சுமுகமான சமூக பொறுப்பு

மனிதன் சமூக உயிரினம். ஒரு மனிதன் மற்றொரு மனிதனைச் சார்ந்து சேர்ந்து வாழ்வது மனித இயற்கை; மனித இயல்பு. மனிதன் தனித்து இயங்க இயலாது.
சுமுகமான சமூக பொறுப்பு

மனிதன் சமூக உயிரினம். ஒரு மனிதன் மற்றொரு மனிதனைச் சார்ந்து சேர்ந்து வாழ்வது மனித இயற்கை; மனித இயல்பு. மனிதன் தனித்து இயங்க இயலாது.

குகை வாழ்வு தொடங்கி இன்றைய கூடகோபுர மாட மாளிகை வாழ்வு வரை கூடி வாழ்வதே மனித குணம்.  இம்முறையில் கூடி வாழ்வதே சமூக, சமுதாய வாழ்வு. இந்த சமூக வாழ்வில் சமூக பொறுப்பு என்பது மனிதனுக்குப் பொதுவாக அற பண்பு. சமூக பொறுப்பு சமுதாய வளர்ச்சிக்கு வித்து. இவ்வித்தைச் சரியான நிலத்தில் சரியாக நட்டு முறையாக நீர்விட்டு வளர்த்தால் நிறையவே பயன் பெறலாம். அதுபோல சமுதாயத்தில் ஒவ்வொருவருக்கும் உள்ள பொறுப்பை ஒவ்வொருவரும் ஒழுங்காக கடைபிடித்தால் முறையாக நிறைவேற்றினால் சமுதாயம் சகல நிலைகளிலும் உயரும்.

மனித நேயம் சமூக பொறுப்பின் அடிப்படை குணம். மனித நேயம் எல்லா நிலைகளிலும் எல்லாரிடத்திலும் வெளிப்பட வேண்டும். குடும்ப தலைவர் குடும்பத்தில் உள்ள பெற்றோர், மனைவி, மக்கள், மருமக்கள், பேரன், பேத்திகள், அனைவரின் நலனைக் கவனித்து கண்காணித்து கடமை ஆற்றும் பொறுப்புடையவர். அப்பொறுப்பு அண்டை, அயலார், தெரு, ஊர், வட்டம், மாவட்டம், மாநிலம், நாடு என்று விரிந்து பரவலாகும் பொழுது சமூக, சமுதாய, நாட்டு தலைவர்களாகும் நல்ல வாய்ப்புகளையும் வழங்கும். 

சமூக பொறுப்பின் பிறர் நலம் பேணுவது தலையாயது. பிறர் நலம் பேணும் பேராண்மை பெற போட்டி, பொறாமை, மோசடி, வாக்கு மாறும் இழி குணங்கள் இல்லாமல் இருக்க வேண்டும். "மனிதர்கள் தங்களுக்குள் பொறாமை கொள்ளாத காலம் எல்லாம் நன்மையில் நிலைத்திருப்பார்கள்'' என்ற நீதர் நபி (ஸல்) அவர்களின் நீதியை நினைவூட்டுகிறார் ழமுரா (ரலி) நூல்- முஃஜமுத்தப்ரானி. வாக்குறுதியை வாக்களித்தபடி நிறைவேற்ற வான்மறை குர்ஆனின் 16- 91 ஆவது வசனம் வலியுறுத்துகிறது.

பிறர் நலம் பேணும் பேராண்மையால் ஒருவருக்கொருவர் உதவுவது உரிய நேரத்தில் உற்றுழி உதவுவது, சற்றும் எதிர்பாராத சங்கடங்களில் சிக்கி இருப்போரின் சிக்கலைத் தீர்த்து சிரமத்தைப் போக்குவது சமூக பொறுப்புகளில் சில. நல்ல முயற்சிகளுக்கும் நற்செயல்களுக்கும் ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இது சமூக சூழலை உருவாக்கும்.

மன்னிக்கும் மனப்பாங்கும் சமூக பொறுப்புகளில் ஒன்று. கோபத்தை விழுங்கி மனிதர்களை மன்னிப்பவர்களை அல்லாஹ் நேசிப்பதாக அருமறை குர்ஆனின் 3-134 ஆவது வசனம் கூறுகிறது. பிறரின் தீங்கை மன்னிப்பது வீரம் மிக்கது என்று விளம்புகிறது இலங்கும் குர்ஆனின் 42-39 முதல் 43 வரை உள்ள வசனங்கள். மன்னிப்பது மன்னிக்கப்பட்டவர் மனம் திருந்தி சமூகத்தோடு ஒத்துவாழ உதவும்; சமூகத்தில் பிளவு ஏற்படாது தடுக்கும். தண்டனை தவறைத் திருத்தாது.

மன்னிப்பு ஏற்படுத்தும் மனமாற்றம் ஏற்றம் பெற்று உயர ஏணியாய் உதவும், உறவை முறிக்கும் புறக்கணிக்கும் போக்கு சமூகத்திற்கு உகந்தது அல்ல. உங்களைத் துண்டிப்பவர்களை நீங்கள் துண்டிக்காது அவர்களுக்குத் துணை நின்று உதவினால் உன்னத சமுதாயம் உருவாகும் என்று உத்தம நபி (ஸல்) அவர்கள் தோழர் உக்பா இப்னு ஆமிர் (ரலி) அவர்களுக்கு அறிவுரை கூறினார்கள்.

மலர்ந்த முகமும் மாறா சிரிப்பும் தீரா பகையையும் தீய்த்து நேரிய வழியில் நெருங்க வைக்கும். இந்த நெருக்கம் சமூக ஒற்றுமையை வலுவாக்கும். சங்கடங்கள் சஞ்சலங்கள் நேருகையில் சகிப்புத் தன்மையோடு நடப்பது சகலரையும் வசப்படுத்தும். சமூகத்தைக் கட்டுக்குள் வைக்கும்; பகைமை இல்லாமல் ஆக்கும்.

பிறர் குறையை துருவி துருவி விசாரித்து விளம்பரப்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கிறது எழில்மறை குர்ஆனின் 49- 12 ஆவது வசனம். ஒருவரின் குறையை மற்றவர் பெரிது படுத்தி பேசினால், மற்றவர் பேசியவரின் குறையை குன்றன்ன குறையாக உயர்த்திக் காட்டி உரக்க பேசுவார். பெருங்குழப்பம் உருவாகி சமூகம் பிளவுபடும். ஏதிலார் குற்றத்தை ஏளனப் படுத்தாது தோதாய் திருத்தி தோழமை பூணுவது சமூகத்தை வலுபடுத்தும். குறைகூறி புறம் பேசுவோர் கேடடைவர் என்று எச்சரிக்கிறது எக்காலத்திற்கும் ஏற்ற குர்ஆனின் 104- 1 ஆவது வசனம்.

தனி மனிதனின் சமூக பொறுப்பை உணர்ந்து தன்னலம் தவிர்த்து சமூக நலம் பேணி அல்லன அகற்றி நல்லன  செய்தால் சமூக ஒற்றுமை நாட்டையும் வலுப்படுத்தும்.
- மு.அ. அபுல் ஆமீன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com