பொருநை போற்றுதும்! 2- டாக்டர் சுதா சேஷய்யன்

தென்னாட்டுத் தீர்த்தங்களின் பெருமையை, நிமிச் சக்கரவர்த்திக்கு எடுத்துக் கூறுகிறார் கரபாஜன ரிஷி.
பொருநை போற்றுதும்! 2- டாக்டர் சுதா சேஷய்யன்

தென்னாட்டுத் தீர்த்தங்களின் பெருமையை, நிமிச் சக்கரவர்த்திக்கு எடுத்துக் கூறுகிறார் கரபாஜன ரிஷி.
 அரசே, முந்தைய யுகங்களின் பிறப்பெடுத்த பெருமக்கள் பலரும், கலியுகத்திலும் பிறப்பெடுக்கவேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். காரணம், பிற யுகங்களைக் காட்டிலும் கலியுகத்திலேயே கடவுள் பக்தர்கள் அதிகம் தோன்றுகின்றனர். குறிப்பாக, தாமிரவருணி, க்ருதமாலா, பயஸ்வினி, காவிரி, மஹாநதி போன்ற நதிகள் பாயும் திராவிடப் பகுதிகளில் (தோன்றுகின்றனர்). இந்த நதிகளின் நீரைப் பருகுபவர்கள், மனத் தூய்மை பெற்று, பகவான் வாஸýதேவனிடம் பக்தி பூணுவார்கள் (ஸ்ரீமத் பாகவதம், ஏகாதச ஸ்கந்த: பஞ்சம அத்யாய, ஸ்லோகம் 38, 39, 40).
 திருநெல்வேலியில் கோயில் கொண்டுள்ள காந்திமதி அன்னையைப் போற்றுகிறார் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீக்ஷிதர்.
 சுத்த தாம்ரபர்ணீ தட ஸ்திதாம் பரிசுத்தமான தாமிரவருணியின் தடத்தில் நிலை கொண்டவளே (ஸ்ரீ காந்திமதீம் சங்கர யுவதீம் என்னும் தேசி சிம்ஹாரவ ராகக் கீர்த்தனை)
 தீக்ஷிதரே, "கரையை உடைத்துக் கொண்டு பாயும் தாமிரவருணித் தீரத்தில் கோயில்' கொண்டவராகக் கல்லிடைக்குறிச்சி ஸ்ரீ லக்ஷ்மி வராகரைப் பாடுகிறார்.
 பங்க ஹர தாம்ரபர்ணீ தீரஸ்தம் (ஸ்ரீ லக்ஷ்மீவராஹம் பஜேஹம் என்னும் ஆபோகி ராகக் கீர்த்தனை)
 அன்று தொடங்கி இன்றுவரை, புனிதப் புனலாகத் திகழும் தாமிரவருணிக் கரைக்கு மேலும் புனிதம் சேர்த்த மகான்கள் பலருண்டு.
 தாமிரவருணி தந்த வைணவ தரிசனம்: "வேதம் தமிழ் செய்த மாறன்' என்று போற்றபெறுபவரும் ஆழ்வாராதிகளில் தலையாயவராகக் கருதப்படுபவருமான நம்மாழ்வார், தாமிரவருணிக் கரையில், திருக்குருகூரில் திருவவதாரம் செய்தார். இந்த மகானின் பெருமையை விளக்கும் வகையில், ஆழ்வார் திருநகரி என்றே இவ்வூர் திகழ்கிறது.
