பழநி பாத யாத்திரை!

பழநி பாத யாத்திரை!

பாதயாத்திரை அல்லது தீர்த்தயாத்திரை செய்வது இந்து சமய வழிபாட்டின் ஒரு பகுதியாக இருப்பதுடன் வாழ்வின் எல்லா நிலைகளிலும் ஒரு அங்கமாகவும் கருதப்படுகின்றது.

பாதயாத்திரை அல்லது தீர்த்தயாத்திரை செய்வது இந்து சமய வழிபாட்டின் ஒரு பகுதியாக இருப்பதுடன் வாழ்வின் எல்லா நிலைகளிலும் ஒரு அங்கமாகவும் கருதப்படுகின்றது. அக்காலத்தில் காசி முதல் ராமேஸ்வரம் வரையிலும் அதே போன்று இங்கிருந்து காசிக்குச் செல்வதும் ஒரு பெரிய கடமையாகவே சொல்லப்பட்டது. கல்வி கற்பது பிரம்மச்சர்யத்திலும், இல்லற தர்மம் கிருஹஸ்தாச்ரமத்திலும், பாதயாத்திரை வழிபாடு ஆகியவை வானபிரஸ்தத்திலும் கூறப்பட்டது.
தென்மாவட்டங்களில் அதுவும் குறிப்பாக, செட்டிநாட்டில் பாதயாத்திரைகள் பிரபலம். பழநி பாதயாத்திரை, அறுபடை வீடுகள் பாதயாத்திரை, தேவாரத் தலங்கள் பாதயாத்திரை, சபரிமலை பாதயாத்திரை, ராமேஸ்வரம் - காசியாத்திரை என சொல்லிக்கொண்டே போகலாம்.
இவற்றிக்கெல்லாம் அடிப்படை பழநி பாதயாத்திரை ஆகும். சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு வலையப்பட்டியைச் சார்ந்த அன்பர் குமரப்பன் என்பவர் உப்பு வியாபாரம் செய்வதற்காக பழநி சென்றார். தனது வியாபாரத்தில் கடவுளையும் ஒரு கூட்டாளி ஆக்கிக்கொண்டார். அவர் தொடங்கி வைத்ததே "பழநி பாதயாத்திரை' ஆகும், ஒருவர், இருவர் எனத்தொடங்கி நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் விரிந்து இன்று லட்சம் பேர் பாதயாத்திரை மேற்கொள்கின்றனர். ஆண்கள், பெண்கள் ஏன் கைக்குழந்தைகள் கூட தங்கள் தாய் தந்தையரின் தோளின் மீதேறி யாத்திரையில் பங்கு கொள்கின்றனர்.
சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களின் குக்கிராமத்தில் கூட கார்த்திகை மாதத்திலிருந்து நேர்த்தியாக விரதம் தொடங்கி தை மாதம் வரை முருகப்பெருமான் திரு உருவப்படத்தினை வைத்து பூஜைகள், பஜனைகள் என்று ஒரு பக்தி மணம் கமழும் சூழலில் இருப்பர். தைப் பூசத்திற்கு எட்டு நாள்கள் முன்பு அந்தந்த ஊர்களிலிருந்து காவடிகட்டி நகர் வலம் வந்து குன்றக்குடி நோக்கி முதலில் பயணப்படுவர். அனைத்து ஊர்களிலும் வரும் காவடிகள் குன்றக்குடியில் ஒன்று கூடி அங்கிருந்து ஆறு நாள்கள் நடைப்பயணம் மேற்கொள்வர்.
ஒவ்வொரு ஊரில் இரவு தங்கி காவடி பூஜையும், வேல் பூஜையும் நடக்கும். அதுவும் குன்றக்குடிக்கும் பிள்ளையார் பட்டிக்கும் இடையே உள்ள மயிலாடும் பாறையில் முன்னூற்றுக்கும் மேற்பட்ட காவடிகள் (சக்கரைக் காவடி) வந்து கிளம்பும் காட்சி மெய்சிலிர்க்கும் நிகழ்ச்சியாக அமையும். நகரத்தார் காவடிகளை பூசத்திலிருந்து மூன்றாம் நாளான மகத்தில் செலுத்தி அபிஷேக ஆராதனைகளைச் செய்து பழநியாண்டவனை தரிசனம் செய்வார்கள். மீண்டும் காவடிகளைத் தோளில் சுமந்த வண்ணம், அவரவரின் ஊர் திரும்புவார்கள்.
பாதயாத்திரை செல்வதன் மூலம் உடல்நலம் மேம்படுகின்றது. மனநலம் சீராகின்றது. சமுதாயத்துடன் இணைந்து செயல்படும் தன்மை உருவாகின்றது. பக்திபரவசத்துடன் தமிழ்ப்பாடல்பளைப்பாடிய வண்ணம் பழநியாண்டவனை வேண்டி இந்த பாதயாத்திரைக்குழு ஜனவரி- 22 ஆம் தேதி தேவகோட்டை நகரப் பள்ளிக்கூடத்தில் காவடிகட்டி பூஜைக்குப் பிறகு புறப்படுகின்றது. குன்றக்குடியில் அனைத்து ஊர்களிலிருந்து வரும் குழுக்கள் கூடி அங்கிருந்து ஜனவரி 25 -இல் யாத்திரையை தொடர்கின்றனர்.
- மீனாட்சி ஸ்ரீநிவாஸன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com