பூமியில் தோன்றிய பொக்கிஷம்!

"ஏழுமலை இருக்க எனக்கென்ன மனக்கவலை..?;'' ஏழேழ் பிறவிக்கும் எதற்கும் பயமில்லை எனப் பாடிப்பாடி உருகியவர் ஓர் அன்பர்.
பூமியில் தோன்றிய பொக்கிஷம்!

"ஏழுமலை இருக்க எனக்கென்ன மனக்கவலை..?;'' ஏழேழ் பிறவிக்கும் எதற்கும் பயமில்லை எனப் பாடிப்பாடி உருகியவர் ஓர் அன்பர். செட்டிநாட்டில் காரைக்குடி அருகில் உள்ள அரியக்குடிஎன்னும் தலத்தில் வாழ்ந்தவர் சேவுகன் செட்டியார் என்ற அன்பர் நிறையப் பொருள் படைத்திருந்த அவர் அருளும் பெற்றிருந்தார்.

இவர் தன்னிலை மறந்து தியானம் செய்கையில் சில சமயங்களில் பாம்புகள் அவர் மேல் ஏறி விளையாடுவதனைக் கண்டு ஊரார் பரவசம் அடைந்திருக்கின்றார்கள். இவரையே பெருமாளாகக் கருதி சேவை செய்தோரும் உண்டு.

திருப்பதி ஏழுமலையானை நோக்கி ஆண்டுதோறும் நடைப் பயணம் செய்து தரிசனம் செய்து மகிழ்வார். இவரின் திருப்பதி பாதயாத்திரையே ஒரு திருவிழாப் போல நடைபெறும்.

ஒரு முறை, திருமலையில் ஏறிச் செல்லும் போது தள்ளாமையால் மயங்கி வீழ்ந்ததோடு மேற்கொண்டு மலையேற முடியாமல் கண்ணீர் பாய கசிந்து கிடந்தார்.

ஏழுமலையான் எழில் கோலமாய் காட்சி தந்தான். " இனிமேல் நீங்கள் என்னை நாடி வரவேண்டாம். யாமே உம்மிடத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பேன். என்னை அங்கு பிரதிஷ்டை செய்வாயாக'' என சில மங்கல விஷயங்கள் கூறி அருள்பொழிந்தார்.

ஊருக்குத் திரும்பிய சேவுகன் செட்டியாருக்கு ஊர் எல்லையில் கருடன் வட்டமிட்டு வரவேற்க, பெருமாள் சொன்ன அடையாளங்கள் மங்களமாய்த் தென்பட்டது. மகிழ்வோடு அந்த இடத்தில் பூமி பூஜை செய்து பணிகள் தொடங்கியபோது பூமியிலிருந்து பொக்கிலிமாய்ப் பெருமாள் தோன்றினார். ஸ்ரீ தேவி, பூதேவியுடன் பெருமாளுக்கு ஆலயம் அமைத்தார்.

கிழக்கு நோக்கிய ஆலயம், 7 நிலைகள் கொண்ட அழகான ராஜகோபுரத்திற்கும் ஐந்து நிலைகளுடைய மற்றொரு கோபுரத்திற்கும் நடுவே தசாவதார மண்டபம் காட்சி அளிக்கின்றது. மகா மண்டபத்தின் தென் பகுதியில் கொடி மரத்தை அடுத்து, ராமர் சந்நிதியும் தேசிகர் சந்நிதியும் உள்ளன.

துவார பாலகர்களைக் கடந்து சென்றால் பெருமாள் சந்நிதியை அடையலாம். ஸ்ரீ தேவி, பூதேவியுடன் பெருமாள் திருவேங்கடமுடையான் கண்கொள்ளாக் காட்சித் தருகிறார். பெருமாளின் தென்புறத்தில் அலர்மேல் மங்கைத் தாயார் சந்நிதி; கீழ்த்திருப்பதியில் குடிகொண்டுள்ள தேவியே இங்கு வந்து இருப்பதாக ஐதீகம்! இச்சந்நிதியின் வடகிழக்கு மூலையில் சேனை நாயகர் சந்நிதியும்; வடபுறத்தில் ஆண்டாள் சந்நிதியும் அமைந்துள்ளன.

வெளிப்பிரகாரத்தின் வடபகுதியில் ஏகாதசி மண்டபமும் சொர்க்கவாசல் கதவும் உள்ளது. ஏகாதசி மண்டபத்தினை அடுத்து கோயிலின் மேல் தளத்தில் ஈசான்ய மூலையை நோக்கி மூலைக்கருடன் சந்நிதி உள்ளது. மூலைக் கருடன் சந்நிதிக்கு நேர் எதிரில் கருடதீர்த்தம் என்னும் திரு மஞ்சன புஷ்கரணி உள்ளது. மூலைக்கருடனுக்கு விடலைத்தேங்காய் உடைப்பதன் மூலம் சகல பிரச்சனைகளும் தீரும் என்பது நம்பிக்கை. வெள்ளிக்கிழமைகளில் தாயார் திருமஞ்சனமும்;

திருவோண நட்சத்திரத்தில் பெருமாள் திருமஞ்சனமும் பிரசித்தம்! திருக்கல்யாணம் நடத்தி வழிபடுபவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறுகிறது.

சித்திரை வருட பிறப்பன்று விசேலிஷ திருமஞ்சனம் நடைபெற்று இரவில் மஞ்சக்கருட வாகனத்தில் எம்பெருமான் வலம் வருவார். வைகாசியில் பிரம்மோத்சவம், ஆடியில் பத்து நாட்கள் திருவாடிப்பூரம் உற்சவம் நடைபெறும். ஆவணியில் கோகுலாஷ்டமி உரியடித் திருவிழா, புரட்டாசியில் நான்கு சனிக்கிழமைகளிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள்கூடி வழிபாடு செய்வார்கள்.

பெரிய திருவோணத் திருநாளில் இரவு பெரிய அகல் சட்டியில் தீபம் ஏற்றி ஊரில் உள்ள நகரத்தார்கள் "கோவிந்தா கோவிந்தா!'' என கோலிஷம் எழுப்பியபடி தீபத்தினை வலம் வருவார்கள். திருக்கார்த்திகையில் சொக்கப்பனைக் கொளுத்துதலும் மார்கழியில் திருப்பள்ளி எழுச்சி, வைகுண்ட ஏகாதசியும் மிகவும் விசேஷமாகும். பங்குனி உத்திர நன்னாளில் ஸ்ரீ அலமேலு மங்கைத் தாயாருக்கும் திருவேங்கடமுடையானுக்கும் திருக்கல்யாண உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறுகின்றது. ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திரத்தன்று மூலைக்கருடனுக்கு திருமஞ்சனம் நடைபெறும். ஆடி மாத சுவாதியில் விஷேச அபிஷேகமும் உண்டு. இத்திருக்கோயிலில் உள்ள ஏகாதசி மண்டபத்தில் 100 ஆண்டுகளுக்கு முற்பட்ட அழகிய ஓவியங்கள் உள்ளன.

ஸ்ரீ ரெங்கம் பெரிய கோயிலில் இருந்து நம் பெருமான் விக்கிரஹமும் திருப்பதியில் இருந்து சடாரியும், திருக்கோஷ்டியூர் திருமெய்யத்திலிருந்து அக்னியும் இங்கு கொண்டு வரப்பெற்றதால் இத்தலத்தினை வழிபாடு செய்பவர்களுக்கு மேற்சொன்ன தலங்களை வழிபாடு செய்த பலன்கள் உண்டு.
- மீனாட்சி ஸ்ரீநிவாஸன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com