இதயங்களில் அன்பை விதைத்தவர் பரமஹம்சர்!

பாரத நாட்டில் எண்ணற்ற யோகிகளும், மகான்களும், சித்த புருஷர்களும் தோன்றினார்கள். தோன்றிக் கொண்டும் இருக்கின்றார்கள்.
இதயங்களில் அன்பை விதைத்தவர் பரமஹம்சர்!

பாரத நாட்டில் எண்ணற்ற யோகிகளும், மகான்களும், சித்த புருஷர்களும் தோன்றினார்கள். தோன்றிக் கொண்டும் இருக்கின்றார்கள். பகவான் கீதையில் அருளிய வண்ணம் தர்மத்தைக் காக்க நான் யுகந்தோறும் அவதாரம் செய்வேன் என்ற வாக்கின்படி, ஓர் அவதாரம் நிகழ்ந்தது. அந்த அவதாரமே "அவதார வரிஷ்டர்' எனக் குறிப்பிடப் பெற்றது. வரிஷ்டர் என்றால் மேலானவர் என்பது பொருள். யார் ராமனாகவும் யார் கிருஷ்ணராகவும் அவதாரம் செய்தார்களோ அவர்களே பகவான் ஸ்ரீராமகிருஷ்ணராக இப்பூவுலகில் ஸனாதன தர்மம் தழைப்பதற்காக உலகெங்கும் பரவுவதற்காக அவதாரம் செய்தார்.
 வங்காளத்தில் கமார்பு கூர் எனும் சிற்றூரில் 1836, பிப்ரவரி 17 - ஆம் நாள் இப்பூவுலகில் அவதாரம் செய்தார். சிறிய வயதிலிருந்தே பூஜைகள், ஆன்மீக சாதனைகள் வாழ்வில் நடந்தேறின.
 பவதாரிணிக் காளி கோயிலின் பூஜாரியாக தேவியின் அருளைப் பரிபூரணமாகப் பெற்றவராக விளங்கினார். அம்பிகையை ஆராதனை செய்வதில் அவருக்கு இருந்த பெரும் பக்தி தரிசிப்பவர்களுக்கு மெய் சிலிர்க்கும் தன்மையை ஏற்படுத்தியது. அபிஷேகம் செய்தாலும் அலங்காரம் செய்தாலும் மணிக்கணக்கில் ஆகும். புரிதல் உள்ளவர்களும் பொறுமை உள்ளவர்களும் மட்டுமே பங்கேற்க இயலும்.
 அன்னையின் அருள்காட்சிக்காகத் தன் இன்னுயிர் துறக்கவும் துணிந்தார். தேவி நேரில் தோன்றி அருள்பாலித்தாள். அன்னையோடு நேரில் பேசினார், விளையாடினார். நான்கு மறை தீர்ப்பாக அம்பிகையைச் சரண் புகுந்து அதிக வரம் பெற்றவர் ஸ்ரீ ராமகிருஷ்ணர் அவருக்காக வேண்டினாரா எனில் அதுதான் இல்லை. உலகம் உய்வு பெற, ஸனாதன தர்மம் தழைக்க, உலகெல்லாம் பாரதத்தின் பெருமையை பறைசாற்றிப் பிரார்த்தனை செய்தார்.
 "ஒரு நீர் நிலைக்கு (ஊருணிக்கு) எவ்வாறு பலபடித்துறைகள் உள்ளனவோ அதைப்போன்று பரம் பொருள் எனும் நீர் நிலைக்கும் பல்வேறு மதங்களின் பெயர்களில் பாதைகள் உள்ளன. எதன் வழியாக இறங்கினாலும் பரம் பொருள் எனும் நீர் நிலையை அடையலாம் . உதாரணமாக, தண்ணீர் என்ற ஒரு பொருளுக்கு பலமொழிகளில் பல பெயர்கள் இருக்கின்றன. ஒருவர் "பானி' என்கின்றார். ஒருவர் "நீலு' என்கின்றார். ஒருவர் "தீர்த்தம்' என்கின்றார். அயல் நாட்டார் "வாட்டர்' என்றழைக்கின்றார்கள். எப்படி அழைத்தாலும் தண்ணீர் ஒன்று தானே! அதேபோன்று எந்தப் பெயர் கொண்டு அழைத்தாலும் இறைவன் ஒருவனே!' என உலகிற்கு உரக்கச் சொன்னார்.
