ஆனந்தம் தரும் ஆதவன் வழிபாடு!

"ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்' என்கிறது சிலப்பதிகாரம். நமக்குக் கண்கண்ட தெய்வமாக விளங்கும் சூரியனால் தான் உலகமே இயங்குகின்றது
ஆனந்தம் தரும் ஆதவன் வழிபாடு!

"ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்' என்கிறது சிலப்பதிகாரம். நமக்குக் கண்கண்ட தெய்வமாக விளங்கும் சூரியனால் தான் உலகமே இயங்குகின்றது என்கின்றன நமது புராணங்கள். "ஆழியுள் புக்கு, முகந்துகொடு ஆர்த்தேறி' என்கிறார் ஆண்டாள் நாச்சியார்.
 சூரியன் தன் கிரணங்களால் கடல் நீரை உறிஞ்சி, ஆவியாக்கி, மேகமாக்கி, குளிர்வித்து மழை பொழியச் செய்விக்கின்றார் என்று ஆன்மீகமும், அறிவியலும் நமக்குச் சொல்கின்றன. சூரியனைச் சுற்றியே பிற கோள்கள் வலம் வருகின்றன என்பதை நம் கோயில்களில் உள்ள நவக்ரஹ சந்நிதியில் சூரியனை மையப்படுத்தி மற்ற கிரகங்கள்அமைத்திருப்பதன் மூலம் புலனாகும்.
 வராஹமிகிரர், ஆரியபட்டர், பாஸ்கரர் போன்ற வானவியல் ஆராய்ச்சியாளர்கள், பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே வானவியல் சாஸ்திரத்தின் சிறப்பைப் பறைசாற்றி உள்ளனர்.
 மார்க்கண்டேய புராணத்தில்உலகத்தோற்றத்தின் போது முதன் முதலில் "ஓம்' என்ற ஓசை உண்டாயிற்று. அந்த ஓசையிலிருந்து தான் ஒளிமையமான சூரியன் தோன்றினான் என்கின்றது. சமீபத்தில் நாசா விஞ்ஞானிகள் சூரியனின் சுழற்சி ஓசையினைப் பதிவு செய்த போது அந்த ஓசையின் ஒலி "ஓம்' என்ற ஓசையுடன் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.
 சூரியன் வலம் வரும் தேருக்கு ஒரே ஒரு சக்கரம் மட்டுமே உள்ளது. அத்தேரினை ஏழு குதிரைகள் இழுக்கின்றன. இன்றைய அறிவியலும் ஏழு வண்ணங்களின் கலவையே வெண்மை நிறம் எனத் தெரிவிக்கின்றது. ஏழு குதிரைகளும் ஏழு நிறங்களாக உள்ளன. சூரியனின் தேரோட்டியாக அருணன் உள்ளார். சூரியனை ஒரு காலத்தில் முழுமுதற் கடவுளாகவே வழிபாடு செய்ததாக ஸ்ரீ ஆதிசங்கரர் வாக்கின் மூலம் அறிகின்றோம். ஸ்ரீ ஆதிசங்கரர் நெறிப்படுத்திய அறுவகை வழிபாட்டில் சூரிய வழிபாடும் ஒன்றாகும். அதற்கு சௌரம்' என்று பெயர்.
 ஸ்ரீ ராமபிரான் வெற்றி பெறுவதற்காக அகஸ்தியர் ஸ்ரீ ராமனுக்கு "ஆதித்ய ஹ்ருதயம்' அருளிச் செய்தார். இப்பாடல்களை இன்றும் பல்லாயிரம் பேர் பாடிப்
 பயன் பெறுகின்றார்கள். ஸ்ரீ ஆஞ்சநேயர் சூரியனிடம் சென்று வேதம் கற்றதாக புராணம் தெரிவிக்கின்றது. தமிழகத்தில் உள்ள பல ஆலயங்களில் சூரியனின் கதிர்கள் இறைவனின் திருமேனி மீது படர்ந்து விழும்படியான கட்டட அமைப்பு காணப்படுகிறது.
 ராமநாதபுரம் மாவட்டம், உப்பூர் என்னும் தலத்தில் விநாயகப் பெருமானைச் சுற்றி சூரிய ஒளி விழுமாறு ஆலயம் அமைக்கப் பெற்றுள்ளது. இதனால் இந்த விநாயகப் பெருமானுக்கு "வெயிலுகந்த விநாயகர்' என்றே பெயர். வட மொழியில் "ஆதவக்ரண சந்துஷ்ட கணபதி' என்று அழைக்கின்றார்கள்.
 தஞ்சை மாவட்டத்தில் உள்ள சூரியனார் கோவில் சூரியனுக்கு உரிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது. காயத்ரி மந்திரம் சூரியனை அடிப்படையாகக் கொண்டே அமையப் பெற்றதாகும். ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டு முற்றத்தில் பொங்கல் வைத்து சூரிய வழிபாடு செய்யும் வழக்கம் தமிழகத்தின் சில பகுதிகளில் காணமுடிகிறது.
 "தை பிறந்தால் வழி பிறக்கும்' - என்பர். உத்திராயண புண்ணிய காலத்தில் தைத்திங்கள் முதல் நாளில் நாம் பொங்கல் திருநாளாகக் கொண்டாடுகின்றோம். கிராமப் புறங்களில் பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப் பெறுகின்றது. புதுப்பானையில் புத்தரிசி இட்டு சூரியனுக்குப் பொங்கல் வைத்து, கரும்பு, பனங்கிழங்கு வைத்துப் படைத்து, குடும்பத்துடன் வழிபாடு செய்து மகிழ்கின்றார்கள்.
 அடுத்தநாளில் விவசாயத்திற்கான நமக்கு உதவிய கால்நடைகளை குறிப்பாக, மாடுகளை முன்னிறுத்தி அவைகளுக்கு நன்றிசெலுத்தும் விதமாக மாட்டுப் பொங்கலை கொண்டாடுகின்றோம். தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிகட்டு இந்த நாளில் தான் பெரும்பாலான கிராமங்களில் நடைபெறுகின்றது.
 இந்து சமயம், மனிதர்கள் மட்டுமன்றி ஏனைய விலங்குகளையும் கடவுள் வடிவத்தில் காண வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் காளை மாட்டினை சிவபெருமானுக்கு வாகனமாகவும் பசுவினை காமதேனுவாகவும் போற்றுகிறது.
 பொங்கல் திருவிழாவே ஒரு நன்றி செலுத்தும் திருவிழாவாகும். இதை அடுத்த தலைமுறையும் அறியும் வண்ணம் செய்தல் நமது கடமையாகும்.
 - இலக்கியமேகம் ந. ஸ்ரீநிவாசன்
 14-01-2018
 பொங்கல் பானை வைக்க நல்ல நேரம்: காலை 07.30 மணி முதல் 10.00 மணி வரை.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com