நற்செயல் புரிவோர் நன்மதிப்பைப் பெறுவர்'' என்று உறுதி 
செய்கிறது.

நற்செயல்களை நாளும் செய்ய வேண்டும். அழகிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அன்றாட வேலைகளில் நம்பகத் தன்மையும் பொறுப்புணர்ச்சியும் இருக்க வேண்டும். நியாயமான அணுகுமுறை வேண்டும். இவை உடன் உறைபவர்கள் மத்தியில் நன்மதிப்பை உருவாக்கும். உடன் உறைபவர்களிடம் இணக்கமான உறவைப் பேண வேண்டும். சொல்லிய வண்ணம் செயல்பட வேண்டும் ஒரு தனி மனிதனின் நன்மதிப்பு அவன் சார்ந்த சமூகத்திற்கும் நன்மதிப்பு கிடைக்கச் செய்யும்.

வாடிக்கையாளர்களிடம் நடந்து கொள்ளும் முறையால் வியாபாரியும் பணியாளரும் வாடிக்கையாளர் மத்தியில் நன்மதிப்பைப் பெறுவர்.  நன்மதிப்பு பெற்றவரை மக்கள் பாராட்டுவர். இப்பாராட்டு மனிதன் பிறந்த ஊர் பிறந்த நாட்டிற்கும் பெருமையை சேர்க்கும். அனைத்து மக்களிடமும் அழகாக பேசுவது நாட்டின் நன்மதிப்பை உயர்த்தும். குழந்தைகளுக்கும் நன்மதிப்பின் நற்பயனைக் கூறி நாகரிகமாக நடக்க கற்று கொடுக்க வேண்டும்.

நபி பட்டம் பெறுவதற்கு முன்னரே முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்அமீன் - உண்மையான நம்பிக்கையாளர் என்ற நன்மதிப்பை மக்களிடம் 
பெற்றார்கள்.

யேமன் நாட்டிற்கு அனுப்பிய  மஆது (ரலி) அவர்களுக்கு அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகளின் இறுதி சொல்   " மக்களுக்கு உங்கள் குணத்தை அழகாக்கிக் கொள்ளுங்கள்'' அறிவிப்பவர் - மாலிக் (ரஹ்) நூல் -முஅத்தா.

பெருமானாரின் திருமொழிகளில் சில. " மக்களிடம் நற்குணம் கொண்டு பழகுங்கள்'' அறிவிப்பவர் ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) நூல்- அஹ்மது, திர்மிதீ. " மனிதனுக்கு வழங்கப் பட்டவைகளில் மேலானது நற்குணம்'' அறிவிப்பவர்- அன்னை ஆயிஷா (ரலி) நூல்- பைஹகீ.

" நிச்சயமாக ஆதமின் மக்களை நாம் சங்கைப் படுத்தினோம். நாம் படைத்துள்ள படைப்புகள் பலவற்றைப் பார்க்கினும் மனிதர்களை மேன்மைப் படுத்தினோம்'' என்று எழில்மறை குர்ஆனின் 17-70 ஆவது வசனம் கூறுகிறது. அறிவு, சிந்தித்து உணரும் தன்மை, சீரான உருவம், நேரான வழியில் நேரிய வாழ்வு, பிற உயிரினங்களை அடக்கி ஆளும் ஆற்றல்,  புதிய கண்டுபிடிப்புகளைக் காணும் ஆளுமைகளை வழங்கி மேன்மை படுத்திய மேலோன் அல்லாஹ் அவ்வப்பொழுது நேர்வழி காட்டும் தூதர்களையும் அனுப்பி மனிதன் மதிப்போடு வாழ வழிகாட்டுகிறான். அதனால் மனிதன் அன்பு, பரிவு, பாசம், நேசம், இரக்கம், வாய்மை, நேர்மை, நீதி, பிறர் நலம் பேணல், தாராள தன்மை, கலந்து பழகும் பான்மை, விட்டு கொடுக்கும் சகிப்பு தன்மை, மற்றவரை மதிக்கும் மனப்பாங்கு முதலிய மேலான குணங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்நற்குணங்களாலும் இந்நற்குணங்களின் அடிப்படையில் புரியும் நற்செயல்களாலும் நன்மதிப்பைப் பெற வேண்டும்.
- மு.அ. அபுல் அமீன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com