கருணைமிகு கருணாகரன்!

ராவண வதம் முடிந்து லங்காப்பட்டிணத்திலிருந்து சீதாப்பிராட்டியோடு ஸ்ரீராமபிரான் புஷ்பகவிமானத்தில் அயோத்தியை நோக்கிச் செல்லுகையில், ஓரிடத்தில் புஷ்பகவிமானம் ஏனோ மேற்கொண்டு பயணிக்க முடியாதபடி
கருணைமிகு கருணாகரன்!

ராவண வதம் முடிந்து லங்காப்பட்டிணத்திலிருந்து சீதாப்பிராட்டியோடு ஸ்ரீராமபிரான் புஷ்பகவிமானத்தில் அயோத்தியை நோக்கிச் செல்லுகையில், ஓரிடத்தில் புஷ்பகவிமானம் ஏனோ மேற்கொண்டு பயணிக்க முடியாதபடி மலை ஒன்று தடுத்தது. காரணம் அறியும்பொருட்டு ஸ்ரீராமர் கீழே நோக்குகையில் கிளியாற்றின் கரையில் விபண்டக முனிவரின் ஆஸ்ரமம் தென்பட்டது.

அப்போதுதான் அம்முனிவருக்கு தான் தம்பதி சமேதராய் அவரது குடிலுக்கு வருவதாக வாக்குறுதி கொடுத்தது நினைவுக்குவந்தது. உடனே சீதாதேவியின் கையை பற்றிக்கொண்டு இளைய பெருமாளுடன் புஷ்பகவிமானத்திலிருந்து இறங்கி விபண்டகர் முனிவருக்கு காட்சி கொடுத்ததார். 

அயோத்திக்கு திரும்ப வேண்டிய அவசர நிலையிலும் அவர் காட்டிய கருணை மிகுந்த இந்த அற்புதமான வரலாறு "பிரம்மவைவர்த்த புராணத்தில்" சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. ஸ்ரீ ராமர், சீதாப்பிராட்டியின் கரம் பற்றி மங்களகரமாக முதன் முதலில் காட்சியளித்த அந்த இடம்தான் தற்போது "மதுராந்தகம்' என அழைக்கப்படும், புண்ணிய பூமியாகும். விமானத்தைத் தடுத்த மலை அமைந்த பகுதி தற்போது மலைப்பாளையம் (கருங்குழி அருகில்) என்று அழைக்கப்படுகின்றது. இம்மலையில் ஸ்ரீராமபிரான் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகக் கூறப்படும் ஆதிரங்கநாதர் சந்நிதி உள்ளது.

ஒரு காலத்தில் மகிழ மரங்கள் அடர்ந்த காட்டுப்பிரதேசமாய் விளங்கி இனிமையான மனமகிழ்ச்சித் தரக்கூடிய எல்லைகளைக் கொண்ட ஊராகத் திகழ்ந்ததால் மதுராந்தகம் (மது + அந்தகம்) என்ற பெயர் ஏற்பட்டதாம்.

ராஜராஜசோழனுக்கு முன்னாள் ஆண்ட உத்தமசோழன் என்னும் மதுராந்தகச் சோழன் வேதம் ஓதும் அந்தணர்களுக்கு மானியமாகக் கொடுக்கப்பட்டு "மதுராந்தக சதுர்வேதி மங்கலம்' என்று வழங்கப்பட்டு பின்பு மருவி மதுராந்தகம் என பெயர் பெற்றதாக கல்வெட்டுச் செய்திகள் குறிப்பிடுகின்றன. 

சுகரிஷி, விபண்டக மகரிஷி போன்ற முனிவர்கள் தவப்பயன் பெற்றது; திருமழிசையாழ்வார் சித்திபெற்றது; ஸ்ரீ வைஷ்ணவ சித்தாந்த நிலை காட்டிய பெருமை பெற்ற ஸ்ரீராமனுஜர் பெரியநம்பியிடம் பஞ்ச சமஸ்காரம் எனும் வைணவ தீட்சைப்பெற்றது இத்தலமே! முற்பிறவியில் யாதவப் பிரகாசர் உடும்பாக பிறந்து இங்கு சிந்திய பாகவதபிரசாதத்தைச் சாப்பிட்டதனால் இப்பிறவியில் அந்தணராகப் பிறவி எடுத்தது என மேலும் பல சிறப்புகள் இத்தலத்திற்கு உண்டு.

இத்தலத்தில் கோயில் கொண்டு உறையும் எம்பெருமான் "ஏரி காத்தராமர்' என்று சிறப்பித்து அழைக்கப்படுகின்றார். கி.பி. 1795 - 98 -இல் செங்கற்பட்டு மாவட்ட கலெக்டராக இருந்த கர்னல் லியோனல் பிளேஸ்துரை என்பவருக்கு இளைய பெருமாள் சமேதராய் ஸ்ரீராமன் சேவை சாதித்தாகவும், அன்று பெய்த மழையில் ஏரி உடையாமல் காத்ததாகவும் அதனால் "ஏரிகாத்த ராமர்' என்ற திருநாமம் ஏற்பட்டதாகவும் வரலாறு. நன்றிக்கடனாக ஜனகவல்லித்தாயார் சந்நிதியை அந்த கும்பினி கலெக்டர் சீர் செய்து கொடுத்தார். இச்செய்தி உரிய ஆவணமாக இன்றும் ஆலயத்தில் உள்ள கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.


இத்தலத்தில் உறையும் பெருமானை பெரியநம்பிகள், உடையவர், நிகமாந்த மகாதேசிகர், மணவாள மாமுனிகள் முதலிய வைணவ ஆசார்யர்கள் பலமுறை மங்களாசாசனம் செய்ததாகவும் தெரியவருகின்றது. இங்குள்ள தலமரம் "வைகுண்ட வர்த்தனம்' என்னும் சிறப்புப் பெயர் கொண்டு விளங்குகிறது. ஸ்ரீராமானுஜருக்கு பஞ்ச சமஸ்காரம் செய்வதற்கு உபயோகப்படுத்தப்பட்ட சங்கு சக்ர முத்திரைகள், பூஜாபாத்திரங்களை இவ்வாலயத்தில் தரிசனம் செய்யலாம். இங்கு திவ்ய மந்திரம் உபதேசம் செய்ததால் "திவ்யம் விளைந்த திருப்பதி' என இத்தலத்திற்கு ஒரு பெருமை உண்டு. வைணவ அடியார்கள் தங்கள் வாழ்நாளில் பின்பற்ற வேண்டிய நெறிகளில் "மதுராந்தகத்து மண்ணை மிதிக்க வேண்டும்" என்ற ஒரு நியதியும் உண்டு.

அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயிலில் பிரதி ஆனிமாதம் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். உற்சவ காலங்களில் பிரதிதினம் ஸ்ரீ கருணாகரப்பெருமாள் உற்சவ மூர்த்தியும், ஏழாவது நாளில் ஸ்ரீராமபிரான் உற்சவ மூர்த்தியும் பவனி வந்து அருளுகின்றனர். 

இவ்வாண்டு உத்சவம், ஜூன் 22 கொடியேற்றத்துடன் துவங்குகின்றது. ஜூன் 24 - கருடஸேவை. ஜூன் 26 - நாச்சியார் திருக்கோலம். ஜூன் 28 - பெரிய பெருமாள் புஷ்பக

விமான சேவை, ஜூன் 29 - திருத்தேர் பவனி. 
தொடர்புக்கு: 97916 60150 / 88706 30150.
- எஸ்.வெங்கட்ராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com