இரவு வழிபாட்டில் இறை நெருக்கம்

மாறி மாறி வரும் இரவு பகலையும் உங்களுக்காக உருவாக்கி அதில் பயனடைய பணித்தான் அல்லாஹ் என்று அறிவிக்கிறது
இரவு வழிபாட்டில் இறை நெருக்கம்

மாறி மாறி வரும் இரவு பகலையும் உங்களுக்காக உருவாக்கி அதில் பயனடைய பணித்தான் அல்லாஹ் என்று அறிவிக்கிறது அருமறை குர்ஆனின் 14- 33 ஆவது வசனம். அதை உறுதிப்படுத்துகிறது 28-73 ஆவது வசனம் " நீங்கள் அமைதி பெறவும் அவனின் அருளைத் தேடவும் நீங்கள் நன்றி செலுத்தவும் இரவு பகலை ஏற்படுத்தியிருப்பது அல்லாஹ்வின் அருளே''. இரவிலும் அல்லாஹ்விற்குச் சிரம் பணிந்து வழிபட்டு இரவில் நெடு நேரம் அவனைத் துதி செய்ய செப்புகிற செம்மறை குர்ஆனின் 76-26 ஆவது வசனப்படி பயன் மிக தரும் இரவு வழிபாட்டில் ஈடுபட வேண்டும். 

இரவில் எழுந்து வழிபட ஏவுகிறது மேவும் குர்ஆனின் 73 -2 ஆவது வசனம். பாதி இரவில் அல்லது அதனினும் குறைவாக என்று அடுத்த  73-3 ஆவது வசனம் கால அளவைக் கணக்கிட  அதிகப்படுத்த விரும்புவோர் விரும்பும் வண்ணம் அதிகமாக தொழ அனுமதிக்கிறது  73-4 ஆவது வசனம். தங்களுடைய ரப்புக்கு (அல்லாவிற்கு)  ஸஜ்தா (தொழுகை) செய்தவர்களாக நின்று இரவைக் கழிப்பார்களே அவர்கள் என்று அருமறை குர்ஆனின் 25-10 ஆவது வசனம் வரையறுப்பவர்கள் பிறர் பாராது இறைவனின் திருப்தியை நாடி இரவில் நின்று தொழுவார்கள். 

இரவில் நின்று தொழுவோரின் முகங்கள் மறுமையிலும் மகிழ்ந்து மலர்ந்து ஒளிரும் என்ற குர்ஆனின் 80- 38, 39 ஆவது வசனங்களுக்கு அறிஞர் ளஹ்ஹாக் (ரஹ்) இரவில் அதிகமாக தொழுவோரின் முகங்கள் மறுமையில் மட்டும் இன்றி இம்மையில் இவ்வுலகிலும் பகலிலும் அழகாக இருக்கும் என்று விளக்கம் அளிக்கிறார். தஹஜ்ஜத் தொழுகை கடமையாக இல்லாவிடினும் நீங்கள் நபிலாக இரவில் ஒரு பாகத்தில் தொழுது வாருங்கள். மகாமே மஹ்முத் என்னும் மிக்க புகழுடைய இடத்தில் உங்கள் இறைவன் உங்களை அமர்த்தலாம் என்ற 17-79 ஆவது வசனம் மறுமையில் பெறும் மகத்தான நன்மையை 
நவில்கிறது. 

தாவூது நபி அவர்களின் மகன் சுலைமான் நபிக்கு "இரவில் தூக்கத்தை அதிகமாக்க வேண்டாம்;  அதிக தூக்கம் கியாமத் (ஊழி) நாளில் ஏழையாக்கி விடும்'' என்று எச்சரித்தார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் முன் இரவில் தூங்கி பின் இரவில் எழுந்து தொழுவார்கள் என்ற அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் அறிவிப்பு  புகாரி, முஸ்லிம் நூல்களில் உள்ளது. நபி (ஸல்) அவர்கள் தொழுததைக் கூறுகிறார் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல்- முஸ்லிம்.

இரவு தொழுகையில் சிறந்தது எது என்று கேட்டபொழுது பாதி இரவில் இதனை நிறைவேற்றுபவர் குறைவு என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் பதிலுரைத்ததைப் பகர்வதும் அபூதர்தா (ரலி) மாநபி (ஸல்)  அவர்கள் மகள் பாத்திமா (ரலி) மருமகன் அலி (ரலி) ஆகிய இருவரையும் இரவில் தொழ சொன்னதும் புகாரி, முஸ்லிம் நூல்களில் பதிவாகி உள்ளன.