 புளியமரத்துப் பொந்தில் ஊன் உறக்கமும் பேச்சு அசைவுகளும் இல்லாமல், யோகத்தில் அமர்ந்திருந்த நம்மாழ்வாரின் பேரொளியால் ஈர்க்கப்பட்டு ஆழ்வார் திருநகரியை அடைந்தார் மதுரகவி. நம்மாழ்வாரோடு தங்கிக் கைங்கர்யத்தில் இவர் ஈடுபட்டிருந்த காலத்தில், ஆழ்வார், திருநாடு அலங்கரிக்கும் சமயம் நெருங்கியது. கண்ணீரோடு நின்ற சீடர் மதுரகவியிடம், தாமிரவருணியில் நீரெடுத்து, அதனை அடுப்பில் காய்ச்சும்படிப் பணித்தாராம். அவ்வாறே மதுரகவியும் செய்ய......இதுவரை பார்த்தறியாத ஓர் உருவச்சிலை தோன்றியது. ஆழ்வாரிடம் அச்சிலையைக் காட்ட, அது "பவிஷ்யதாசார்யர்' (வருங்கால ஆசான்) என்று கூறினார். பிற்காலங்களில், ஸ்ரீ வைணவத்திற்குப் பெரும்பாதையிட்ட எம்பெருமானார் ராமானுஜரின் திருவுருவமே அது! மீண்டும் தாமிரவருணி நீரெடுத்துக் காய்ச்சுவதற்கு ஆணையிட... இம்முறை, நம்மாழ்வாரின் திருவுருவச் சிலை உருவானது. அதனையே தமது வடிவமாகக் கொள்ளும்படிக் கூறிவிட்டு, நம்மாழ்வார் திருநாடு அலங்கரித்தார் எனப்படுகிறது.
 நம்மாழ்வார் மதுரகவி ஆழ்வார் என்னும் சிஷ்ய பரம்பரையின் சிறப்புக்கும், ஸ்ரீ ராமானுஜரை அடையாளம் காட்டுவதற்கும் தாமிரவருணித் தண்ணீரே வழி கோலியது எனலாம்.
 பத்தமடை கொடுத்த பேராசான்: தாமிரவருணியிலிருந்து கிளைபிரிந்து ஓடிவரும் வாய்க்காலால் வளமை பெற்று, பச்சைக் கம்பளமாகப் பளபளத்த ஊர் பத்தமடை. பத்தமடை வெங்கு ஐயருக்கும் அவருடைய தர்மபத்தினி பார்வதி அம்மாளுக்கும் 1887 - ஆம் ஆண்டு செப்டம்பர் 8 -ஆம் நாள், பரணித் திருநட்சத்திரத்தில் பிறந்த செல்வத் திருக்குமாரன், ஆன்மிக உலகின் பேராசானாக அருள்புரிந்தார். அப்பைய தீக்ஷிதரின் வம்சாவளியில், அவருடைய தம்பி மகனான நீலகண்ட தீக்ஷிதரின் பரம்பரையில் வந்தது இக்குடும்பம். குழந்தைக்குப் பெற்றோர்கள் "குப்புசுவாமி' என்று பெயர் சூட்டினர். வெங்கு ஐயர், எட்டயபுரத்திற்குக் குடியேற, முத்துசுவாமி தீக்ஷிதரின் பெயரால் இவ்வூரில் விளங்கும் தீக்ஷிதர் தெருவில், கல்மண்டபம் என்னும் வீட்டில், சிறுவன்
 குப்புசுவாமியின் வாசம்.
 ராஜா உயர்நிலைப் பள்ளியில் பயில்கிற காலத்தில், தேகப் பயிற்சியில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த குப்புசுவாமிக்கு, உடற்பயிற்சி ஆசிரியராக விளங்கியவர் சாம்பசிவ ஐயர். இதே சாம்பசிவ ஐயரின் மருமகனோடு சேர்ந்து சிலம்பப் பயிற்சியும் பெற்றான் குப்புசுவாமி. அந்த மருமகன் யார் தெரியுமா? அதே தீக்ஷிதர் தெருவில் வசித்து வந்த சுப்பிரமணியம். ஆமாம், மகாகவி பாரதியார் என்றறியப்பெறுகிற சுப்பிரமணிய பாரதியார்தாம்!
