ஆதி சிதம்பரத்தில் ஆனித் திருமஞ்சனம்!

அருட்பெருஞ்சோதியான எம்பெருமான் தனிப்பெருங்கருணையினால் இவ்வுலகிற்கு முதன் முதலாக எழுந்தருளிய திருத்தலம் "உத்தரகோசமங்கை' ஆகும்.
ஆதி சிதம்பரத்தில் ஆனித் திருமஞ்சனம்!

அருட்பெருஞ்சோதியான எம்பெருமான் தனிப்பெருங்கருணையினால் இவ்வுலகிற்கு முதன் முதலாக எழுந்தருளிய திருத்தலம் "உத்தரகோசமங்கை' ஆகும். இவ்வுலகம் தோன்றுவதற்கு முன்பே இத்தலம் தோன்றியது என்றும் கூறுவதும் உண்டு. எனவே இப்பகுதியில் "மண்முந்தியோ மங்கை முந்தியோ?" என்ற பழமொழியும் உண்டு. இத்தகு சிறப்புமிக்க தலத்தில் எழுந்தருளியுள்ள ஈசன், மங்கள நாதராகவும், அம்பிகை, மங்கள நாயகியாகவும் காட்சி தந்து அருள்பாலிக்கின்றனர். பாண்டிய மன்னர்களின் திருப்பணிகளால் சிறந்து விளங்கிய தலம் இது.
ஆதிகாலத்தில் இத்தலம் சிவபுரம் எனவும், தட்சிண கைலாசம் என்றும் அழைக்கப் பெற்றுள்ளது. இவை தவிர, ஆதிசிதம்பரம், மங்களபுரி, வியாக்ரபுரம், பிரம்மபுரம், இலந்திகைப்பள்ளி, சதுர்வேதிமங்கலம் போன்ற திருப்பெயர்களாலும் அழைக்கப்பெற்றுள்ளது.
இத்தலத்தில் உள்ள கல்வெட்டுகளில் ராவணன் மனைவி மண்டோதரியின் பெயர் இடம் பெற்றுள்ளது. எனவே, இது ராமாயண காலத்திற்கு முந்தையது என்கின்றனர். சங்க இலக்கத்தில் குறிக்கப்பெறும் "இலந்தி வகை பள்ளி' என்பது உத்தரகோசமங்கையையே குறிக்கின்றது. இத்தலத்தின் தலவிருட்சம் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படுகிறது. இலந்தை மரத்தடியில் எழுந்தருளியருளும் பெருமான் "மங்கைப்பெருமான்' எனப்படுகின்றார்.
திருவிளையாடற் புராணத்தில் சிவபெருமான், அம்பிகையை பரதவர் மகளாகுமாறு சபிக்க, தேவி பரதவர் மகளாகப் பிறந்து, ஈசனையே நினைந்து பூஜை செய்து சாபவிபோசனம் பெற்று ஈசனை மணம் புரிந்த தலம், உத்தர கோசமங்கை ஆகும்.
இத்திருத்தலத்தில் திருமணம் செய்து கொள்வது நலம் பயக்கும் என்பதால் பக்தர்கள் தங்கள் இல்லத் திருமணத்தினை இங்கு நடத்துகின்றனர்.
மூலவர் மங்கள நாதர், அனைத்து விதமான மங்கலங்களையும் அருளவல்லவர். மாணிக்கவாசகப் பெருமானுக்கு ஈசன் காட்சி கொடுத்து அருளியதால் "காட்சி கொடுத்த நாயகர்' என அழைக்கப் பெறுகிறார். இதற்கு சாட்சியாக மகாமண்டபத் தூணில் மாணிக்கவாசகருக்கு ஈசன் காட்சி தந்து உபதேசம் செய்யும் காட்சி அழகிய சிற்ப வடிவில் காணப்பெறுகின்றது. பொதுவாக, சிவன்கோயில்களில் சுவாமிக்கு தாழம்பூ சார்த்தப்பெறுவதில்லை. இத்தலம் அடிமுடி தேடும் புராணத்திற்கு முந்தைய தலமாகையால் இங்கே நித்ய பிரதோஷ வேளை என அழைக்கப்படும் மாலை நேர பூஜையின் போது தாழம்பூ சார்த்தப்பெறுவது சிறப்பம்சமாகும். இத்தலத்து ஈசனை வேத வியாசரும், பராசர முனிவரும், காகபுஜண்டரும், மிருகண்டு முனிவரும் வழிபாடு செய்து அருள் பெற்றுள்ளனர். 