 ஸ்ரீ ஆதிசங்கரர் பரம்பரையில் வந்த தோதாபுரி என்ற மகானிடம் துறவு நிலை பெற்றார். பைரவி, பிராம்மணி என்ற யோகினிகள் யோக சாஸ்திர நிலைகளுக்குக் குருவானவர்கள். அவர்கள் இருவருமே ஸ்ரீராம கிருஷ்ணரை ஓர் அவதார புருஷர் என உலகிற்குப் பறை சாற்றினார்கள். உலகியல் ஆசைகளோ, செல்வத்தின் மீது சிறிதும் பற்றுதலோ இல்லாத தூய துறவியாக விளங்கினார். துறவுக்கென்ற காவி உடைகளைக் கூடத் துறந்தவராகத் திகழ்ந்தார். அன்பினாலே அனைவரையும் அரவணைத்தார். தீமை புரிந்தவர்களைக் கூட அன்பின் மூலமாக நல்லவர்களாக மாற்றினார்.
 ஒரு தாய் ஒரு முறை தன் குழந்தை இனிப்பு அதிகம் உண்கின்றான் நீங்கள் சொன்னால் இனிப்பு அதிகம் உண்பதை நிறுத்தி விடுவான். எனவே நீங்கள் சொல்லுங்கள் என வேண்டி நின்றார்.
 பகவானும் புன்னகைத்தவாறு இரண்டு மூன்று முறை அழைத்து வந்த போதும் ஏதும் கூறாமல் நான்காம் முறை வந்தபோது குழந்தாய்! இனிமேல் இனிப்பு அதிகம் உண்ணக் கூடாது என்று கூறினார்.
 தாய்க்கு சற்றுக் கோபம். ""குருவே! இதனைத் தாங்கள் முதலிலேயே சொல்லியிருக்கலாமே''! எனக் கேட்டார். அதற்கு பகவான், "அம்மா! நீங்கள் முதன் முறை அழைத்து வந்த போது நானும் அதிகம் இனிப்பு உண்டு கொண்டிருந்தேன். இப்போது தான் அதனை நிறுத்த முடிந்தது. எனவேதான் இன்று கூறினேன்'' என்றார் வெளிப்படையாக.
 தனது மனைவி சாரதையை அம்பிகை வடிவிலேயே கண்ட மஹா புருர் ஸ்ரீ ராமகிருஷ்ணர். சாக்ததந்திரத்தின் உச்ச நிலையான ஷோடசி பூஜையினை ஒரு புனித நாளில் அன்னை சாரதைக்கே செய்து, தன்னிடம் உள்ள அனைத்து தெய்வீக சக்திகளையும் அன்னைக்கு வழங்கி உலகிற்கு நன்மை செய்தார். அனைத்துப் பெண்களையும், மனைவி உட்பட அம்பிகையாகவே கருதி வழிபட்ட மஹா குருவாக உலகிற்கு வழிகாட்டினார்.
 யார் சீதையாக வந்தாரோ யார் ராதையாக வந்தாரோ அவரே அன்னை சாரதையாக உலகில் அவதரித்தார் என்னும் பெரிய செய்தியை உலகிற்கு வழங்கினார்.
 கணவனும், மனைவியும் தெய்வீகத் தம்பதியராக வாழ்ந்துகாட்டியவர்கள் இவர்கள். ஆரம்ப நாள்களில் பிற பெண்கள் கேட்கச் சொல்லி, பகவானிடம், அன்னை சாரதா தேவியார் நமக்கெனக் குழந்தைகள் வேண்டாமா? என்று கேட்டபொழுது பகவான் சிரித்துக்கொண்டே நமக்கென்று குழந்தைகள் பிறந்தால் நான்கைந்து பேர்கள் தான் பிறப்பார்கள். ஆனால் உன்னை ஒரு காலத்தில் கோடிக்காணக்கான குழந்தைகள் "அம்மா' என்று அழைக்கப் போகின்றார்கள் என்ற பேருண்மையை ஞானமாக உபதேசித்தார். இன்று அதுவே உண்மையாய் மிளிர்கின்றது.
 இந்த ஆண்டு, பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பிறந்த தினமும் (பிப்ரவரி 17) திதியும் ஒன்றாகவே ஒன்றாகவே வருகின்றது. உலகெங்கிலுமுள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடங்களிலும் கொண்டாடப் பெறும் ஜெயந்தி விழாவின் செய்தி (ஒவ்வோர்) மனித இதயத்திலும் அன்பை மதங்கடந்த ஆன்மீகத்தை விதைக்கட்டும் என்பதுதான்.
 - மீனாட்சி ஸ்ரீ நிவாஸன்
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com