பொருநை போற்றுதும்! 3 - டாக்டர் சுதா சேஷய்யன்

1855-ஆம் ஆண்டு, ஏப்ரல் 4 -ஆம் தேதி, பெருமாள் பிள்ளைக்கும் மாடத்தி அம்மாளுக்கும், திருவிதாங்கூர் ஆலப்புழையில் பிறந்தவர் சுந்தரம் பிள்ளை. இளமையிலேயே
பொருநை போற்றுதும்! 3 - டாக்டர் சுதா சேஷய்யன்

1855-ஆம் ஆண்டு, ஏப்ரல் 4 -ஆம் தேதி, பெருமாள் பிள்ளைக்கும் மாடத்தி அம்மாளுக்கும், திருவிதாங்கூர் ஆலப்புழையில் பிறந்தவர் சுந்தரம் பிள்ளை. இளமையிலேயே தேவார திருவாசகச் சைவப் பெருநூல்களின்பால் அதிவிருப்பம் கொண்ட இவர், 1876-இல் இளங்கலை பட்டம் பெற்று, 1877-இல், திருநெல்வேலி ஆங்கிலோ-வெர்னாகுலர் ஹைஸ்கூலில் பணியமர்ந்தார். சுவாமி விவேகானந்தரோடு உரையாடி, அவருக்குச் சைவ சித்தாந்தப் பெருமைகளை இவர் எடுத்துக் கூறியதாகத் தெரிகிறது. 1891-இல், இன்றளவும் பெயர் விளங்கி ஒளிர நிறுத்திய தமது "மனோன்மணீயம்' என்னும் நாடகக் காவியத்தை வெளியிட்டார்.
 தமிழ் இலக்கிய வரலாற்றில் தன்னேரில்லாச் சிறப்பிடம் பெற்றுள்ள இக்காவியத்தில், பொதியத்தின் பெருமையையும் பொருநையின் மேன்மையையும் பெருமிதத்தோடு கூறுகிறார்.
 பல்லாயிரத்த தேவரும் பிறரும்
 நிலைபெற நின்ற பனிவரை துலையின்
 ஒருதலையாக, உருவம் சிறிய
 குறுமுனி தனியாயுறும் மலை மற்றோர்
 தலையாச் சமமாய் நின்றதேல்,
 மலைகளில் மலையமோ அலது
 பொன்வரையோ பெரிது?
 (பல்லாயிரக்கணக்கான தேவர்களுள் மற்றவர்களும் நின்ற பனிமலையாம் இமயம், துலாக்கோலின் ஒரு தட்டில் நின்றபோது, அதனைச் சமன் செய்ய, அகத்தியர் தனியொருவராக அமர்ந்த பொதியமலை, துலாக்கோலின் மறுதட்டில் நின்றது. ஆகவே, மலைகளில் பெரியது, மலையம் என்னும் பொதியமா? அன்றி இமயமா?)
 அமிழ்தினும் சிறந்த தமிழ்மொழி பிறந்த மலையம்
 நின்றிழிந்து விலையுயர் முத்தும்
 வேழ வெண் மருப்பும் வீசிக் காழகில்
 சந்தனாடவியும் சாடி வந்துயர்
 குங்குமம் முறித்துச் சங்கினம் அலறும்
 தடம்பணை தவழ்ந்து, மடமயில் நடம்பயில்
 வளம் பொழில் கடந்து குளம் பல நிரப்பி,
 இருகரை வாரமும் திருமகள் உறையுளாப்
 பண்ணும் இப்புண்ணிய தாமிரவருணி
 (அமிழ்தினும் சிறந்த தமிழ்மொழி பிறந்த பொதிய மலையினின்று வீழ்ந்திறங்கி, விலைமிக்க முத்துக்களையும் யானைத் தந்தங்களையும் வீசி, அகில், சந்தனம் போன்ற மரங்கள் அடர்ந்த காட்டில் மோதிப் பாய்ந்து, உயர்ந்தோங்கிய குங்கும மரங்களை முறித்துக் கொண்டு, சங்குகள் ஒலிசெய்யும் பரந்துபட்ட வயல்வெளிகளில் மெல்லத் தவழ்ந்து, இளமைமிக்க மயில்கள் நடமாடும் சோலைகளைக் கடந்து, குளங்கள் பலவற்றை நிரம்பச் செய்து, தனது கரைகள் இரண்டையும் திருமகளின் வசிப்பிடமாகப் பண்ணும் புண்ணிய தாமிரவருணி)
 இந்த நாடகக் காவியத்தில், ஜீவக வழுதி என்னும் பாண்டிய மன்னனுக்குக் குலகுரு, சுந்தர முனிவர் ஆவார். "காலம் என்பது கறங்குபோல் சுழன்று மேலது கீழாக் கீழது மேலா மாற்றிடும்' என்றும் "முக்கியம் புகழோ, தக்க உன் கடமையோ?' என்றும் வேத நெறியில் வாழ்வியல் உரைக்கும் சுந்தர முனிவரை, பொருநைக் கரையில் தமக்கு குருவாகத் திகழ்ந்த கோடகநல்லூர் சுந்தர சுவாமிகளை மனத்தில் கொண்டே மனோன்மணீய ஆசிரியர் படைத்தார் என்பது கண்கூடு.
