பார்வேட்டை விழாவும் பழைய சீவரமும்!

நரசிம்மர் தூணிலிருந்து உக்ரரூபமாய் வெளிப்பட்டு இரண்ய கசிபுவை ஸம்ஹாரம் செய்தார். மஹாலட்சுமியும் நரசிம்மர் அருகில் செல்ல தயக்கமாய் இருந்தார். எனவே அனைத்து தேவர்களும்
பார்வேட்டை விழாவும் பழைய சீவரமும்!

நரசிம்மர் தூணிலிருந்து உக்ரரூபமாய் வெளிப்பட்டு இரண்ய கசிபுவை ஸம்ஹாரம் செய்தார். மஹாலட்சுமியும் நரசிம்மர் அருகில் செல்ல தயக்கமாய் இருந்தார். எனவே அனைத்து தேவர்களும் கேட்டுக்கொண்டபடி பக்த பிரஹலாதன் நரசிம்ம சுவாமியிடம் சென்று தாங்கள் கோபம் தனிந்து எங்களை ரட்சிக்க வேண்டுமென பிரார்த்தனை செய்தான்.
 நரசிம்ம சுவாமி கோபம் தணிந்து சாந்தமானார். பிறகு, லட்சுமி தேவியும் பெருமான் பக்கத்தில் வந்து நிற்க, நரசிம்மரும் லட்சுமியை தன் இடது மடியில் அமர்த்திக் கொண்டு சாந்த லட்சுமி நரசிம்மராக காட்சியருளிய தலமே பழைய சீவரம் ஆகும். இங்கு அவர், அத்திரி, பிருகு, மார்க்கண்டேய முனிவர்களுக்கும் வரம் தந்தருளினார். பழைய சீவரத்தில் சிறிய குன்றின் மீது லட்சுமி நரசிம்மர் மிகப் பெரிய திருமேனியுடன் கம்பீரமாகவும், கனிவாகவும் காட்சி தருகிறார். இவரை தரிசிப்பவர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றி அருள்புரிகிறார். முக்கியமாக, திருமணத் தடை , புத்திர பாக்கியத் தடையை நீக்கி அருள்கிறார். சத்ரு பயம் நீங்குவதோடு மனோ வியாதிகளுக்கும் நிவாரணம் கிடைக்கிறது.
 தாயார் கோபிலவல்லி தனிச் சந்நிதியில் சிறிய திருமேனியாக காட்சியளிக்கிறார். தாயாரின் உத்ஸவரும் நரசிம்மரின் மூலஸ்தானத்திலேயே பெருமானுடன் காட்சியளிக்கிறார். பொங்கலுக்கு மறுநாள் காஞ்சியிலிருந்து இச்சந்நிதிக்கு வரதர் எழுந்தருளுகிறார். காஞ்சியில் முதல் முதலில் அத்தி மரத்தால் ஆன மூலவர் அமைந்திருந்ததால் காலக் கிராமத்தில் அச்சிலை ரூபம் பின்னப்பட்டார். எனவே மூலமூர்த்தியை, கல் சிலையாக அமைத்தனர். அத்திமரத்தாலான பெருமானை அனந்த சரஸ் புஷ்கரணியில் பாதுகாப்பாக வைத்தனர். 40 வருடத்திற்கு ஒரு முறை அவரை வெளியே எடுத்து தரிசனத்திற்காக வைப்பார்கள். 2019 -இல் அத்திவரதன் அடியார்களுக்கு காட்சி தருவார்.
 தற்போதைய வரதரின் சிலா ரூபமான அமைப்புக்கு பழைய சீவரத்திலிருந்து தான் கல் எடுக்கப்பட்டு வந்ததாம். அந்த நினைவை போற்றும் வண்ணம், பொங்கலுக்கு மறுநாள் இங்கு காஞ்சி வரதராஜப் பெருமாள் எழுந்தருளுகிறார். இதுவே, "சீவரம் பார்வேட்டை உத்ஸவம்' என்ற திருவிழாவாக வருடந்தோறும் நடைபெற்று வருகிறது. வரதராஜர் இங்கு விசேஷமாக பூஜிக்கப்படுகிறார். அதற்கென்றே தனி மண்டபமும் இத் திருக்கோயிலில் அமையப்பெற்றுள்ளது. பொங்கல் திருநாளில் இங்கு பக்தர்களின் கூட்டம் அலைமோதும். அன்று வரதராஜர், பழைய சீவரம் பெருமாள், அருகில் உள்ள திருமுக்கூடல் ஸ்ரீநிவாசர் மற்றும் காவாந்தண்டலம், பொற்பந்தல், சாலவாக்கம் எம்பெருமான்களையும் ஒருசேர தரிசிக்கலாம்.
 இத்தலத்தின் அருகில் பாலாறு, செய்யாறு மற்றும் வேகவதி ஆறுகள் சங்கமமாகின்றன. இதனை, தென்னகத்தின் திரிவேணி சங்கமம் எனலாம். இவ்விடம் திருமுக்கூடல் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலம் செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் மார்க்கத்தில் அமைந்துள்ளது. பார்வேட்டை நன்னாள் 15.01.2018 இல் அமைகிறது.
 - எம். என். ஸ்ரீநிவாசன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com