சிவபெருமானால் பரதக்கலை முதன் முதலில் உலகுக்கு அறிமுகம் செய்யப்பட்ட திருத்தலம் இதுவாகும். இங்கே உள்ள நடராஜப்
பெருமான் மரகதக்கல்லினால் ஆனவர். ஆண்டு முழுவதும் இத்திருமேனியில் சந்தனம் சார்த்தப் பெற்றிருக்கும்.
வருடத்தில் இருமுறை அதாவது ஆனித்திருமஞ்சனம் (இவ்வாண்டு ஜூன் 20) மற்றும் மார்கழி "திருவாதிரை' ஆகிய நாள்களில் (முதல் நாள்) மட்டுமே சந்தனம் களையப்பெற்று அபிஷேக ஆராதனைகள் சிறப்பாக நடத்தப்படும். பின்னர், மீண்டும் சந்தனம் சார்த்தப்பெறுகிறது. களையப் பெற்ற சந்தனம், பக்தர்களுக்கு பிரசாதமாக அளிக்கப் படுகிறது. 
இச்சந்நிதியில், தினமும் மதியம் 12.00 மணிக்கு மரகத லிங்கத்திற்கு அபிஷேகம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. நடராஜப்பெருமான் இங்கு அறையில் (கருவறை) ஆடியப் பின்னர், சிதம்பரம் அம்பலத்தில் ஆடியதாக வரலாறு. எனவே இது "ஆதி சிதம்பரம்' ஆகும். இங்குள்ள பஞ்சலோக நடராஜப்பெருமான் விக்ரகத்தில் வலதுபுறம் ஆண் ஆடும் அமைப்பிலும், இடதுபுறம் பெண் ஆடும் அமைப்பிலும் இருப்பது நளினமான கலைப்படைப்பாகும்.
இத்திருக்கோயிலின் வாசல்பகுதியில் உள்ளே நுழையும் போது வலது புறம் விநாயகரும், இடது புறம் முருகனும் மாறி இருப்பது வியப்பிற்குரிய ஒன்றாகும். இந்திரன் இத்தலத்தில் முருகப்பெருமானுக்கு ஐராவதத்தினைப் பரிசாக அளித்ததால் இத்தலத்து முருகனுக்கு யானை வாகனமாக உள்ளது. 
அம்பிகை மங்களேஸ்வரி அருள் பொழியும் அழகுத் தெய்வம். தமிழில் "சுந்தரநாயகி' என்றழைக்கின்றனர். இந்த அம்பிகை மீது சுப்பிரமணிய பிள்ளை என்பவர் பிள்ளைத் தமிழ் 1901-இல் பாடியுள்ளார்.
ஆலயத்தின் அருகே ஆதிகாலத்து வராஹி அம்மன் ஆலயம் பேரருளோடு விளங்குகின்றது. ஆண்டு முழுவதும் உற்சவங்கள் நிறைந்த இத்தலத்தில் சித்திரை மாதம் நடைபெறும் திருக்கல்யாண உற்சவம் சிறப்பானதாகும்.
இத்தலத்தில் மாணிக்க வாசகர் பாடியருளிய "திருப்பொன்னூல்" எனும் பாடலே உலகில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் அர்த்தஜாம பூஜையின் போது பாடப்பெறுகின்றது. பெருமை வாய்ந்த இத்திருக்கோயிலை ராமநாதபுரம் சமஸ்தானம்(தேவஸ்தானம்) மிகச்சிறப்பாக பராமரித்து வருகிறார்கள். மிகப்
பெரிய ஆலயமாதலால் தொடர்ந்து திருப்பணிகள் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றது. ராமநாதபுரத்தில் இருந்து 18 கி.மீ தொலைவில் இத்தலம் உள்ளது. 
தொடர்புக்கு: 04567 -221213.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com