 "உன் சீரிளமைத் திறம் வியந்து வாழ்த்துதுமே' என்று தமிழ் வாழ்த்துப் பாடும்போதெல்லாம், மனோன்மணீயம் என்னும் காவியமும், அதன் பாயிரப் பகுதியில் அமைந்துள்ள தமிழ் வாழ்த்தும் கிட்டுவதற்குத் தாமிரவருணித் தீரமே காரணம் என்று தலைநிமிர்த்திப் பெருமிதப்படாமல் இருக்கமுடியாது.
 பொருநையில் பிறந்து புகழுடன் தொடர்ந்து..: தாமிரவருணிக் கரை தந்த மற்றுமொரு தவப்புதல்வர், குமரகுருபர சுவாமிகள் ஆவார். சண்முக சிகாமணிக் கவிராயருக்கும் சிவகாமி அம்மாளுக்கும், ஸ்ரீ வைகுண்டத்தில், 1625 -ஆம் ஆண்டு திருச்செந்தூர் முருகப்பெருமான் திருவருளால் தோன்றிய இவர், ஏழு வயது வரை வாய் பேசாதிருந்து, பின்னர் முருகப் பெருமான் அருளாலேயே பேசத் தொடங்கினார். மீனாட்சியம்மை மீதும் முத்துக்குமாரசுவாமி மீதும் பிள்ளைத் தமிழ் பாடியுள்ள இவர், தமிழின் பெருமையை வடநாட்டிலும் நிறுவினார். இந்துஸ்தானி மொழியை ஆசறக் கற்று, அதன் வழி, தமிழ்மொழி நூல்களின் சிறப்புச் செய்திகளை வடநாட்டிலும் எடுத்துரைத்தார். கம்பநாட்டாழ்வாரின் காவியச் சிறப்பை இவர் விதந்தோதியதைச் செவியுற்றுத்தான், துளசிதாசர் என்னும் பெருமகனார், ராமாயணத் திருக்கதையை "ராம சரித மானஸம்' என்னும் பெயரில் இந்தி மொழியில் யாத்தார் என்று சொல்லப்படுகிறது.
 வேத நெறி கண்ட உயர் ஆசான்கள்: ஸ்ரீ வைணவ ஆசார்யப் பெருமக்களில் ஒருவரும் தென்கலை சம்பிரதாயத்தின் பிரதான குருவுமான மணவாள மாமுனிகள், திருநாவீறுடைய தாசரண்ணர்,அரங்க நாச்சியார் ஆகியோரின் திருமகனாக, 1370 -ஆம் ஆண்டு ஐப்பசி மூலத் திருநாளில், ஆழ்வார் திருநகரியில், அழகிய மணவாளன் என்னும் பிள்ளைத் திருநாமத்தோடு தோன்றினார். ராமானுஜரைப் போற்றும் வகையில் இவர் இயற்றிய "யதிராஜ விம்சதி' பெரும் சிறப்புக்குரியது. தென்கலை சம்பிரதாயத்தில், நம்மாழ்வார், ராமானுஜர், மணவாள மாமுனிகள் ஆகிய மூவரும் பிரணவத்தின் அகார, உகார, மகாரங்களாகக் கருதப் பெறுகின்றனர்.
 ராமானுஜரைப் போலவே, இவரும் ஆதிசேஷ அவதாரம். "பெரிய ஜீயர்' என்னும் சிறப்புப் பெயரும், வைணவ நித்ய அனுசந்தானத்தில் "ஜீயர் திருவடிகளே சரணம்' என்று இயம்புவதில் உள்ள ஜீயர் என்னும் பதமும் இவரையே குறிப்பன.
