குடும்ப அமைப்பை ஆசீர்வதிக்கும் கர்த்தர்!

பாசமிக்க அன்னையும் அன்புமிக்க தந்தையும் பிள்ளைகளும் சேர்ந்து வாழும் வாழ்க்கை கர்த்தர் தந்தது.
குடும்ப அமைப்பை ஆசீர்வதிக்கும் கர்த்தர்!

பாசமிக்க அன்னையும் அன்புமிக்க தந்தையும் பிள்ளைகளும் சேர்ந்து வாழும் வாழ்க்கை கர்த்தர் தந்தது. கர்த்தர் வீட்டின் அமைப்பை தந்தார். குடும்ப அமைப்புதான் உலக மக்களின் வாழ்வுக்கு அடிப்படை. ஆண்டவர் இயேசு பாலகனாக பிறந்து தாய் தந்தையுடன் சமூக அமைப்பை பெருமை படுத்தினார். இயேசுவின் குடும்பத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்று வேதாகமத்தில் உள்ளது. 
"பிள்ளை(இயேசு) வளர்ந்து, ஆவியிலே பெலன் கொண்டு, ஞானத்தினால் நிறைந்தது. தேவனுடைய கிருபையும் அவர்மேல் இருந்தது. இயேசுவின் தாய் தகப்பன்மார் வருடந்தோறும் பண்டிகை கொண்டாட எருசலேமுக்கு போனார்கள். பன்னிரண்டு வயதான இயேசுவும் தம் பெற்றோர் வேண்டுதல்படி போனார். எருசலேமில் பண்டிகை கொண்டாடி வழிபாடு முடித்து தேவ ஆலயத்திலிருந்து புறப்பட்டார்கள். தாய்மார், தகப்பன்மார், வாலிபர், சிறுவர் என கூட்டம் கூட்டமாக தோத்திர பாடல்கள் பாடிக்கொண்டே திரும்பினார்கள். 
பிள்ளையாகிய இயேசு எருசலேமில் தங்கிவிட்டார். இது, அவர் பெற்றோருக்கு தெரியவில்லை. ஒருநாள் பிரயாணப்பட்டு இயேசுவை தேடினார்கள். அவர்கள் பின்னால் வந்துகொண்டிருந்த உறவினரிடம் விசாரித்தார்கள். இயேசு இல்லாததினால் யோசேப்பும் மரியாளும் எருசலேமுக்கு சென்று அங்கும் தேடினார்கள். எங்கு தேடியும் கிடைக்காததினால் கடைசியாக தேவ ஆலயத்தில் சென்று தம் மகன் கிடைக்க ஜெபிக்க சென்றனர். 
தேவ ஆலயத்தில் அவர்கள் கண்ட காட்சி அவர்களுக்கு மிக ஆச்சரியமாக இருந்தது. சிறுவன் இயேசு வேத அறிஞர் ஆசாரியர் நடுவில் அமர வைக்கப் பட்டு இயேசுவிடம் வேத அறிஞர்களுக்கு புரியாத வேத பகுதிகளை வினவினார். அதற்கு இயேசு வேத ரகசியங்களை அவர்களுக்கு தெளிவு படுத்தினார்.
மரியாளும் யோசேப்பும் இயேசுவிடம் சென்று, "மகனே உன்னை எங்கெல்லாமோ தேடினோம்' என்றார்கள். இயேசு அவர்களிடம், " நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்க வேண்டியதென்று அறியீர்களா?' என்றார். பின்பு அவர் அவர்களுடனே கூடப் போய் நாசரேத்தூரில் சேர்ந்து அவர்களுக்கு கீழ்ப்படிந்திருந்தார். இயேசுவானவர் ஞானத்திலும், தேவ கிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார். (லுக்கா 2:40-52)
இயேசுவின் குடும்பம் ஏழை குடும்பம், அவர் தாய் எளிமையானவர், தந்தை ஒரு தச்சர். இயேசு தேவகுமாரனாக இருந்தாலும் அவர்களுக்கு கீழ்படிந்திருந்தார். பத்து கட்டளைகளில் "நீ நன்றாய் இருப்பதற்கும் நெடுநாள் வாழ்வதற்கும் உன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக'' என்பதை தம் வாழ்வில் பின்பற்றினார். தம் தந்தையுடன் தச்சு தொழிலை செய்தார். தம் முப்பது வயது வரை வீட்டில் தங்கி கீழ்படிதல் உள்ள மகனாக இயேசு வளர்ந்தார்.
நாமும் இயேசுவைப்போல் நமது பெற்றோரை கனம் பண்ணி, அவர்களுக்கு கீழ்படிந்து வாழ்வோம். நமது வீட்டை தேவனால் ஆசீர்வதிக்கப்பட்ட வீடாக்குவோம். பெற்றோரை அவர்கள் முதுமையில் பாதுகாப்போம். குழந்தை செல்வங்களை போற்றுவோம். நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகமாக்குவோம். ஒவ்வொரு இல்லமும் சிறக்கும் போது, நம் சமுகம், நாடு, உலகம் முழுதும் சிறக்கும். ஏழை எளிய குடும்பத்தினரை நமது உறவினரைப்போல் எண்ணி உதவுவோம். பிள்ளைகள் நாம் நமது பெற்றோரின் தியாக வாழ்வை போற்றுவோம்.
- தே. பால் பிரேம்குமார்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com