உலக அமைதிக்கு அடித்தளம் ஹஜ்

ஆதம் நபி படைக்கப்படுவதற்கு முன்னர் உருவான உருவான கஃபாவை இப்ராஹீம் நபி புதுப்பித்து கட்டி முடித்தவுடன் மக்களை ஹஜ்ஜுக்கு வருமாறு அழைக்க கட்டளை இட்டதை இயம்புகிறது
உலக அமைதிக்கு அடித்தளம் ஹஜ்

ஆதம் நபி படைக்கப்படுவதற்கு முன்னர் உருவான உருவான கஃபாவை இப்ராஹீம் நபி புதுப்பித்து கட்டி முடித்தவுடன் மக்களை ஹஜ்ஜுக்கு வருமாறு அழைக்க கட்டளை இட்டதை இயம்புகிறது இறைமறை குர்ஆனின் 22-27 ஆவது வசனம்.
 "ஹஜ்ஜுக்காக மக்களுக்கு நீங்கள் அறிவியுங்கள். கால்நடையாகவும் மிக தொலைவான ஒவ்வொரு பாதையிலிருந்தும் மெலிந்த ஒட்டகம் ஒவ்வொன்றின் மீதும் உங்களிடம் வருவார்கள். தொலைவிலிருந்து நீண்ட பயணம் செய்து நடப்பதால் மெலிந்து போன ஒட்டகம் என்பதை இவ்வசனத்தில் வரும் குல்லிளாமிர் என்ற அரபி சொல் குறிக்கிறது. இப்ராஹீம் நபி ஹஜ்ஜுக்கு வரும்படி மக்களை அழைக்க அறிவுறுத்தும் அல்லாஹ் அந்த அழைப்பினை ஏற்று மக்கள் நடந்தும் தொலைவிலிருந்து வாகனங்களில் வருவதையும் தெரிவிக்கிறது இவ்வசனம். இன்றும் உலகின் எல்லா நாடுகளிலிருந்தும் எண்ணற்ற மக்கள் கோடி கோடியாக வந்து கூடி அகில உலக அமைதிக்கு அடித்தளம் அமைக்கும் அற்புதம் அருமை குர்ஆனை மெய்ப்பிக்கும் பொற்புடைய நிகழ்ச்சி.
 இப்ராஹீம் நபி என் குரல் எட்டாதே என்றார்கள். அறிவிப்பது உங்கள் கடமை. எட்ட செய்வது என் பொறுப்பு என்றான் இறைவன். இப்ராஹீம் நபி ஸபா மலையின் மீது ஏறி நின்று இரு கை விரல்களையும் இரு காதுகளில் வைத்துக் கொண்டு நான்கு திசைகளிலும் திரும்பி, ""மக்களே அறிந்து கொள்ளுங்கள். உங்கள் இறைவன் ஓர் ஆலயத்தைப் புதுப்பித்து அப்பழைமையான ஆலயத்திற்கு வருமாறு உங்களுக்கு உத்தரவு இட்டுள்ளான். அல்லாஹ்வின் ஆணையை ஏற்று அவனின் சங்கையான ஆலயத்திற்கு வந்து ஹஜ் செய்யுங்கள். ஹஜ் செய்த பயனாய் நயமிகு நாயகன் அல்லாஹ் உங்களுக்குச் சொர்க்கத்தை அளிப்பான். நரக நெருப்பிலிருந்து உங்களுக்கு விடுதலை வழங்குவான்'' என்று முழங்கினார்கள். இப்ராஹீம் நபியும் இஸ்மாயில் நபியும் நடந்தே ஹஜ்ஜுக்குச் சென்றனர். ஹரமை நெருங்கியதும் காலணிகளைக் கழட்டி விடுவர் என்று முஜாஹிது (ரஹ்) அறிவிக்கிறார்.
 பூர்வீக ஆலயத்தைச் சுற்றி தவாப் செய்ய கட்டளையிடுகிறது 22-29 ஆவது வசனம். அல்லாஹ் மக்கமா நகரைக் கண்ணியப்படுத்தி இருப்பதை 27-91 ஆவது வசனம் கூறுகிறது. ஹரம் சரீபை அபயம் உள்ள இடமாக ஆக்கியிருப்பதை அறிவிக்கிறது 29-67 ஆவது வசனம். மக்காவில் மரம், செடி, கொடிகளை வெட்டக்கூடாது. குருவிகள் பூச்சிகளை வேட்டையாடக் கூடாது. இந்த அபய நகருக்குள் புகுந்த குற்றவாளியைப் பிடித்து இந்நகருக்கு வெளியில் கொண்டு சென்று தண்டிக்க வேண்டும்.
