புகழுக்குரியவன் அல்லாஹ்

அல்லாஹ் என்னும் அரபி சொல் நிகரில்லாத நிதர்சனமான தன்னிலேதானே நிலைத்திருக்கும் தன்னிகரற்ற தன்மையை குறிப்பது
புகழுக்குரியவன் அல்லாஹ்

அல்லாஹ் என்னும் அரபி சொல் நிகரில்லாத நிதர்சனமான தன்னிலேதானே நிலைத்திருக்கும் தன்னிகரற்ற தன்மையை குறிப்பது. இச்சொல் ஆண்பாலோ பெண்பாலோ பலர்பாலோ ஒருமையோ பன்மையோ அல்ல. சர்வசக்தியுள்ள அல்லாஹ் இல்லாமையிலிருந்து மனிதனை உருவாக்குகிறான். மனிதன் உலகில் உள்ளவனாகி உலகின் இன்ப துன்பங்களைத் துய்க்கியறான். மனிதன் இறந்தபின் இல்லாமல் என்ற மூன்று நிலைகளில் மனிதனை கருவாக்கி, உருவாக்கி, உருவிருக்க உயிரிழந்து திருவாளனிடம் திரும்ப செல்லும் வரை அல்லாஹ்வைப் புகழ வேண்டும். பூவுலகில் பூரிப்புடன் வாழ்ந்து மறுமையிலும் நற்பேற்றைப் பெறலாம். 

அல்லாஹ்வின் ஆற்றலை அகத்தில் இருத்தி புகழும்பொழுது மனிதனின் இறுமாப்பு, அகந்தை, ஆதிக்க செருக்கு, பொறாமை முதலிய கெட்ட குணங்கள் கெட்டழிகின்றன. தான் என்ற தற்பெருமையும் பிறர் புகழ வேண்டும் என்ற பேதமையும் நீங்கி நீக்கமற நிறைந்துள்ள அல்லாஹ்வே ஆக்க சக்தியைத் தருபவன் என்று உணர வைக்கும். அல்லாஹ்விற்கு அடிபணிய வைக்கும். அந்த அடியானின் உள்ளம் உணர்வதும் உரைப்பதும் அல்லாஹ்வின் புகழாகவே இருக்கும். 

ஆதிமனிதன் ஆதம் நபி முதல் இறுதிதூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வரை அல்லாஹ்வைப் புகழ்ந்ததைப் புகலும் குர்ஆனின் ஒரேயொரு வசனம் 27-15 ஐ மட்டும் குறிப்பிடுகிறேன். "தாவூதுக்கும் சுலைமானுக்கும் நிச்சயமாக நாம் கல்வியைக் கொடுத்தோம். அதற்கு அவ்விருவரும் புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே சொந்தம். அவன்தான் நம்பிக்கை கொண்ட அவனின் நல்லடியார்கள் பலரைவிட எங்களை மேன்மையாக்கி வைத்தான் என்று கூறினார்கள்.'' அரசாட்சி செய்த தாவூது நபியும் சுலைமான் நபியும் கல்வியில் அவர்களை மேலாக்கி வைத்ததற்காக மேலோன் அல்லாஹ்வை மேதினியில் புகழ்ந்து கொண்டே இருந்தார்கள்.

வானையும் நிலத்தையும் அவற்றிலுள்ள அனைத்தையும் ஆட்சிபுரியும் அல்லாஹ்வைப் புகழ வேண்டும் என்று புகலும் புர்கானின் 64-1 ஆவது வசனம், " வானில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வைத் துதிக்கின்றன. அனைத்தும் அல்லாஹ்வின் ஆட்சிக்கு உரியவை. புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கு உரியது.'' வானங்களையும் பூமியையும் படைத்து ஒளியையும் இருளையும் உண்டாக்கிய அல்லாஹ்விற்கே எல்லா புகழும் என்று புகல்கிறது இகல் வெல்லும் குர்ஆனின் 6-1 ஆவது வசனம். அகிலத்தார் அனைவரையும் படைத்து பரிபாலித்து பக்குவப்படுத்துபவனாகிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் என்று இயம்புகிறது இறைமறை குர்ஆனின் 1-1 ஆவது வசனம்.

சந்ததி இல்லாத உதவியாளன் இல்லாத அல்லாஹ்வைப் பெருமைபடுத்தி புகழ பூமான் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவுறுத்துகிறது அருமறை குர்ஆனின் 17-111 ஆவது வசனம்.

