யுகத்தின் பிறப்பு யுகாதியின் சிறப்பு!

இந்தியாவில் தமிழ் வருடப்பிறப்பு பெரும்பாலும் ஏப்ரல் 14 -ஆம் தேதி கொண்டாடப்படும். தெலுங்கு மற்றும் கன்னட மக்கள் புத்தாண்டை "யுகாதி' என்று கூறுவர்.
யுகத்தின் பிறப்பு யுகாதியின் சிறப்பு!

இந்தியாவில் தமிழ் வருடப்பிறப்பு பெரும்பாலும் ஏப்ரல் 14 -ஆம் தேதி கொண்டாடப்படும். தெலுங்கு மற்றும் கன்னட மக்கள் புத்தாண்டை "யுகாதி' என்று கூறுவர். மகாராஷ்டிர மக்கள் இதே நாளை "குடிபாட்வா' எனவும் சிந்தி மக்கள் "சேதி சந்த்' எனவும் பலவறாக கொண்டாடுகின்றனர். யுகத்தின் ஆரம்பம் யுகாதி என அழைக்கப்படுகிறது. ஏனென்றால் சைத்ர மாதத்தின் முதல் நாள் அன்று தான் பிரம்ம தேவன் உலகத்தை படைத்ததாக பிரம்ம புராணம் கூறுகிறது. மேலும் சைத்ர மாதத்தின் முதல் நாள் வசந்த காலத்தின் பிறப்பை குறிப்பதால், இந்நாள் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.

யுகாதி பெரும்பாலும் மார்ச், ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இந்து நாட்காட்டியின் படி உகாதி சைத்ர (சித்திரை) மாதத்தின் முதல் நாள் ஆகும். உகாதி பண்டிகை பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமையில் கொண்டாடப்படும். அன்று அமாவாசை ஒரு நாழிகை இருந்தால்கூட மறுநாள்தான் உகாதி கொண்டாட வேண்டும் என்பது ஜோதிட சாஸ்திர விதி. யுகாதி திருநாள் - 18.3.2018 அன்று வருகிறது.

இந்நாள் புது முயற்சிகளை மேற்கொள்ள நல்ல நாளாக கருதப்படுகிறது. தெலுங்கு, கன்னடம் மற்றும் மராட்டிய மக்கள் சந்திரனின் கதியைப் பின்பற்றி பண்டிகைகளைக் கொண்டாடுகின்றனர். அவர்களுடைய மாதம் சந்திரனின் முதல் பிறையிலிருந்தே துவங்குகிறது. அதாவது அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமையிலிருந்தே துவங்குகிறது. அதனாலேயே யுகாதியும் பிரதமையன்றே வருகிறது. தமிழகம் மற்றும் கேரளாவில் சூர்ய கதியைப் பின்பற்றியே பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. 

யுகாதியன்று, எல்லோரும் விடியற்காலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடைகள் அணிந்து இறைவழிபாடு செய்வர். இன்று அறுசுவையுடன் கூடிய (இனிப்பு, காரம், கசப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கரிப்பு) பதார்த்தமாக உகாதி பச்சடி செய்யப்படுகிறது. இதில் வெல்லம், வேப்பம்பூ, மாங்காய், புளி, மிளகாய், மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து செய்கின்றனர். தமிழ் புத்தாண்டன்றும் தமிழர்களும் இதே பச்சடி செய்வது குறிப்பிடத்தக்கது. மனித வாழ்வில் இன்பம், துன்பம், மகிழ்ச்சி, துக்கம் முதலிய எல்லாம் கலந்தே இருக்கும் என்பதை இது குறிக்கிறது.

தமிழ் நாட்டில் வாழும் தெலுங்கு மக்களும் இந்த பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். அன்று பல்வேறு இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், தெலுங்கு சாகித்ய நிகழ்ச்சிகள் மற்றும் விருது வழங்குதல் ஆகியவை நடைபெறும்.

தமிழ் புத்தாண்டைப்போலவே, யுகாதியன்றும் பஞ்சாங்கம் படித்தல் நடைபெறுகிறது. தெய்வ அனுகூலத்தையும் உலக மக்களின் வாழ்க்கை நலன்களையும் முன்னதாகவே அறிந்துகொள்ளக்கூடிய காலக்கண்ணாடியாக திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்ற ஐந்து விதமான அங்கங்களைக் கொண்ட மங்களகரமான பஞ்சாங்கப் படனமாக இது மலர்கிறது. 

ஆந்திரம், தெலுங்கானா வில் உள்ள எல்லா திருக்கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. திருமலையில் யுகாதி பண்டிகை வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு திருக்கோயில் முழுவதும் மலர்களாலும் மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்படும். வாசனை திரவியங்களால் கோயிலை தூய்மைப்படுத்துவர். கோயிலில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெறும். மூலவருக்கு பட்டு ஆடை சார்த்தப்பட்டு, சிறப்பு வழிபாடு நடைபெறும். அன்று ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமியை தங்க வாசல் அருகில் எழுந்தருளச் செய்து சிறப்பு ஆராதனை செய்து, பஞ்சாங்கம் படித்தல் நிகழ்ச்சி நடைபெறும். இந்த தரிசனத்தை காண்பதற்காக திருமலையில் இந்தியாவின் எல்லா பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com