 வானவர் ஜிப்ரயீல் சுட்டிக் காட்டிய ஆறு இடங்களில் இப்ராஹீம் நபி அடையாள கல் நட்ட பகுதியே புனித பகுதி. அதன்பின் மக்காவை ஹிஜ்ரி 8- இல் வெற்றி கொண்ட மாநபி (ஸல்) அவர்கள் தோழர் தமீம் பின் அஸதுல் குஜாயீ (ரலி) அவர்களிடம் இவ்விடங்களைக் குறித்து கூறி மீண்டும் அடையாளக் கல் நட்ட இடங்களுக்கு அனுப்பினார்கள். அவை, தன்ஈம் 7.5 கி.மீ., நக்லா 13 கி.மீ., அவாத் லபன் 16 கி.மீ., ஜிஃரானா 22 கி.மீ., ஹுதைபியா 22 கி.மீ., அரபா 22 கி.மீ. இந்த ஆறு எல்லைகளுக்கு உட்பட்டதே மக்கா. குர்ஆனில் குவலய மக்கள்கூடும் மக்காவிற்குப் பதினொரு சிறப்பு பெயர்கள் பதியப்பட்டுள்ளன.
 ஈசா நபியை பின்பற்றிய யேமன் நாட்டரசர் அஸ் அதுல் ஹிம்யரீ வேதங்களில் குறிப்பிடப்படும் அஹ்மது என்று பெயர் பூண்ட ஒரு தூதர் விரைவில் வருவார் என்று கூறுவார். இவரே முதன்முதலில் கஃபாவிற்குக் கிலாம் என்னும் போர்வையை போர்த்தியவர்.
 பெற்றோரிடம் அனுமதி பெற்று ஹஜ்ஜுக்குச் செல்வது சிறப்பு. உலகின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்காவிற்கு வரும் ஹஜ் பயணிகள் எட்டாம் நாள் மினாவிற்குச் சென்று பகலிலும் இரவிலும் அங்கு தங்க வேண்டும். ஒன்பதாம் நாள் காலையில் சுபுஹு (வைகறை) தொழுகை தொழுதபின் அரபா சென்று அந்தி வரை தங்கி அயராது அல்லாஹ்வைத் துதிக்க வேண்டும். தொய்வில்லாது இங்கு செய்யும் துதி ஹஜ் கடமைகளில் கட்டாயமும் முக்கியத்துவமும் உடையது. நோயுற்றவர்களையும் அனைத்து மருத்துவ வசதிகளை உடைய அவசர ஊர்தி (ஆம்புலன்ஸ்) களில் படுக்க வைத்து அரபாவில் ஊர்திகளை நிற்க வைத்து இருப்பதை நான் நேரில் பார்த்தேன். பத்தாம் இரவு முஜ்தலிபாவில் சுபுஹு வரை தங்கி வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு சைத்தானை விரட்ட எறியும் சிறு கற்களைப் பொறுக்க வேண்டும். மினாவில் மீண்டும் 10,11,12 ஆகிய நாள்களில் தங்கி சங்கையுடன் சகல வணக்கங்களையும் புரிந்து சைத்தானுக்குக் கல் எறிந்து மக்கா திரும்பி தவாப் ஸயீ செய்து ஹஜ்ஜை முடிக்க வேண்டும்.
 உலக இஸ்லாமியர்கள் ஒன்றுகூடி ஒருமித்து அன்றும் இன்றும் என்றும் ஒரே சீருடையில் பேருலகாளும் பேராளன் அல்லாஹ்வை வணங்கி வழிபடும் பொழுது உருவாகும் உலக சகோதரத்துவம் உலகம் முழுவதும் நிலவி உலகம் அமைதியாய் ஆக்க வழியில் முன்னேறும். அல்லாஹ் அருள்புரிவானாக!
 - மு.அ. அபுல் அமீன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com