இருள் நீக்கி அருள்செய்த எரையூர் இருள்நீக்கீஸ்வரர்!

தொண்டை மண்டலத்தில் திருப்பெரும்புதூரிலிருந்து தெற்கே சுமார் 10 கி.மீ தொலைவில் செங்கற்பட்டு செல்லும் வழியில் வல்லக்கோட்டை
இருள் நீக்கி அருள்செய்த எரையூர் இருள்நீக்கீஸ்வரர்!

தொண்டை மண்டலத்தில் திருப்பெரும்புதூரிலிருந்து தெற்கே சுமார் 10 கி.மீ தொலைவில் செங்கற்பட்டு செல்லும் வழியில் வல்லக்கோட்டை முருகன் கோயிலுக்கு முன்பாக கிழக்கே படப்பையை நோக்கிச் செல்லும் சாலையில்  எரையூர் என்ற திருத்தலம் உள்ளது. 

"எரியூர்' என்பது காலப்போக்கில் மருவி தற்பொழுது "எரையூர்' என்று வழங்கப்படுகிறது. 

இங்கு, வினை தீர்க்கும் பாலசந்திர விநாயகர் அருள்பாலிக்கிறார். இது  ஓம் எனும் பிரணவ மந்திரத் திருத்தலமாகும். 

சூரியன் தன் இரு மனைவிகளான உஷா, சாயா எனப்படும் பிரத்யுக்ஷô,  சந்திரன், அகத்தியர் ஆகியோர் சிவபெருமானை தரிசித்து அருள் பெற்றனர். தட்சிணாமூர்த்தி  வேதங்களுக்கு விளக்கம் அளிப்பவராக ஸ்தித தட்சிணாமூர்த்தியாக வீற்றிருக்கிறார். இறைவன் ஒளி வடிவாய்க் காட்சியளித்ததுடன் பஞ்ச பூதங்களும் பஞ்ச தீர்த்தங்களாக அமைந்துள்ளன. மேலும் சப்த மாதர்களும் அருள்பாலிக்கின்றனர். 

ஞானப்பழம் வேண்டி முருகன் மயில்யேறி உலகை வலம் வர, விநாயகர், அம்மையப்பரை வலம் வந்து ஞானப்பழம் பெற்ற பொழுது அங்கிருந்த சந்திரன் சிரித்ததனால்  விநாயகப் பெருமானின் கோபத்திற்கு ஆளாகிச் சந்திரன் ஒளி இழக்கவும்; சண்டாளத்துவம் பெறவும் சாபமிட்டார். சாப நிவர்த்தி வேண்டும் என சந்திரன் வணங்கி வேண்ட, அதற்கு விநாயகப்பெருமான், வருடத்தில் ஒரே ஒரு முறை மட்டும் அதாவது ஆவணி மாதம் பூர்வபட்ச சதுர்த்தியன்று மட்டும் சந்திரன் சண்டாளத்துவம் பெறவேண்டும் என்றும்;  அப்படி அவ்வினைப் பற்றியவர்கள் பஞ்ச பூதத்தீர்த்தங்களில் ஒன்றான மகாதேவ தீர்த்தத்தில் நீராடிப் பாலசந்திர விநாயகப்பெருமானைத் தொழ அவ்வினை நீங்கும்.

அகரமாகிய சூரியன் வலது கண்ணாகவும், உகரமாகிய சந்திரன் இடது கண்ணாகவும், ஒன்றாக சேர்ந்து வழிபட்டு மகரமாகிய அக்னியை சோதிவடிவான சிவபெருமானைத் தரிசிப்பதால் இத்தலமே ஓம் என்ற பிரணவத்தலமாக அமைந்துள்ளது.