 மக்கள் பணியே மகேசன் பணி என்னும் எண்ணம் சிறு வயது முதலே நெஞ்சத்தில் நிலைகொண்டதால், 1905 -ஆம் ஆண்டு, இண்டர்மீடியட் தேர்வில் வெற்றிபெற்ற கையோடு, தஞ்சாவூர் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் மருத்துவப் பள்ளியில் சேர்ந்தான் குப்புசுவாமி. சப் அஸிஸ்டண்ட் சர்ஜன் படிப்புக்குப் (உதவி மருத்துவராகப் பணியாற்றுவதற்கான லைசென்ûஸப் பெற்றுத் தரும் கல்வி) பயின்றுகொண்டிருந்த நிலையிலேயே தந்தையார் காலமாகிவிட, குடும்பச் சுமைகள் குப்புசுவாமியின் முதுகில் ஏறிக் கொண்டன. இருப்பினும், நலவாழ்வு மற்றும் பொதுச் சுகாதாரப் பணிகளைப் புறந்தள்ளிவிட மனமில்லை. மக்களுக்கு நோய்த் தீர்வு தந்தால் மட்டும் போதாது; வியாதிகளே வராமல் தடுக்கவேண்டும்; ஆரோக்கியமான பழக்க வழக்கங்களைச் சமுதாயத்தில் உருவாக்கவேண்டும் என்றெல்லாம் கருதிய குப்புசுவாமியின் அவா, "அம்ப்ரோசியா' என்னும் மருத்துவப் பத்திரிகையாக மலர்ந்தது. "அம்ப்ரோசியா' என்னும் கிரேக்க மொழிச் சொல்லுக்கு நேரடியான வடமொழிச் சொல் "அம்ருதம்' எனலாம். இரண்டுக்குமே "மரணமின்மை' என்றுதான் பொருள். 32 பக்கங்களோடு 1909- இல் முதன்முதலில் தொடங்கப்பெற்ற அம்ப்ரோசியா, பல்வேறு மருத்துவ அறிஞர்களின் கட்டுரைகளைத் தாங்கியபடி, மக்களுக்கு விழிப்புணர்வு தரும் வகையில், 4 ஆண்டுகளுக்கு வெளிவந்தது. தென்னிந்தியாவின் நலவாழ்வு-சுகாதார வரலாற்றில், இப்படியொரு விழிப்புணர்வுப் பத்திரிகையை முதன்முதலில் நடத்தியவர் குப்புசுவாமியே ஆவார்.
 சிங்கப்பூரிலும் மலாயாவிலும் மருத்துவப் பணிபுரிந்த நிலையிலும், ஏராளமாகச் செல்வம் கொட்டிய நேரத்திலும், நோயாளிகள் பலரை வாஞ்சையோடு கவனித்த காலத்திலும், பஜனை, சங்கீர்த்தனம், வேதாந்தம் ஆகியவற்றில்தாம் குப்புசுவாமிக்கு ஆத்மார்த்த ஈடுபாடு இருந்தது. தம்மிடம் சேர்ந்த பொருளையும் பணத்தையும் அள்ளி அள்ளிக் கொடுத்தார். இறை சிந்தனையில் மூழ்கிய உள்ளம், இறைவனை ஆத்மார்த்தமாக உணரவேண்டும் என்று விழைந்தது. அனைத்தையும் விட்டுவிட்டு இந்தியா திரும்பிய குப்புசுவாமி, வாரணாசிக்குச் சென்றார். தொடர்ந்து, கையில் பைசாக் காசுகூட இல்லாமல், முழுமையாகத் தம்மைக் கடவுளின் கரங்களில் கொடுத்துவிட்டு, "யாரேனும் தந்தால் சாப்பாடு, இடமேதும் கிடைத்தால் உறக்கம்' என்ற நிலையில், பரிவ்ராஜகராக, கால்நடையாகப் பற்பல இடங்களிலும் சுற்றித் திரிந்தார்.