இரவில் நபில் தொழுகைகளைத் தொழுபவர் முதலில் சுருக்கமான குர்ஆன் ஆயத்துகள் ஓதி இரண்டு ரக் அத்துகள் தொழ துவங்க வேண்டும். அறிவிப்பவர்- அபூஹுரைரா (ரலி) நூல்- முஸ்லிம். சொன்னபடி சுந்தர நபி (ஸல்) அவர்கள் சுருக்கமாக ஓதி இரு ரக் அத்துகள் தொழ துவங்குவதை அன்னை ஆயிஷா (ரலி) அறிவிப்பதும் முஸ்லிமில் உள்ளது.

நீளமான கிரா அத் ஓதும் தொழுகை சிறந்தது என்று சீர்மிகு நபி (ஸல்) அவர்கள் செப்பியதை ஜாபிர் (ரலி) அறிவிப்பதும் அவ்வாறே அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நீண்ட கிராஅத் ஓதி தொழும்பொழுது அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி) ஹுதைபா (ரலி) பின்னால் நின்று தொழுததும் புகாரி, முஸ்லிம் நூல்களில் பதிவாகியுள்ளன. 

இனிய நபி (ஸல்) அவர்கள்இரு பாதங்களும் வீங்கும்வரை இரவில் நின்று தொழுவதைக் கண்ட அன்னை ஆயிஷா (ரலி) பாவங்கள் இல்லாத நீங்கள் ஏன் இவ்வாறு தொழ வேண்டும் என்று கேட்டபொழுது அல்லாவிற்கு நன்றியுடைய அடியானாக ஆவதற்கு என்று அண்ணல் நபி (ஸல்) பதிலுரைத்ததும் உமர் (ரலி) இரவில் குறைவாக தூங்கி அதிக நேரம் தொழுததை அவர்களின் பெயரன் ஸாலிம் பின் அப்தில்லாஹ் பின் உமர்பின் கத்தாப் (ரலி) கூறுவதும் இரவு தொழ துவங்கி பின் விட்டுவிடாது ஒவ்வொரு இரவும் தொடர்ந்து தொழ தோழமை நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியதை அப்துல்லாஹ் பின் அம்ரிப்னில் ஆஸ் (ரலி) அறிவிப்பதும் புகாரி, முஸ்லிம் நூல்களில் உள்ளன.

இரவு தொழுகைக்கு எழும் கணவன் மனைவியையும் எழுப்பி  இருவரும் இரண்டு ரக்  அத்துகள் தொழுதாலும் அவ்விருவரும் மறுமையில் இறைவனைத் துதி செய்யும் கூட்டத்தில் எழுப்பப்படுவர் - அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) அபூஸயீது (ரலி) நூல் -அபூதாவூத்.

தூக்கம் தடுமாற செய்தால் அவ்வுறக்கம் கலைந்தபின் தொழுவதைச் சிறந்தது என்று செம்மல் நபி (ஸல்) செப்பியதை அபூஹுரைரா (ரலி) கூறுவது முஸ்லிமில் உள்ளது.

இரவில் தஹஜ்ஜத் தொழுகையில் குர்ஆனை நிறுத்தி பொறுமையாக ஓதினால் இறைவன் நெருக்கத்தைப் பெறலாம் எனறு அறிஞர் மாலிக் இப்னு தீனார் இயம்பினார். ஸயீதுப்னுல் முஸய்யப், புளைலுப்னு ரியாள், அபூசுலைமான் தாரானீ, ஹபீபுல் அஜமி, மாலிக் இப்னு தீனார், ராபியத்துல் அதவியா ஆகிய பெரியார்கள் முன்னிரவு தொழுகைக்குச் செய்த உளுவோடு வைகறை தொழுகை வரை இரவு முழுவதும் தொழுவார்கள். இமாம் முஹம்மதுப்னு ஸிரீன் (ரஹ்) அவர்களின் சகோதரி ஹப்ஸா ஓர் இரவு தொழுகையில் பாதி குர்ஆனை ஓதி முடிப்பார்கள். 

ரமலான் மாதத்து இரவு வழிபாடுகளின் நன்மைகள் பலமடங்கு பல்கி பெருகும் பாங்குடையது. அதனால்தான் ரமலானில் இரவில் விடிய விடிய விழித்திருந்து வழிபடுவர்.

உலகம் உறங்கும் இரவில் தொழுது வணங்கி வல்லோன் அல்லாஹ்வை வழிபட்டு விழிப்பின் பயனாய் இறைவனின் நெருக்கத்தைப் பெற்று நேரிய வழியில் சீராய் வாழ்வோம்.
- மு.அ. அபுல் அமீன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com