நலம் வேண்டி நாடகப் பிரார்த்தனை! 

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையிலிருந்து 3 கி.மீ தூரத்தில் உள்ளது தாழையூர். இங்கு உள்ள அருள்மிகு ஸ்ரீ கூத்தாடி முத்துப் பெரிய நாயகி அம்மன் ஆலயத்தில் மஹாசிவராத்திரிப் பெருவிழா

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையிலிருந்து 3 கி.மீ தூரத்தில் உள்ளது தாழையூர். இங்கு உள்ள அருள்மிகு ஸ்ரீ கூத்தாடி முத்துப் பெரிய நாயகி அம்மன் ஆலயத்தில் மஹாசிவராத்திரிப் பெருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. அந்த தருணத்தில் பதினைந்து நாள்கள் "கூத்து' என கிராமப்புறங்களில் அழைக்கப் பெறும் நாடகங்களை நடத்துவது வழக்கம். இல்லங்களில் மங்கல நிகழ்வுகள் நடைபெற வேண்டி அல்லது நினைத்த செயல்கள் இனிதாக நிறைவேற வேண்டி இந்த நாடகத்தை நடத்துகிறோம் என்று விநோத பிரார்த்தனை செய்துகொண்டு நடத்துவார்கள். இந்த நாடகங்களில் பெரும்பாலும் வள்ளித்திருமணம், சத்தியவான் சாவித்திரி, மகமாயி, மகாபாரதம், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற புராண, சரித்திர நிகழ்வுகள் இடம் பெற்றிருக்கும்.
சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு அறந்தாங்கி அருகிலுள்ள கம்பங்காடு எனும் கிராமத்திலிருந்து ஒரு குடும்பம் தாழையூர் ஐயனார் திருக்கோயில் சிவராத்திரி திருவிழாவிற்கு கூத்தாட வந்தது. மிகுந்த தெய்வபக்தியுடன் திகழ்ந்த அக்குடும்பத்தினருடன் முத்துப்பெரிய நாயகி என்ற பெயருடன் ஒரு கன்னிப்பெண்ணும் வந்திருந்தாள். அந்த பெண்மணியே ஐயனார் சிலைக்கு அருகில் இருந்த ஒரு மரத்திற்குள் ஒளியாகப் புகுந்து விட்டாள். தான் ஐயனாருக்கு அருகிலேயே ஜீவசமாதியாகி விட்டதாகவும், தில்லைக்கூத்தன் தென்திசை நோக்கி நடனமாடும் கோலத்தில் இருப்பது போல் தானும் காட்சி தந்து காப்பதாகவும் அசரீரி வாக்காக அளித்துவிட்டதாக செவிவழிச் செய்தி கூறுகின்றது. உடனே அந்த குடும்ப அன்பர்களும், பக்தர்களும் அந்தக் கன்னிக்கைக்கு, சந்தன மரத்தில் சிலையமைத்து வழிபடத் தொடங்கினார். இவ்வாறாக ஒரு பெண் சித்தரின் ஜீவசமாதிக் கோயில் இங்கு அமையப்பெற்றது. அதுவே கூத்தாடி முத்துப்பெரிய நாயகி அம்மன் கோயில் என தற்போது அழைக்கப்படுகின்றது.
சிவராத்திரியன்று (பிப்ரவரி 13) பகலில் காவடி ஆட்டம், பூக்குழி இறங்குதல், அரிவாள் மேல் ஆட்டம் போன்ற நிகழ்வுகள் நடைபெற்று இரவு நான்கு கால அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.
- இலக்கிய மேகம் ந. ஸ்ரீநிவாஸன்




 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com