 நடந்து நடந்தே ரிஷிகேசத்தை அடைந்துவிட்டார் குப்புசுவாமி. அங்கிருந்த வயது முதிர்ந்த துறவி, சுவாமி விசுவானந்தர், குப்புசுவாமியை உற்று நோக்கினார்; தமது காலில் விழுந்த அந்த இளைஞரின் தீட்சண்யத்தை உணர்ந்தார். "பிûக்ஷகூடக் கிடையாது' என்று விரட்டியடிக்கப்பட்ட குப்புசுவாமியை மெல்ல அரவணைத்து, சந்நியாச தீûக்ஷயளித்து, தீக்ஷôநாமமும் சூட்டினார். 1924 - ஆம் ஆண்டு, ஜூன் 1- ஆம் தேதி, அதுவரை பத்தமடை குப்புசுவாமியாக இருந்த மருத்துவர், சுவாமி சிவானந்த சரஸ்வதி என்னும் மகானாக மாறினார்.
 அச்சமில்லா ஆன்மவீரராக, அனைவருக்கும் அடைக்கலம் அளித்த அண்ணலாக, சமரசச் சிந்தனையைப் பரவச் செய்த சாதனையாளராகத் துலங்கியவர் சுவாமி சிவானந்தர். தம்முடைய கம்பளத்தைக் கடித்துப் பாழ்படுத்திய எலிக்கும் அதன் குஞ்சுகளுக்கும்கூட பாதுகாப்புக் கொடுத்து, எதிர்பாராதவிதமாக அவை இறந்துபோனபோது, அவற்றுக்காக மகா மிருத்யுஞ்சய மஹா ஹோமம் செய்து அவற்றின் ஆன்மசாந்திக்கு வழிகோலியவர்.
 ஆற்றங்கரைக் காட்டின் அவதார புருஷர்: தாமிரவருணிக் கரை சித்த மகாபுருஷர்களில் ஒருவர், கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள்.
 தாமிரவருணித் தீரத்தின் ஊர்களில் ஓன்று, திருநெல்வேலிக்குச் சுமார் 20 கி.மீ. வடக்கேயுள்ள கங்கைகொண்டான். இந்த ஊரில், யஜ்ஞேச்வர சிவன் என்னும் ஞானிக்கும் அவர்தம் திருவாட்டியாம் காமாட்சி அம்மாளுக்கும், 1831- ஆம் ஆண்டு, டிசம்பர் 3 -ஆம் தேதி (கார்த்திகை 20) அனுஷ நட்சத்திர அமாவாசைத் திருநாளில், இரண்டாவது மகனாகத் தோன்றியவர் சுந்தரேசன். இந்தக் குடும்பமும் அப்பைய தீக்ஷிதர் பரம்பரையைச் சேர்ந்ததாகும். சிறு வயதிலேயே பெற்றோர் காலமாகிவிட, அண்ணா ராம சுப்புவும் தம்பி சுந்தரேசனும் தாய்மாமா வெங்கட சுப்பையரால் பத்தமடையில் வளர்க்கப்பட்டார்கள்.
 சிறு வயதிலேயே ஆன்மிக நாட்டம் அதிகம் பெற்றவராகத் திகழ்ந்த சுந்தரேசன், பெரியவர்களின் வற்புறுத்தலால், அடைச்சாணி கிராமத்தைச் சேர்ந்த ஜானகி என்னும் மங்கை நல்லாளை மணந்தார். பத்தமடையிலேயே இல்லறம் நடத்தி, சாதுக்களுக்கும் அதிதிகளுக்கும் விருந்துபசாரம் செய்து வாழ்ந்தார். பத்தமடையிலும் அடைச்சாணியிலும் மந்திர உபதேசம் பெற்ற சுந்தரேசன், தாமிரவருணிக் கரை கிராமங்களில் வேத-வேதாந்த-புராண உபன்யாசங்கள் நிகழ்த்துவது வழக்கம். இவ்வாறு கோடகநல்லூரில் (பத்தமடைக்கு எதிர்க்கரையில் உள்ள சிற்றூர்) உபன்யாசம் செய்துகொண்டிருந்த ஒரு நாளில், திடீரென்று பாதியில் அதை நிறுத்திவிட்டு, வேறு ஒருவரைத் தொடரச் சொல்லிவிட்டு, ஆற்றங்கரைப் புதர்களுக்குள் சென்று, கேசத்தை மழித்துக்கொண்டு, பூணூலைத் துறந்து, பூரண சந்நியாசியாகத் திரும்பினார். உபன்யாசத்தின் இடையில் பீறிட்டுவந்த வைராக்கியம், 23 வயதில் வித்வத் சந்நியாசம் பெற்றுக்கொள்ளச் செய்தது.
