பூக்கும் புன்னகையின் நோக்கம்

பூக்கும் புன்னகையின் நோக்கம் ஆக்கம் அளிக்கும்; ஊக்கம் ஊட்டும்; உறவை வளர்க்கும். நட்பைப் பெருக்கும்;
பூக்கும் புன்னகையின் நோக்கம்

பூக்கும் புன்னகையின் நோக்கம் ஆக்கம் அளிக்கும்; ஊக்கம் ஊட்டும்; உறவை வளர்க்கும். நட்பைப் பெருக்கும்; நல்லதாகவே அமையும்; நன்மையே விளையும்; உண்மையும் அதுவே. இடியாய் முழங்கும் வெடி சிரிப்பால் வேதனையோ விளையும்; விபரீதமும் நடக்கும். அண்ணல்  நபி (ஸல்) அவர்கள் அனைத்து பற்களும் தெரிய அதிர்ந்து சிரித்தது இல்லை. ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் எப்பொழுதும் புன்சிரிப்புடன் இருப்பார்கள் என்று அன்னை ஆயிஷா (ரலி) அறிவிப்பதை புகாரி, முஸ்லிம் நூல்களில் காணலாம்.

அல்லாஹ்வின் அருளால் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மென்மையானவர்கள் என்று எழில்மறை குர்ஆனின் 3-159 ஆவது வசனம் கூறுகிறது. ஜரீரு (ரலி) ஏறி இருந்த ஒட்டகம் முரண்டு பிடித்தது. ஜரீரு (ரலி) அந்த ஒட்டகத்தை இங்கும் அங்குமாக திருப்பி கொண்டிருப்பதைக் கண்ட கருணை நபி (ஸல்) அவர்கள் மென்மையை மேற்கொள்ள அறிவுறுத்தி "எவர் மென்மையை இழந்து விடுகிறாரோ அவர் நன்மைகளை இழக்கிறார்'' என்று எச்சரித்ததை முஸ்லிம், அபூதாவூத் நூல்களில் காணலாம். 

நிச்சயமாக மென்மை எதில் குடிகொண்டுள்ளதோஅது அதனை அழகுபடுத்தி விடுகிறது. எதில் மென்மை அகற்றப்படுகிறதோ அது அதனை அழகற்றது ஆக்கி விடுகிறது'' என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் எடுத்துரைத்ததை தொடுத்துரைக்கிறார் அன்னை ஆயிஷா (ரலி) அறிவிப்பது முஸ்லிம், அபூதாவூத் நூல்களில் உள்ளது. அந்த மென்மையின் தன்மையே புன்னகை. புன்னகையில் பூக்கும் அழகை மலர்ச்சியை முறைக்கும் முகத்தில் காணமுடியாது. 

புன்னகை நேரிய சிந்தனையை வெளிப்படுத்தி சினேகத்தை வளர்க்கும்; மனிதர்களிடையே இறுக்கத்தைக் குறைத்து நெருக்கத்தை ஏற்படுத்தும். அதனால்தான் இமாம் சுப்யான் சௌரி (ரஹ்) மனிதர்களுக்கு இடையே இருக்கையில் புன்னகையோடு இருக்க வேண்டும்'' என்று இயம்பினார்கள்.

திமிஷ்க் பள்ளியில் ஓர் இளைஞர் முத்து பற்கள் பளிச்சிட்டு பூத்து மலர்ந்திட புன்னகைத்தார். அவரைச் சுற்றி மக்கள் சூழ்ந்து அவர்களின் வாழ்வின் வேறுபாடுகளை மாறுபாடுகளை கூறி அவ்விளைஞர் மு ஆத் இப்னு ஜபல் (ரலி) என்பதை அபூ இத்ரீஸ் கவ்வானி எடுத்துரைத்தது இமாம் மாலிக் அவர்களின் மு அத்தா நூலில் உள்ளது. ஆசிரியரின் புன்னகை மாணவர்களிடையே புத்துணர்வை உண்டாக்கி  புதியதைப் பூரிப்புடன் கற்றிட உதவும். அலுவலகத்தில் மேலாளரின் புன்னகை அவரின் மேற்பார்வையில் பணிபுரிகிறவர்கள் அணியாய் நின்று துணிவோடு தொடர்ந்து மணியாய் மாறா உற்சாகத்துடன் பணியாற்ற தூண்டி துணைபுரியும். 

