போகர் சாபவிமோசனம் அடைந்த கன்னிவாடி! 

போகர் சாபவிமோசனம் அடைந்த கன்னிவாடி! 

மலைகளுக்கு யாத்திரை போவதென்பது தவிர்க்க முடியாத ஒரு கடமையாக நமது முன்னோர்கள் நடைமுறைப்படுத்தி வந்தார்கள்.

மலைகளுக்கு யாத்திரை போவதென்பது தவிர்க்க முடியாத ஒரு கடமையாக நமது முன்னோர்கள் நடைமுறைப்படுத்தி வந்தார்கள். அதற்கென்று சில நியமங்களையும் வழிமுறைகளையும் வகுத்து இருந்தனர். இன்றைக்கும் சபரிமலை யாத்திரை, திருமலை யாத்திரை, பழனி போன்ற மலைகளுக்குச் சென்று வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தே உள்ளது. மலைகளை இறைவன் அம்சமாகவும் இறைவன் வாழுமிடமாகவும் நம் முன்னோர்கள் கருதினார்கள். ஆகவே, கோயில் வழிபாட்டை மூன்றாக, மலைக்கோயில், குகைக்கோயில், தரைக்கோயில் என பிரித்துள்ளார்கள். அதன்படி, இம்மூன்றும் ஒருங்கே அமையப் பெற்ற புண்ணிய தலமிது.
 "கரூரார் ஜலத்திரட்டு' என்ற நூலின் மூலமாக போகர் இத்திருக்கோயிலுக்கு வந்த பொழுது, அவருடைய சீடர்களான கொங்கணர், கரூரார் ஆகிய இருவரும் பெண்களில் உயர்ந்த ரக பெண்ணைத் தேடி சென்ற போது பெண்ணிற்கு பதிலாக, அந்த ரக கல்சிலை ஒன்று இருந்ததைக் கண்டு அச்சிலையை உயிராக்கி கொண்டு சென்றனர். அப்போது போகர் ""கல் நீ வாடி..!'' என்று அழைத்ததின் பேரில் அது நாளடைவில் கன்னிவாடி என்று ஊர் பெயர் வந்ததாக சொல்லப்
 படுகிறது.
 இதே போன்று, திருவிளையாடல் புராணத்தில் பன்றிக் குட்டிகளுக்கு பால் கொடுத்து விட்டு ஆகாய மார்க்கமாக அம்மையும் அப்பனும் செல்லும் போது, அம்மலையின் அழகை பார்த்து அம்மன் தயங்கி நிற்க, ""அப்பன் ஆடு மயில் வாகனமே.. ஆறணங்கே, பூவை கன்னிவாடி என்று சொன்னானே.. வாழும் ஊர் சொல்லலையே'', என்று அழைக்க அதுவும் கன்னிவாடி என்று பெயர் வரக்காரணம் என்பர்.
 ஒரு நாள் சித்தர்கள் எல்லோரும் ஒன்று கூடியபோது கொங்கணரையும், கரூராரையும் காணாமல் புலிப்பாணியை அகஸ்தியர் எங்கே என்று கேட்க, அதற்கு முன்பு நடந்த இச்சம்பவத்தை புலிப்பாணி அகஸ்தியரிடம் சொன்னார். அதற்கு அகஸ்தியர் போகரை கோபித்து, "நீ.. நாம் வணங்கும் தமிழ்க் கடவுளான முருகப் பெருமானை நவபாசனத்தில் செய்து முடிக்கும் வரை உனக்கு சித்துப் பலிக்காது' என்று கூறி சாபம் விட்டார். அதற்கு போகர் அகஸ்தியரை வணங்கி எனக்குச் சித்து பலிக்கவில்லை என்றால் நான் இந்தப் பணியை எப்படி செய்வேன் என்று வேண்ட, அதற்கு அகஸ்தியர் ககன குளிகை என்றும் மூலிகை மாத்திரையை போகரிடம் கொடுத்து, இதை நீ வாயில் போட்டு அடக்கிக் கொண்டால் ஆகாய மார்க்கமாக பறக்கலாம் என்று கூறினார். அந்த ககனக்குளிகை மாத்திரையை போகர் பெற்றுக்கொண்டு முருகன் சிலை செய்து சாப விமோசனம் நீங்கியதாக ஒரு கதையும் சொல்லப்படுகிறது.
 மெய்கண்ட சித்தர், குண்டலி சித்தர், முத்தானந்த சித்தர், வாழையானந்த சித்தர் ஆகியோரால் சிவபெருமான் சோமலிங்க சுவாமியாக எழுந்தருளச் செய்து வணங்கி அருள் பெற்ற தலம் இது. அகஸ்தியர் உருவாக்கிய வேதி ஊற்றில் தண்ணீர் எவ்வளவு வந்தாலும் அந்த மலையை விட்டு வெளியே செல்வதில்லை. இங்கே உள்ள வில்வமர இலையை நேர்த்தி வைத்து மெய்கண்ட சித்தர் குகையில் போட்டால் உடனே நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.
 "காமலிங்கம் கண்டறிந்து கண்ணப்பர் கண்தரித்த
 சோமலிங்கம் சீறடியைச் சிந்திப்பார்
 பூமலிந்து பொன்மலிந்து பொன்றாப்புகழ் மலிந்து
 புத்தமுச் சொன் மொழிந்து வாழ்வார் செழித்து''
 கன்னிவாடி திண்டுக்கல்லில் இருந்து 23 கி.மீ. தூரத்தில் உள்ளது. நகரப்பேருந்துகளும் உண்டு.
 தொடர்புக்கு: 99769 62536.
 - பொ.ஜெயச்சந்திரன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com