 நம்மாழ்வார் திருவவதாரம் செய்த ஆழ்வார் திருநகரியில், 16 -ஆம் நூற்றாண்டில் தோன்றியவர் திருக்குருகைப் பெருமாள் கவிராயர். சடையன் என்னும் இயற்பெயர் கொண்டு, இலக்கணப் பெரும்புலவராகத் திகழ்ந்த இவர், திருக்குருகை மான்மியம் பாடியதால், திருக்குருகைப் பெருமாள் என்னும் பெயர் பெற்றார். நம்மாழ்வாரின் பரிபூரண பக்தராக விளங்கினார். ஆகவே, தம்முடைய இலக்கண நூல்கள் மூன்றனுக்கும், நம்மாழ்வாரின் திருநாமமான "மாறன்' என்பதையே சூட்டினார்; மாறன் அகப்பொருள், மாறன் பாப்பாவினம், மாறன் அலங்காரம் ஆகியவை இந்நூல்கள்.
 தாமிரவருணித் தென்கரைத் தலங்களில் ஒன்றான தென் திருப்பேரையில் 16-17 -ஆம் நூற்றாண்டுக் காலகட்டத்தில் பிறந்தவர் காரி ரத்தினக் கவிராயர். திருகுருகைப் பெருமாளின் மாறன் அலங்காரத்திற்கு உரையும், திருக்குறள் நுண்பொருள் மாலை என்னும் நூலும் இயற்றினார்.
 ஜகத்குரு ஸ்ரீ ஆதி சங்கராசார்ய மூலாம்னாய ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் ஆசார்ய பெருமக்களில் சிலருக்குத் தாமிரவருணியோடு நெருங்கிய தொடர்புண்டு. ஆதி சங்கர பகவத்பாதராலேயே சந்நியாச தீûக்ஷ வழங்கப்பெற்றவர், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் மூன்றாவது பீடாதிபதியாகச் சிம்மாசனம் ஏறியவரான ஸ்ரீ சர்வக்ஞாத்ம இந்திர சரஸ்வதி சுவாமிகள் தாமிரவருணிக் கரையில் தோரூர் என்னும் ஊரில் தோன்றியவர். இவர், பகவத்பாதரின் உள்ளம் கவரும் அளவுக்குத் தம்முடைய ஏழாவது வயதிலேயே பரமஞானியாகத் திகழ்ந்தவர்.
 காஞ்சியில் ஆதி சங்கரர் சர்வக்ஞ பீடமேறிய நிலையில், தாமிரவருணிக் கரை வேத பண்டிதர்கள் பலர் காஞ்சிக்கு வந்து சங்கரரோடு வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டனர். மூன்று நாட்கள் வாதத்திற்குப் பின்னர், சங்கரரின் கருத்தை ஏற்று அவர்கள் சீடர்களாக, ஏழாண்டு மட்டுமே நிரம்பியிருந்த மகாதேவர், துறவுக்கோலம் பூண்டார்; ஆதி சங்கரரின் நிறைந்த அன்புக்குப் பாத்திரமானார். அவரே, ஸ்ரீ சர்வக்ஞாத்மர். ஆதி சங்கரர் தமது பிரம்ம சூத்ர பாஷ்யத்தில் தந்திருக்கும் கருத்துகளை மேலும் விளக்கிச் சொல்வதாக இவருடைய "ஸம்úக்ஷப சாரீரகம்' என்னும் நூல் விளங்குகிறது. பஞ்ச ப்ரக்ரியம், பிரமாண லக்ஷணம் என்னும் வேறு இரு நூல்களையும் இவர் யாத்துள்ளார்.
 இந்த பீடத்தின் 14 -ஆவது பீடாதிபதியாக விளங்கிய முதலாம் ஸ்ரீ வித்யா கனேந்திர சரஸ்வதி சுவாமிகள் (272 - 317), மலய மலைப் பகுதியில், பல்வேறு கிராமங்களில் துர்சம்பவங்களைத் தோற்றுவித்த உக்ர பைரவரை சாந்தப்படுத்தி, கிராமங்களில் அமைதியைத் தவழச் செய்தார். அதே மலயத்தின் அகத்திய மலைகளில் சமாதியடைந்தார். இவரைத் தொடர்ந்து பீடமேறியவர் ஸ்ரீ கீஷ்பதி கங்காதரேந்திர சரஸ்வதி சுவாமிகள் (317 -- 329). மகா ஞானியான இவருக்கு, சாக்ஷôத் அகத்தியரே பஞ்சதசாக்ஷரி மந்திரத்தை உபதேசித்ததாகத் தெரிகிறது. இவரும் தாமிரவருணித் தீரத்தில், அகத்திய மலைகளில் சித்தியடைந்தார்.
 - தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com