ஒரு மனைவி கணவன் அவளைப் பார்க்கையில் அவனை மகிழ்விப்பாள் என்ற மாநபி (ஸல்) அவர்களின் மணிமொழியை அறிவிப்பவர் - இப்னு அப்பாஸ் (ரலி) நூல்- முஸ்தத்ரதுல் ஹாகிம். கணவன் பார்த்த பார்வையில் மகிழ மனைவி முகம் மலர்ந்து புன்னகைக்க வேண்டும். அவள் அணிந்துள்ள பொன் நகையைவிட அவளின் புன்னகையே கணவனின் கவனத்தைக் கவர்ந்து கவலையை மறந்து மனம் மகிழ வைக்கும். மனைவியிடம் மாறா அன்பு கொள்ள வைக்கும். இந்நபி (ஸல்) அவர்கள் அறிவிப்பை உறுதிபடுத்துகிறார் அபூஹுரைரா (ரலி) நூல் - முஸ்னத்துல் அஹ்மத். கணவன் வெளியிலிருந்து வீட்டிற்குள் வருகையில் முகம் மலர்ந்து புன்னகையுடன் ஸலாம் அழகிய முகமன் கூறி மனைவி மக்களை மகிழ்க்க வேண்டும் என்பதை எழில்மறை குர்ஆனின் 24-61 ஆவது வசனம்  கூறுகிறது.

உன் சகோதரரின் முகத்தை நோக்கி புன்னகை புரிவது நன்மை தரக்கூடிய நற்செயல் என்ற பொற்புடை நபி (ஸல்) அவர்களின் பொன்மொழியை அபூதர்தா (ரலி) புகல்வது திர்மிதீயில் பதிவாகி உள்ளது. மனிதர்களைச் சந்திக்கும் பொழுது புன்னகைக்க வேண்டும். முகம் மலர்ந்திருக்க வேண்டும். இது நபிமார்களின் நற்பண்பு. புன்னகை புரிவதால் மனம் தூய்மை அடைகிறது; உள்ளம் விரிவாகிறது. ஆன்மா அழகாகிறது; வளமான வாழ்விற்கு வழி வகுக்கிறது; அன்பைப் பரப்புகிறது; பிறரின் உள்ளங்களை ஈர்க்கிறது. உத்தம நபி (ஸல்) அவர்களின் உதட்டில் புன்னகை நிரம்பி இருக்கும். வள்ளல் நபி (ஸல்) அவர்களின் வாழ்நாள் முழுவதும் புன்னகை பொங்கி வழிந்ததைக் கண்ட தோழர் அப்துல்லாஹ் இப்னு ஹாரிஸ் (ரலி) " நபி (ஸல்) அவர்களைவிட அதிகமாக புன்னகைத்தவரை நான் கண்டது இல்லை'' என்று இயம்புவது திர்மிதீ, அஹ்மத் நூல்களில் உள்ளது. 

இன்முகத்துடன் இனியன சொல்லி பணிய பகர்ந்த பாச நபி (ஸல்) அவர்களின் நேச மொழியை நினைவு படுத்துகிறார் அதீபின் ஹாதம் (ரலி) நூல்- புகாரி, முஸ்லிம். பணிவுடன் இனியன இயம்பினாலே நயமான புன்னகைதானே பூக்கும். பூமான் நபி (ஸல்) அவர்கள் புகன்று புன்னகைத்தபடி நந்நயமாய் வாழ்ந்தபடி நாமும் வாழ்வோம். நாளும் நற்செயல் புரிந்து பூரிப்புடன் வாழும் புத்துலகைக் காண்போம்.
- மு.அ. அபுல் அமீன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com