பங்குனியில் பொங்கிய கங்கை!

தனக்கு நிர்ணயக்கப்பட்டுள்ள ஆயுட்காலமாகிய பதினாறு வயதிற்குள் எவ்வளவு தலங்களைத் தரிசிக்க முடியுமோ அத்தனையும் தரிசிக்க ஆவல் கொண்டார் மார்க்கண்டேயர்.
பங்குனியில் பொங்கிய கங்கை!

தனக்கு நிர்ணயக்கப்பட்டுள்ள ஆயுட்காலமாகிய பதினாறு வயதிற்குள் எவ்வளவு தலங்களைத் தரிசிக்க முடியுமோ அத்தனையும் தரிசிக்க ஆவல் கொண்டார் மார்க்கண்டேயர். தான் செல்லும் ஆலயங்களில் உள்ள லிங்க மூர்த்திகளுக்கு கங்கை நீர் கொண்டு அபிஷேகம் செய்து இறையருள் வேண்டி வருகையில், அவ்வரிசையில் 107 ஆவது தலமாக திருக்கடவூர் அருகிலுள்ள திருமெய்ஞ்ஞானம் (கடவூர் மயானம் - காவிரித் தென்கரையில் 48 ஆவது தலம்) 
பிரமபுரீசுவரர் ஆலயத்திற்கு வந்தார். அங்கு அபிஷேகம் செய்ய நினைக்கையில் கையில் கொண்டு வந்த கங்கை நீர் தீர்ந்து விட்டது. மனக்கிலேசம் அடைந்த மார்க்கண்டேயர் தனக்கு ஏற்பட்ட சோதனையை எண்ணி இறைவனை வேண்டுகையில், அசரீரி வாக்காக, "அவ்வூரில் மூன்று கிணறு தென்படும் என்றும், அதில் எந்த கிணற்றில் "பிஞ்சிலம்' என்னும் (ஒரு வகை மல்லிகைச்செடி - வாசனை இல்லாதது) "பூஞ்செடி வளர்ந்திருக்குமோ அதில் கங்கை நீர் கிடைக்கும் என்றும் இறையருள் கிட்டியது. புளகாங்கிதம் அடைந்த மார்க்கண்டேயர் அவ்வாறே அந்நீரைக் கொண்டு பிரம்மபுரீசுவரருக்கு அபிஷேகம் செய்த பின் அடுத்தக் கட்டமாக தனது 108 ஆவது தல யாத்திரையாக அருகிலுள்ள திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரருக்கு அந்த கங்கை நீரையும் பிஞ்சிலப் பூஷ்பங்களையும் கொண்டு சென்று அபிஷேகம் செய்து அர்ச்சித்தார். இங்கு தான் அவரது ஆயுட்காலம் முடியும் தருணத்தில் சிவபெருமானே லிங்கத் திருமேனியிலிருந்து வெளிப்பட்டு, எமதர்மனை சம்ஹாரம் செய்து மார்க்கண்டேய ரருக்கு என்றும் 16 வயது உடையவராக அதாவது சிரஞ்சீவியாக வாழும் நிலைக்கு அருளியதாக புராண வரலாறு கூறுகின்றது.

மார்க்கண்டேயருக்காக திருக்கடவூர் மயானத்தில் உள்ள கிணற்றில் (கூபம்) கங்கை ஆர்பரித்து வந்தது ஒரு பங்குனி மாதம் அசுவினி நட்சத்திரம் கூடிய சுப நாளாகும். ஆதலின் இத்தீர்த்தம் "காசித்தீர்த்தம்' எனவும் "அசுவனி தீர்த்தம்' எனவும் சிறப்பித்து வழங்கப்படுகின்றது. இன்றும் பங்குனி அசுவனியில் இக்கிணற்று நீர் கங்கை தீர்த்தமாக மாறுவதாக ஐதீகம். அந்நாளில் நீராடுவது சிறப்பாகும். தற்போது இக்கிணற்று நீரை கடவூர் வீரட்டேசுவரருக்கு தினசரி அபிஷேகத்திற்கு மட்டும் பயன்படுத்துகின்றனர். பங்குனி அசுவனி நாளில் மட்டும் பிரம்மபுரீசுவரருக்கு அபிஷேகத்திற்கு பயன்படுத்துகின்றனர். அன்று பொது மக்களும் கடவூர்மயானத்தில் ஆலயம் அருகிலுள்ள உள்ள பிரம்ம தீர்த்தக்குளத்தில் நீராடிவிட்டு இந்த கிணற்று நீரில் நீராட அனுமதிக்கப்படுகின்றனர். வாய்ப்புள்ளவர்கள் அன்று கடவூர் மயானம் சென்று நீராடி காசிக்கு சென்று கங்கையில் ஸ்நானம் செய்த பலனைப் பெறலாம். இவ்வாண்டு, மார்ச் 20 (செவ்வாய்) அசுவினி நட்சத்திரம் கூடிய நாள் அமைகின்றது. அன்று திருக்கடையூரிலிருந்து மார்க்கண்டேயர் உற்சவ மூர்த்தியும் கடவூர் மயானத்திலிருந்து பஞ்ச மூர்த்திகளும் கிணற்றடியில் எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருளும் வைபவம் நடைபெறும். 
தொடர்புக்கு : 94420 12133.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com