ஆனந்தம் அளிக்கும் அனந்த பத்மநாதேஸ்வரர்!

தொண்டை நாட்டிலே காஞ்சி மாநகருக்கு என்று ஒர் தனிச் சிறப்பு உண்டு. நடமாடும் தெய்வமாக விளங்கிய மகா பெரியவரின் எண்ணத்தில் தோன்றியதுதான் அனந்த பத்மநாதேஸ்வரர் கோயில்.
ஆனந்தம் அளிக்கும் அனந்த பத்மநாதேஸ்வரர்!

தொண்டை நாட்டிலே காஞ்சி மாநகருக்கு என்று ஒர் தனிச் சிறப்பு உண்டு. நடமாடும் தெய்வமாக விளங்கிய மகா பெரியவரின் எண்ணத்தில் தோன்றியதுதான் அனந்த பத்மநாதேஸ்வரர் கோயில். காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் எதிரில் பதினாறு கால் மண்டபத்திற்கு மேற்கே லிங்கப்பன் தெருவில் இடதுபுறம் அமைந்துள்ளது இக்கோயில். அவர் காலத்தில் தனியார் ஒருவரிடம் இருந்த இடத்தை அன்பு வேண்டுகோளுடன் பெற்று அந்நிலத்தை தோண்டியபோது தான் இக்கோயில் இருந்ததாக தெரிகிறது. பின்னர் மகாபெரியவரே இக்கோயிலை நிறுவி புனரமைப்பு செய்ததாக செவிவழிச் செய்திகள் கூறுகின்றன.
 இது பல்லவர் காலத்தது கோயிலாகும். பூமியில் புதையுண்டு கிடந்ததைத் தோண்டி புனரமைப்பு செய்த பெருமை அனைத்தும் மகாசுவாமிகளையே சாரும். இவ்வாலயம் அமைந்ததின் காரணமாக சிவனின் திருவிளையாடலாகச் சொல்லப்படும் புராண வரலாறு: "காஞ்சி புராணத்தின் படி வினை விதைத்தவன் வினை அறுப்பான்' பொய் சாட்சி சொல்பவன் தண்டனையை பெற்றே தீருவான் என்பதற்கிணங்க திருமாலும் விதி விலக்கு அல்ல.
 ஒரு சமயம், கயிலையில் இறைவனும், இறைவியும் மகிழ்ச்சியால் சூதாட எண்ணி திருமாலை அவ்விளையாட்டிற்கு சான்றாக வைத்து ஆடினர். அவ்வாறு ஆடுகையில் இறைவன் தோற்க இறைவி வென்றார். இறைவியார் யான் உன்னை வென்றேன் என்றார். இறைவன் யானே உம்மை வென்றேன் என்றார். இவ்வாறு இருவருமே தாமே வென்றதாக கூறிக்கொண்டார்கள். அங்கே சான்றாக இருந்த திருமாலை கேட்க திருமால் இறைவனின் முகத்தை பார்த்து இறைவனே வென்றார் என கூறினார். அதனை கேட்ட இறைவி சினந்து "நீ பொய் சாட்சி கூறியமையால் பாம்பு ஆகுக' என சபித்தார். திருமால் அவர் கூறியதை கேட்டு திகைத்து நின்றார். மேலும் திருமால் நடுங்கி, வணங்கி "அடியேன் அறியாமல் செய்த குற்றத்தை பொருத்து இச்சாபம் நீங்குமாறு அருளச் செய்ய வேண்டும்' என்று கேட்க அம்மையார் திருஉள்ளம் இரங்கி "நீ அஞ்சற்க, இச்சாபம் நீங்க நீவிர் ஒரு லிங்கத்தை காஞ்சியில் அமைத்து பூஜித்து வருக அப்போது உன்னுடைய சாபம் நீங்கும்' எனக் கூறினார். மேலும், "நீவிர் அனந்த பத்மநாபன் என விளங்குக' என கூறினார். அவ்வாறு திருமால் சாபம் நீங்க காஞ்சிபுரம் அடைந்து திருவேகம்பத்தை வணங்கி அதற்கு அருகில் அனந்த பத்மநாப லிங்கத்தை நிறுவி வழிபட்டு பாம்பு உருவம் நீங்கி திருவுருவம் பெற்றார்.
 அனந்தன் என்பது பாம்பு, பத்மநாபன் என்பது "தாமரை உந்தியன் திருமால்' எனப் பொருள். இவ்வாலயத்தில் சிவனையும் திருமாலையும் ஒரு சேர காண கண் கோடி வேண்டும். இக்கோயிலை பிரதோஷம், ஏகாதசி, சிவராத்திரி ஆகிய நாள்களில் காண்பது சிறப்பு. திருவனந்தபுரம் தலத்திற்கு சென்றுவந்த புண்ணியம் கிடைக்கும். எதிர்வரும் சிவராத்திரி விசேஷ தினத்தன்று காஞ்சிபுரம் செல்பவர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய அற்புத ஆலயம்.
 - இராம. இரவிச்சந்திரன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com