காளியின் கட்டளை!

தன்னுடைய கயிலை யாத்திரையை முடித்துக்கொண்டு திரும்பி வருகையில் மேற்குவங்கத்தில் கொல்கத்தாவில் உள்ள தட்சிணேஸ்வர காளி கோயில் சென்று வழிபடவேண்டும் என்னும்
காளியின் கட்டளை!

தன்னுடைய கயிலை யாத்திரையை முடித்துக்கொண்டு திரும்பி வருகையில் மேற்குவங்கத்தில் கொல்கத்தாவில் உள்ள தட்சிணேஸ்வர காளி கோயில் சென்று வழிபடவேண்டும் என்னும் அவா அந்த அருளாளருக்கு ஏற்பட்டது. அன்னையின் சந்நிதியில் அமர்ந்து அவள் அருள்மழையில் தன்னை மறந்து கண்களை மூடி தியானம் செய்த அவருக்கு அன்னையிடமிருந்து ஆணை ஒன்று பிறந்தது. "உக்ரமாக உள்ள என்னை சாந்தப்படுத்தி உன் அருகிலேயே வைத்துக்கொள்" என்பதே அந்த கட்டளை. திடுக்கிட்டு கண்ணை திறந்து அவர் அந்த கட்டளைக்கு அடிபணிந்து செயல் பட ஆரம்பித்தார். அங்குள்ள பெரியோர்களை ஆலோசித்து தகுந்த சில்பியைக் கொண்டு ஒரே கல்லில் பதினெட்டு (18) கரங்களுடன் அஷ்டாதசபுஜ மஹாலட்சுமி துர்காதேவி சிலையையும், 32 தேவதைகளின் சாந்நிதியத்துடன் திகழும் மகாமேரு ஒன்றையும் வடிக்க ஏற்பாடு செய்தார்.

ஓர் உத்ராட நட்சத்திர தினத்தன்று அந்த சிலையை காளி சந்நிதிக்கு அருகிலேயே ஆவாஹணம் செய்தார். காளியை சாந்தப்படுத்திய அந்த அம்பிகையே தற்போது ஸ்ரீ மஹாலட்சுமி துர்காதேவி என்ற திருநாமம் கொண்டு மயிலாடுதுறை அருகில் தருமபுரத்தில் ஸ்ரீதருமபுரீசுவரர் திருக்கோயில் வளாகத்தில் தனிக்கோயில் கொண்டு அருளாட்சி புரிகின்றாள் என்ற தகவல் தெரிவிக்கப்படுகின்றது. காளியம்மை ஆட்கொண்ட அந்த அருளாளர் திருக்கயிலாய பரம்பரைத் தருமையாதீனம் 25 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் ஆவார். அம்பிகை இங்கு கோயில் கொண்டதும் ஓர் உத்ராட நட்சத்திரத்தினத்தன்றே (1953 இல்) என்பதும் ஒரு சிறப்பு.

ரூபலாவண்யம்: கிழக்குப் பார்த்த சந்நிதியில் பதினெட்டு திருக்கரங்களுடன் மகிஷத்தின் தலை மீதுள்ள தாமரைப் பூவில் சுமார் 8 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் தனது வலது கரத்தில், ஜபமாலை, தாமரைப்பூ, பாணம், கத்தி, வஜ்ராயுதம், கதை, சக்கரம், திரிசூலம், கோடாரி முதலிய ஆயுதங்களையும் இடது கரத்தில் மேலிருந்து கீழாக சங்கம், மணி, பாசம், சக்தி, தண்டம், கேடயம், வில், பாணபாத்ரம், கமண்டலம் ஆகியவைகளையும் தாங்கி புன்னகை தவழும் வதனத்துடன் சாந்த ஸ்வரூபியாக, துர்கா லட்சுமி சரஸ்வதி ஆகிய முப்பெருந்தேவியின் மொத்தவடிவமாக காட்சியளிக்கும் அன்னையின் தோற்றத்தை வர்ணிக்க வார்த்தைகள் போதாது. நாம் அவளை தரிசிப்பது என்பது நமது கொடுப்பினையே. அம்பிகையின் முன் மகாமேரு பிரதிஷ்டையாகியுள்ளது.

பரிகாரத்தலம்: அம்பிகையிடம் அஷ்டலஷ்மியின் வடிவமும் அமைந்துள்ளதால், இவளை தரிசிப்பவர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் கிட்டும் என சொல்லப்படுகின்றது. மகர, தனுசு நட்சத்திரக்காரர்கள் பரிகாரம் வேண்டி இந்த துர்க்கையை வழிபடுதலும், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் அலை கடலென கூடுவதும் இவ்வாலயத்தின் சிறப்பு.

உற்சவாதி முறைகள்: தினசரி அபிஷேகம், பூஜைகள் உண்டு. காலை 7.30 மணியிலிருந்து தரிசனம் செய்யலாம். பௌர்ணமி நாள்களில் மாலைவேளைகளிலும் அபிஷேகம் உண்டு. நவராத்திரி தினங்கள் சிறப்பு வழிபாடாக "சத சண்டி வேள்விவிழா' என்ற பெயரிலும் கல்வி நிலையங்களின் கலைமகள் விழா என்ற பெயரிலும் நடத்தப்படுகின்றது. அவ்வமயம், சதசண்டி வேள்வி, சுவாஸினி, குமாரி வடுகபூஜை, சதுர்வேத பாராயணம், துர்கா சூக்த பாராயணம், திருமுறை, அபிராமி அந்தாதி பாராயணங்கள், ஆன்மிக சொற்பொழிவுகள், லட்சார்ச்சனை, மேருவிற்கு சகஸ்ரநாம அர்ச்சனை, அம்பிகைக்கு விதவிதமான அலங்காரங்கள் போன்ற வைபவங்கள் நடைபெற்று யாககலசாபிஷேகத்துடன் நிறைவு பெறும். அவ்வகையில் இவ்வாண்டு விழா, செப்டம்பர் 21 தொடங்கி 30 வரை நடைபெற உள்ளது. காவிரி புஷ்கரவிழாவிற்கு மயிலாடுதுறை செல்லும் அன்பர்கள், தரிசிக்க வேண்டிய ஆலயங்களின் வரிசையில் இந்த துர்க்கை ஆலயத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.

தொடர்புக்கு: தருமபுரம் ஆதீனம்: 04364-223207.

- எஸ்.வெங்கட்ராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com