மூன்று முக முருகன்!

இக்கோயிலின் திருப்பணி வேலைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது. எதிர்வரும் தை மாதம் மஹா கும்பாபிஷேகம் செய்ய முருகன் அருள்கூடியுள்ளது. பக்தர்கள் இத்திருப்பணியில் பங்குகொண்டு
மூன்று முக முருகன்!

"அஞ்சு முகம் தோன்றில்
 ஆறு முகம் தோன்றும் வெஞ் சமரில்
 அஞ்சேல் என வேல் தோன்றும்
 நெஞ்சில் ஒருகால் நினைக்கில் இருகாலும்
 தோன்றும் முருகா என்று ஓதுவார் முன்''
 முருகப்பெருமான் பல திருத்தலங்களில் பல கரங்களுடன், பல திருமுகங்களுடன் காட்சியளித்தாலும் மூன்று முகம் உடைய முருகனைப் பற்றி எங்கும் குறிப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் அபூர்வமாக, தமிழ் நாட்டில் ஈரோடு மாவட்டம் , கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் உள்ள காசிபாளையத்தில் சிவகிரி, குமரன் கரடு என்று அழைக்கப்படும் குன்றில், குமரப் பெருமான் மூன்று முகமும் ஆறு திருக்கரங்களுடனும் நின்றவாறு அருள்பொழிகின்றார்.
 இவ்வூரின் கிழக்கே சுமார் 1 கி. மீ. தொலைவில் சத்தி - ஈரோடு நெடுஞ்சாலையின் வடக்கு பகுதியில் மூன்று சிறு சிறு குன்றுகள் கிழக்கு மேற்காக வரிசையாக அமைந்துள்ளன. அதில் மேற்குப் பகுதியில் உள்ள குன்றில் அருள்மிகு மாதேஸ்வரன் லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். கிழக்குப் பகுதியில் உள்ள குன்றில் மூன்று முகம் ஆறு கரங்களுடன் கூடிய அருள்மிகு முருகப்பெருமான் "ஸ்ரீ முத்து வேலாயுதசுவாமி' என்கிற திருப்பெயருடன் சுமார் 3 அடி உயர கருங்கல் திருமேனியாக வள்ளி தெய்வானை சமேதராக அருள்பாலித்து வருகிறார்.
 ஸ்ரீ மூன்று முக முத்து வேலாயுதசுவாமியின் வலதுபுறம் உள்ள மூன்று கரங்களில் வஜ்ராயுதம், அம்பு, சின்முத்திரையும் இடதுபுறம் உள்ள மூன்று கரங்களில் மான், வில், அபயக்கரத்துடன் பாம்பும், பின்புறம் மயிலும் காணப்படுகிறது.
 முருகன் திருக்கோயில்களில் கருவறைக்கு முன்பு மயில் அமைந்திருக்கும். ஆனால் இத்திருக்கோயில் முன்பு சக்திவேல் நிறுவப்பட்டுள்ளது. இவ்வேல் சூரபத்மனை வதம் செய்ய உமையவளால் வழங்கப்பட்டது. இவ்வேலின் ஒருபுறம் சரவணபவ சக்ரமும் மறுபுறம் "ஓம்' என்ற பிரணவ எழுத்துடன் சூலாயுதமும் வஜ்ஜராயுதமும் பொறிக்கப்பட்டுள்ளன.
 முருகப்பெருமான், இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி ஆகிய 3 சக்திகளின் திருவுருவாக மும்முகம் கொண்டு மக்களுக்கு நலம் அருள்வதற்காக உருவெடுத்து குடிகொண்டார். குமரன் குடிகொண்ட கரட்டில் பதினென் சித்தர்களும் அரூப நிலையில் வந்து ஈசனையும் முருகனையும் வணங்குவதாக ஐதீகம்!
 இக்கோயில் சுமார் 700 ஆண்டுகளுக்கு மேல் பழைமையானது என அறிய முடிகிறது. இக் கோயிலை பழைமை மாற்றாமல் புதுப்பிக்க வேண்டும் என முடிவு செய்து, அதற்காக ஊரே கூடி, உருவானது மூன்று முகம் ஸ்ரீ முத்து வேலாயுத சுவாமி திருக்கோயில். எனவே, சக்தி மிகுந்த இக்கோயிலில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பணியும் இறைவனிடம் உத்தரவு கிடைத்தபிறகே இதுவரை மேற்கொள்ளப்படுகிறது. தற்பொழுது கருவறை, அர்த்த மண்டபம் முன்புறமாக மகாமண்டபம் ஆகம விதிகளின் படி அமைக்கப்பட்டுள்ளது. குன்றின் மேல் செல்ல படிக்கட்டுக்கள் தவிர, வாகனங்கள் செல்லவும் சாலைவசதி அமைக்கப்பட்டுள்ளது. கோயில் சுற்றுப்பிரகாரம் விரிவுபடுத்தப்பட்டு விசேஷ நாள்களில் தேர் சுற்றி வருவதற்கு தக்கவாறு சாலையை அகலப்படுத்தியுள்ளனர்.
 மாதவம் செய்யும் மாதேஸ்வரன் குடிகொண்டுள்ளதாலும், மகனான முருகன் குடிகொண்டுள்ள தலமாதலாலும், ஞானவேல் நின்று அருளும் தலமாதலாலும் அனைத்து சித்தர்களும் சித்தியடைய வேண்டி தவம் செய்வதற்கு உரிய இடமாக தேர்ந்தெடுத்த இந்த சிவகிரி குமரன் கரட்டில் மகாமேருவை மையப்படுத்தி 18 சித்தர்கள், மஹா கணபதி, சிவகுருநாதர் என்னும் ஞானஸ்கந்தர், அகத்தீசர், நந்தியம்பெருமான் ஆகியோர் பிரபஞ்ச நாயகர்களாக குடிகொண்ட சித்தர்சபை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சபையின் நடுவே மகா மேரு , அதன்முன்பு நந்தியம் பெருமான், சிவலிங்கம் உள்ளது. இங்கு முருகப்பெருமான் தவக்கோலத்தில் வீற்றிருந்து பதினெண் சித்தர்கள் சபையினை பேராட்சி செய்கின்றார். பெளர்ணமி, சஷ்டி, கிருத்திகை, பிரதோஷம் ஆகிய நாள்களில் தரிசன நேரங்கள் கூடும்.
 இக்கோயிலின் திருப்பணி வேலைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது. எதிர்வரும் தை மாதம் மஹா கும்பாபிஷேகம் செய்ய முருகன் அருள்கூடியுள்ளது. பக்தர்கள் இத்திருப்பணியில் பங்குகொண்டு முருகனருள் பெறலாம்.
 ஈரோடு மாவட்டம் கோபியிலிருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் 9 கி.மீ. தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
 தொடர்புக்கு: 97862 85405/ 82480 04435.
 - இரா.இரகுநாதன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com