ஏக இறைவனான அல்லாஹ்வின் ஏகத்துவத்தை எல்லாரும் ஏற்கும் வண்ணம் எப்படி புகழவேண்டும் என்று உரைக்கிறது இந்த வசனம். இணையில்லா இறைவன் அல்லாஹ் துணையின்றி உலகை உருவாக்கி மனிதர்களைப் படைத்து காத்து பரிபாலிக்கும் பெருமைக்குரிய பண்புகளைப் பகரும் அல்லாஹ்வின் திருப்பெயர்களைத் திருத்தமாய் ஓதுவதும் அல்லாஹ்வைப் புகழ்வதே ஆகும். குறையற்ற நிறை குர்ஆனை நீதர் நபி (ஸல்) அவர்களுக்கு அருளிய அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும் என்று 18-1 ஆவது வசனம் அறிவிக்கிறது. மேகத்திலிருந்து மழையைப் பொழிய செய்து வறண்ட பூமியை வளமாக்குபவன் யார் என்று இறைமறுப்பாளர்களைக் கேட்டால் அதற்கு பதில் அல்லாஹ் என்று கூறுவார்கள். அப்பொழுதும் புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கு என்று அவர்களுக்கு அறிவுறுத்த அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவுறுத்துகிறது நெறி காட்டும் குர்ஆனின் 29-63 ஆவது வசனம்.

பூமியில் வானங்களில் உள்ளவை அனைத்தும் இரவும் பகலும் இறைவனைப் புகழ்வதை புரிந்து நீங்களும் அவ்வாறே இறைவனைப் புகழ வேண்டும் என்று போதிக்கிறது நீதிமறை குர்ஆனின் 30-17,18 ஆவது வசனங்கள். இவ்விரு வசனங்களில் வரும் சொற்கள் ஐங்காலத் தொழுகைகளில் அல்லாஹ்வைப் புகழ புகல்கிறது. விளக்கம் அளிக்கிறார் இப்னு அப்பாஹ் (ரலி).

சூரியன் உதயத்திற்கு முன்னும் மறைவதற்கு முன்னும் உங்கள் இறைவனின் புகழைத் துதித்திடுங்கள்'' என்ற 50-39 ஆவது வசனம் சூரியன் உதிப்பதும் மறைவதும் நாளும் மாறா நிகழ்வுகள். எனினும் மாறா நிகழ்ச்சிகள் மாறினால் என்ன ஆகும் என்பதை எண்ணினால் அம்மாறா நிகழ்வுகளை மாறாது நிகழ்த்தும் அல்லாஹ்வைப்  புகழுவது கடமை என்பது நமக்கு புரியும். " இடியோசை இடி இறைவனைப் புகழும் துதி'' என்று புகல்கிறது புர்கான் என்னும் குர்ஆனின் 13-13 ஆவது வசனம். "ஏழு வானங்களும் பூமியும் அவற்றிலுள்ள எல்லா படைப்புகளும் அல்லாஹ்வைத் துதிக்கின்றன. எவை, அல்லாஹ்வைப் புகழ்ந்து துதிப்பதை நீங்கள் அறியமாட்டீர்கள் என்று 17-44 ஆவது வசனம் அறிவிக்கிறது. 

"ஒருவர் தும்மினால் அவர் அல்லாஹ்வைப் புகழட்டும். அப்புகழைக் கேட்பவர் புகழ்ந்தவருக்கு அல்லாஹ் அருள்புரிய இறைஞ்ச வேண்டும்'' என்று இறுதி தூதர் (ஸல்) இயம்பியதை அறிவிக்கிறார் அபூ ஹுரைரா (ரலி) நூல்- புகாரி. உணவை உண்ட பின் பானங்களைப் பருகிய பின் பசி நீக்கி தாகம் போக்கிய அல்லாஹ்வைப் புகழ்பவனை அல்லாஹ் பொருந்தி கொள்வதைக் கோமான் நபி (ஸல்) அவர்கள் கோடிட்டதைக் கூறுகிறார் அனஸ் (ரலி) நூல்- முஸ்லிம்.
"நல்லடியார்களின் இறுதி இறைவேட்டலும் இறை புகழ்ச்சியாக இருக்கும்'' என்று இறைமறையின் 10-10 ஆவது வசனம் வரையறுக்க இந்த இறையடியார்கள் "எங்களை விட்டு கவலைகளைப் போக்கிய அல்லாஹ்விற்கே எல்லா புகவும் உரியது. நிச்சயமாக எங்கள் இறைவன் மன்னிப்பவன், நன்றிய ஏற்பவன்'' என்று அல்லாஹ்வைப் புகழ்ந்து கொண்டே சொர்க்கம் செல்வர் என்று 35-34 ஆவது வசனம் விளக்குகிறது. 

நாள் எல்லாம் அல்லாஹ்வைப் புகழ்ந்து இம்மையில் நன்மைகள் செய்து நல்வாழ்வு வாழ்ந்து மறுமையிலும் மாறா நற்பேற்றப் பெற அல்லாஹ் நல்லருள் புரிவானாக!
-மு.அ. அபுல் அமீன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com