நினைத்ததை நடத்தியருளும் அஷ்ட லிங்கங்கள்!

நினைத்ததை நடத்தியருளும் அஷ்ட லிங்கங்கள்!

உலகத்தை ஊழிபெருவெள்ளம் சூழ்ந்திருந்த நேரம். அனைத்து உயிரினங்களும் மடிந்துபோய் அமைதி குடிகொண்டிருந்தது

உலகத்தை ஊழிபெருவெள்ளம் சூழ்ந்திருந்த நேரம். அனைத்து உயிரினங்களும் மடிந்துபோய் அமைதி குடிகொண்டிருந்தது. அப்போது வேதங்களே வெள்வேல மரங்களாக அந்த வெள்ளத்திலும் நிமிர்ந்து நின்றன. இந்த இடத்தில் புதிய உயிர்களை படைக்க வேண்டும் என்பதற்காக சிவபெருமான் பார்வதி தேவியுடன் குடிகொண்டார். அத்ததலமே சென்னைக்கு அருகிலுள்ள

திருவேற்காடு!
திருவேற்காடு அருள்மிகு வேதபுரீஸ்வரர் ஆலயத்தைச் சுற்றி எட்டுத் திசைகளிலும் எட்டு லிங்கங்களை சிவபெருமானே ஸ்தாபிதம் செய்ததாக ஒரு கூற்று உண்டு. அதேசமயம் ஒவ்வொரு திசையிலும் அத்திசைகளுக்குரிய அஷ்திக்பாலகர்கள் லிங்கங்களை அமைத்து வேதபுரீஸ்வரரை நோக்கி தவம் செய்ததாகவும் திருவேற்காடு புராணம் இயம்புகிறது.

திருவேற்காடு ஆலயத்திற்கு நேர் கிழக்கில் இந்திரனால் வழிபடப் பெற்ற வள்ளிக்கொல்லை மேடு "இந்திரசேனாபதீஸ்வரர்' கோயில் (வேலப்பன் சாவடி- திருவேற்காடு சாலை) உள்ளது. இங்கு வழிபடுவதால் பதவி உயர்வு, வேலை வாய்ப்பு பெறலாம் என்பது ஐதீகம். திருவேற்காட்டிற்கு தென் கிழக்கில் உள்ள நூம்பல் தலத்தில் அமைந்துள்ள லிங்கம் அக்னி தேவனால் வணங்கப்பெற்ற "அக்னீஸ்வரர்' ( வேலைப்பன்சாவடி - நூம்பல் சாலை) ஆலயமாகும். இந்த அக்னீஸ்வரர் வெப்பம் தொடர்பாக நோய்களை களைந்தெறிபவர்.

தென் திசையிலுள்ள சென்னீர்குப்பத்தில் (பூவிருந்த வல்லி - ஆவடி சாலை) அமைந்துள்ள லிங்கம் எமலிங்கம் ஆகும். இறைவன் "கைலாசநாதர்' என்னும் பெயரில் எழுந்தருளியுள்ளார். ஆயுள் விருத்தி தந்து மரண பயத்தை நீக்குபவர் இத்தல இறைவன். தென்மேற்கில் உள்ள (பூவிருந்தவல்லி - ஆவடி சாலை) பாரிவாக்கம் என்னும் ஊரில் நிருதி லிங்கமாக "பாலீஸ்வரர்' எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இழந்த பொருள்களையும் பிரிந்த உறவுகளையும் மீட்டுத் தருபவர் இத்தல இறைவன். மேற்கில் உள்ள மேட்டுப்பாளையத்தில் (பூவிருந்தவல்லி - ஆவடி சாலை) கோயில் கொண்டு தடைகளைத் தகர்த்தெறிபவராக வருண லிங்கமாக, "ஜலகண்டீஸ்வரர்' கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார்.

திருவேற்காடு தலத்திற்கு வடமேற்கில் பருத்திப்பட்டு (பூவிருந்தவல்லி - ஆவடி சாலை) தலத்தில் கோயில் கொண்டு விளங்குபவர் வாயுதேவனால் வழிபடப்பெற்ற "வாழவந்த வாயுலிங்கேஸ்வரர்' பக்தர்களுக்கு நல்வாழ்வு வழங்குபவராக அருள்கிறார். வடக்கில் உள்ள சுந்தரசோழபுரம் ஊரில் (ஆர்.எம்.கே பள்ளி அருகில்) குபேரனால் வழிபடப்பட்ட "குபேரீஸ்வரர்' ஆலயம் உள்ளது. இத்தல இறைவன் நம் வேண்டுதல்களை வெற்றி அடைய வைப்பவர் என்றால் மிகையாகாது!

இவ்வூரை அடுத்து வடக்கிழக்கில் உள்ள சின்ன கோலடியில் (திருவேற்காடு- அயப்பாக்கம் சாலை) ஈசான்ய லிங்கமாக எழுந்தருளி கண் திருஷ்டி, செயல்களில் ஏற்படும் தடைகளைப் போக்குகிறார். இவ்வாறாக, திருவேற்காட்டு ஈசனாகிய வேதபுரீஸ்வர் ஆலயத்தைச் சுற்றி அஷ்டலிங்க ஆலயங்கள் அமைந்து மக்களுக்கு அஷ்ட ஐஸ்வர்யங்களையும் வழங்கி அருள்கிறார்கள். அமாவாசை பௌர்ணமி, சிவராத்திரி தினங்களில் பக்தர்கள், இந்த அஷ்ட லிங்கேஸ்வரரை வழிபட்டு வளம் பெறுகின்றனர் என்றால் மிகையாகாது.

- மோகனாமாறன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com