அருள் தரும் பச்சைக்கல் பாபா!

மனிதப்பிறவி எடுத்து நம்மை வழி நடத்திய புனிதர்களில் ஒருவர் ஸ்ரீ சமர்த்த சத்குரு சாயிபாபா.  சமாதி நிலையிலும் அவரது அருளாட்சி தொடர்கிறது.
அருள் தரும் பச்சைக்கல் பாபா!

மனிதப்பிறவி எடுத்து நம்மை வழி நடத்திய புனிதர்களில் ஒருவர் ஸ்ரீ சமர்த்த சத்குரு சாயிபாபா.  சமாதி நிலையிலும் அவரது அருளாட்சி தொடர்கிறது. சென்னை தாம்பரம் அருகில் ஊரப்பாக்கம் ரயில் நிலையம் மற்றும் அங்குள்ள புதிய மேம்பாலத்திலிருந்து ஆதனூர் மெயின்ரோட் செல்லும் பாதையில் ஸ்ரீ வர்த்தமான் நகரில் ஒரு புதிய சாய் மந்திர் உருவாகி வருகின்றது.  

இங்கு பிரதிஷ்டையாக உள்ள சாயிநாதரின் திருஉருவம் முழுவதும் பச்சைக் கல்லால் (இத்தாலியன் மார்பிள்) ஆனது.  இக்காரணம் பொருட்டே இந்த மந்திர் "மரகத சாயிபாபா ஆலயம்' என சிலாகித்து அழைக்கப்பட உள்ளது.  மகானுடன் துவாரகாமாயி, மகாமேரு, மீனாட்சியம்மை, விநாயகர், முருகர் சந்நிதிகளும் அமைய உள்ளன.  ஆலயம் வருவதற்கு முன்னதாக தலவிருட்சமாக மகானுக்குப் பிரியமான வேப்பமரம் பெரியதாக வளர்ந்துள்ளதும் அருகிலேயே ஓர் அம்மன் ஆலயமும், பெரிய பாம்புப்புற்று இருப்பதும் விசேஷமாகக் கருதப்படுகின்றது.

மயிலை சாயிபாபா ஆலய வளர்ச்சிக்கு உதவி செய்தவர்களில் ஒருவராகத் திகழ்ந்த புதுக்கோட்டை பூஜ்யஸ்ரீ கோபால கிருஷ்ண பாகவதரின் பேரன் லட்சுமிநரசிம்மன் என்ற சாயிபக்தர் கடந்த 2010 -ஆம் ஆண்டு ஷீரடிக்குச் சென்ற தருணத்தில் ஒரு கடையில் இந்தப் பச்சைக்கல் பாபா விக்ரகத்தைக் கண்டு, வாங்கி கொண்டு சென்னை வந்துள்ளார்.  அவரது இல்லத்தில் பாபாவைத் தரிசித்த பலர் கோயிலில் அமர வேண்டிய விக்ரகம் அது என அறிவுறுத்தினர்.

அதன்படி, ஆலயம் அமைவதற்கான ஏற்பாடுகள் துவங்கின.  சாயி பக்தர்கள் உதவியுடன் பணிகள் சிறப்பாக நடைபெற "சாயி பிரசார் சேவா டிரஸ்ட்' என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகின்றது.  

மகானின் திவ்ய திருமேனி விக்ரகம் பொதுமக்கள் தரிசிக்க ஏதுவாக மேற்கு மாம்பலம், பாபு ராஜேந்திர பிரசாத் 2 ஆவது தெருவில் ஒரு "தரிசன மையம்' ஏற்படுத்தப்பட்டுள்ளது.  நித்ய பூஜை ஆராதனைகள், நவராத்திரி உட்பட முக்கிய விசேஷ தினங்கள், மகாமேரு நவாவர்ண பூஜை, பாராயணங்கள், சங்கல்ப பஜனைகள் போன்ற வைபவங்கள் இங்கு நடைபெற்று வருகின்றன.  

சீரடியில் மகான் சமாதி நிலையை அடைந்தது 1918- ஆம் வருடம் விஜயதசமியன்று ஆகும்.  அதனை மனதிற்கொண்டு இவ்வாண்டு, செப்டம்பர்-30 ஆம் தேதி, சனிக்கிழமை விஜயதசமி நன்னாள் சமாதி நூற்றாண்டு விழா ஆரம்ப தினமாகக் கொண்டாடப்பட உள்ளது. பக்தர்கள் இவ்வாலய திருப்பணியில் பங்கு கொண்டு பச்சைக்கல் பாபாவின் திருவருளைப் பெறலாம்.
தொடர்புக்கு: 098403 25245 /044-2371 2195.
- எஸ். வெங்கட்ராமன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com