 தொடர்ந்து வந்த ஆண்டுகளில், அவதூத சந்நியாசியாக (ஆடையற்றவராக; அனைத்தையும் உதறியவர் என்பதே இப்பெயருக்கான பொருள்; தன்முனைப்பு, சடங்கு, சம்பிரதாயம் போன்றவற்றை உதறிய இத்தகையோர், தேக சிந்தனையையும் உதறியவர்கள்), கோடகநல்லூர் "பத்தமடை பகுதியின் தாமிரவருணி கோரைக் காட்டிற்குள் தவம், யோகம், நிஷ்டை என்று ஆழ்ந்துவிட்டார். யார் கண்ணிலும் படமாட்டார். மனைவி ஜானகி மட்டும், உணவு தயாரித்துக் கொண்டுவந்து, அதிகாலையிலிருந்து காட்டோரத்தில் காத்திருப்பார். சில நாட்கள், சுவாமிகள் வெளிவந்து உணவை உண்பார். சில நாட்கள், கண்டும் காணாமல் காட்டின் அடர்த்திக்குள் மறைந்து கொள்வார். அந்தி சாயும்வரை காத்திருக்கும் ஜானகி, மீண்டும் அடுத்த நாள் அதே வழக்கத்தைத் தொடர்வார்.
 இக்காலகட்டத்தில், திருநெல்வேலிப் பகுதிக்கு யாத்திரை வந்த சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதி ஜகத்குரு அபிநவ நரசிம்ம பாரதி சுவாமிகள், கோரைக் காட்டுக்குள் சென்று சுந்தர சுவாமிகளைச் சந்தித்தாராம். அவருடைய வாக்கை ஏற்று, சிவன் திருநாமத்தைப் பரவச் செய்வதற்காக, வெளியுலகம் போந்தார். இதற்காகக் கெüபீனமும் அரையாடையும் அணிந்தார்.
 தாமிரவருணியின் வடகரையின் தலங்களுக்குச் சென்று, அப்படியே ஆத்தூர் சங்கமம் (தாமிரவருணி கடலில் கலக்கும் பகுதி) அடைந்து, மீண்டும் தென் கரை வழியே பாணதீர்த்தம் வரை யாத்திரை செய்து, "தாமிரவருணி பரிக்ரமா' (ஆற்றை முழுமையாகச் சுற்றி வருதல்) நிறைவேற்றியுள்ளார். இவ்வாறு செல்கிற காலத்தில், ஆங்காங்கே சீடர்கள் வந்து சேர்ந்துள்ளனர்.
 சுவானுபூதி ரசாயனம், சுவானுபவ ரசமஞ்சரி, நிஜானந்த விலாசம் போன்ற வேதாந்த நூல்களை எழுதிய சுந்தர சுவாமிகள், சிவ பஜனைகளும் சங்கீர்த்தனங்களும் நிகழ்த்துவார். ஜாதி இன பேதங்கள் இல்லாமல், ஆண்கள் அனைவரையும் தத்தம் பெயருக்குப் பின்னால், "சிவன்' என்னும் அடைமொழியை இணைத்துக் கொள்ளப் பணித்தார்.