அகத்தியர் சிவபெருமானின் ஆணைக்கு இணங்கித் தென்திசை நோக்கிப் பயணம் செய்து உலகைச் சமன் செய்து, பின்னர் தென்னாடுடைய சிவத்தலங்களைப் பூஜித்தவாறு தொண்டை  மண்டலத்தில் திருப்பெரும்புதூருக்குத் தெற்கே சுமார் 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ள எரையூர் வந்தடைந்தார். இங்கு கடம்ப மரங்களின் நடுவே அமைந்திருந்த சிவலிங்கத்தைப் பூஜித்தார். எரையூரைச் சுற்றிலும் சூரியனின் வெப்பத்தால் நீர் அற்று நிலம், வெளி, ஆகாயம், மண் அனைத்தும் வெப்பத்தால் தகித்ததைக் கண்ட அகத்தியர் வெம்மையைக் குறைக்குமாறு சூரியனை வேண்டினார்.

இருள்நீக்கும் சூரியனும் சந்திரனும் ஒன்றாக இணைந்து அகத்தியர் முன்தோன்றியதனால் அண்டம் இருளில் மூழ்கியது. இருவரும் ஒன்றாக இணைவதுதான் அமாவாசை, இருள் வடிவம்! அகத்தியர், பஞ்சபூதங்கள், சூரியன், சந்திரன் அனைவரும் சிவபெருமானை துதிக்க, ஜோதிவடிவமாக இறைவன் காட்சியளித்து இருள் நீக்கினார்.  இவ்வாலய தலமரம் கடம்பமரம்.   

சிவாகமங்கள், சந்திரன், சூரிய மண்டத்தில் இரண்டாவதாக உள்ள கிரகமாக ஒளிர்கிறது என்றும்;  சிவபெருமானின் அர்த்த மூர்த்த வடிவங்களில் சந்திரன் ஒன்று என்றும்; சந்திரன் சிவபிரானின் இடக்கண்ணாக விளங்கும் சிறப்பையும் எய்தினார் எனவும்;  முழுநிலவாக இருந்த சந்திரனை, படைப்பின் காரணமாக  தேய்ந்து வளர்ந்து, வளர்ந்து தேயும் தன்மையை சிவபெருமான் அருளினார் என்றும் இதன் காரணமாக தன் சடையில் வளர்பிறை சந்திரனை சூடிக் கொண்டார் என்றும் கூறுகின்றன. இத்திருத்தலத்தில் மூன்றாம் பிறை அன்று சந்திரன் இறைவனைத்தொழுது வளரும் தன்மைப் பெற்றார்.

புற இருளை நீக்கிய சிவப்பரம்பொருள், உயிர்கள் ஐம்புலன்களாகிய மாய வலையில் சிக்கி இறைவனை அறியாது துன்புறுகையில், இறைவன் அருட்குருவாக வந்து இருளை நீக்க  ஸ்தித தட்சிணாமூர்த்தியாக வேதங்களுக்கு விளக்கம் அருளும் திருக்கோலத்தில் எழுந்தருளியிருப்பது தமிழகத்தில் வேறு எங்கும் தரிசிக்க இயலாத திருக்கோல மாகும்.   

அகத்தியர், காஞ்சியில் ஏகம்பநாதனையும் மற்றும் உள்ள சிவாலயங்களையும் தரிசித்து, காமாட்சி அம்மனை தொழுது வணங்கி, காஞ்சியில் எந்த சிவாலயத்திலும் அன்னை சந்நிதி இல்லையே என்ற ஏக்கத்துடன் எரையூர் திருத்தலத்தை அடைந்து இறைவனை வேண்ட, அகத்தியர் உள்ளத்தில் இன்பம் பொங்க இறைவன் இருள்நீக்கீசுவரர், அன்னை இன்பாம்பிகையுடன் காட்சியளித்தார். 

காஞ்சி பெரியவரின் தாய் பிறந்த ஊர் இந்த இருள்நீக்கி ஆகும். 

இத்திருக்கோயிலில் கருவறை அதிட்டானத்தின் அமைந்துள்ள குமுதப்பட்டையில் அகத்தீசுவர நயினார் என்றும் நித்தியம் தீபம் ஏற்றுவதற்கு 36 மாடுகளும், 40 ஆடுகள் தானம் வழங்கிய கல்வெட்டும் காணப்படுகிறது. இது, கி.பி. எட்டாம் நூற்றாண்டு சோழர்கால திருக்கோயில் ஆகும். 
- சிவதாசன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com