 நடைபயணமாகவே காசி வரைக்கும் சென்றார். தேவகோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட ஊர்களிலும் சுற்று வட்டாரங்களிலும் உபன்யாசங்கள் செய்தார். ஊர்க்காரர்கள் மரியாதையோடு கொண்டுவந்து சமர்ப்பித்த சன்மானங்களைக் கொண்டு கும்பாபிஷேகம் உள்ளிட்ட அறப்பணிகள் பலவற்றை நிகழ்த்தினார். சில இடங்களில் நெடுங்காலம் தங்கி, வேதாந்தப் பாடங்கள் சொன்னார். இறந்த பிள்ளையை உயிருடன் எழுப்பியது, ஒரே சமயத்தில் ஏழு ஊர்களில் முன்னின்று கும்பாபிஷேகம் நடத்தியது என்று இவர் ஆற்றிய அற்புதங்கள் அதிகம். காசியிலிருந்து பாணலிங்கம் கொணர்ந்து, 1864- இல் பத்தமடை கீழ அக்ரஹாரச் சிவன் கோயிலில் பிரதிஷ்டை செய்தார். இன்றளவும், பத்தமடை கீழத் தெரு (இப்போதைய சிவானந்தர் தெரு) அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில், இந்தச் சிவபெருமான் அருள்பாலிக்கிறார்.
 1873-74 வாக்கில், வடலூர் ராமலிங்க சுவாமிகளைச் சிதம்பரம் பகுதியில் சந்தித்துச் சுந்தர சுவாமிகள் உரையாடியதாகத் தெரிகிறது. நகரத்தார் பெருமக்களின் வேண்டுகோளுக்கிணங்கச் செட்டிநாட்டுப் பகுதிகளில் சுவாமிகள் அதிகம் தங்கினார். 1878- ஆம் ஆண்டு, அக்டோபர் 21 -ஆம் தேதி, ஐப்பசித் தேய்பிறை தசமியில், அரிமளம் என்னும் ஊரில் சுவாமிகள் மகாசித்தி அடைந்தார். அரிமளம் அருள்மிகு காந்திமத நாத அனவரத நாதர் திருக்கோவிலில் மகா சமாதியில் அருள்கிறார்.
 சுந்தர சுவாமிகளின் உபதேசம் பெற்று, கழுத்தில் ஏக ருத்ராக்ஷம் அணிந்து, பெயர்களுக்குப் பின்னால் "சிவன்' என்னும் அடைமொழியைச் சேர்த்துக் கொண்டார்கள் வையச்சேரி ராமசாமி சிவன் மற்றும் மகாவைத்யநாத சிவன் சகோதரர்கள். கர்நாடக இசையுலகில் கொடி கட்டிப் பறந்த இவர்கள், சுந்தர சுவாமிகளின் முக்கிய சீடர்கள் ஆவர். மாவடி சிதம்பரம் பிள்ளை, கோயில் மணியம் சுப்பிரமணிய பிள்ளை, காந்திமத நாத பிள்ளை, சதாசிவ தர்வாடி, கிருஷ்ண தர்வாடி, தளவாய் ராமசாமி முதலியார் ஆகிய நெல்லைப் பிரமுகர்கள், பிரதான சீடர்கள் ஆயினர். புதுக்கோட்டையில், ஐந்து வயதுச் சிறுமிக்கும் வண்டிக்கார ரங்க கோனாருக்கும் சுவாமிகள் உபதேசம் செய்ததாகத் தெரிகிறது.
 இந்தச் சீடர்கள் வரிசையில், தாமிரவருணித் தீரத்திற்குத் தனிச்சிறப்பு சேர்த்த மற்றொருவரும் உண்டு. திருநெல்வேலி ஆங்கிலோ வெர்னாகுலர் ஹை ஸ்கூலில் (பின்னாட்களில் இதுவே இந்து கல்லூரி ஹை ஸ்கூல்) ஆசிரியராகப் பணியாற்றிய சுந்தரம் பிள்ளையே இவர். உலகம் இவரை மனோன்மணீயம் சுந்தரனார் என்றறியும்.
 - தொடரும்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com