ஸ்ரீபாலா சமஸ்தானத்தில் பண்டாசுர சம்ஹார திருவிழா!

அம்பிகையை பல வடிவங்களில் நாம் வழிபடுகிறோம். அவற்றில் அம்பிகையை ஒன்பது வயது குழந்தை வடிவமாக, பாலாவாக, வழிபடுவது தொன்றுதொட்டு வந்துள்ளது. அந்த அம்பிகையையே பாலா திரிபுரசுந்தரி என்று அழைக்கிறோம்.
ஸ்ரீபாலா சமஸ்தானத்தில் பண்டாசுர சம்ஹார திருவிழா!

அம்பிகையை பல வடிவங்களில் நாம் வழிபடுகிறோம். அவற்றில் அம்பிகையை ஒன்பது வயது குழந்தை வடிவமாக, பாலாவாக, வழிபடுவது தொன்றுதொட்டு வந்துள்ளது. அந்த அம்பிகையையே பாலா திரிபுரசுந்தரி என்று அழைக்கிறோம். அந்த அம்மையின் அருளையும், பெருமைகளையும் சொல்ல வார்த்தைகளே இல்லை. ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரியாகிய பராசக்தி தானே விரும்பி எடுத்து கொண்ட ஒன்பது வயதான பால வடிவம்தான் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி வடிவம்! 

சித்தர்கள் அவளை "வாலை' என்றே அழைப்பர். அகத்தியர், திருமூலர், போகர், கொங்கணர், கருவூரார் என பல சித்தர்களும் வணங்கிய சக்தி மிக்க பாலாவை வணங்கினால் நோய்கள் விலகும். வாழ்வில் மென்மேலும் வளமும், கல்வி கேள்விகளில் சிறந்த ஞானமும் கிடைக்கும். வாலையை வேண்டினால் கல்யாணம், குழந்தை, குடும்ப ஐஸ்வர்யம் ஆகிய வரங்களை அள்ளி தருபவள் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது. 

பாலா என்னும் பாலா திரிபுரசுந்தரி ஆராதனையே தேவி வழிபாட்டில் முதற்படி என்பர். ஸ்ரீ வித்யையில் பாலாவின் மந்திரமே ஆரம்பம். ஸ்ரீவித்யாவின் பல பெரிய மந்திரங்கள் தரும் பலன் அனைத்தையும் இந்த முதல் மந்திரமே தந்துவிடுவதால் இம்மந்திரம் "லகு ஸ்ரீ வித்யா" என்றும் அழைக்கப்படுகிறது. 

ஸ்ரீ பாலா எப்பொழுது தோன்றினாள்? மன்மதனை ஈசன் எரித்த சாம்பலிலிருந்து தோன்றியவன் " பண்டன்" எனும் அரக்கன். ஒரு பெண்ணை தவிர தனக்கு யாராலும் மரணம் நேரக்கூடாது என வரம் பெற்றான். அந்த சந்தோஷத்தில் தேவர்களையும் , மற்றவர்களையும் துன்புறுத்தினான். அவர்கள் ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியைச் சரணடைய, தேவி தன் சேனைகளோடு பண்டாசுரனோடு போர் புரியத் தொடங்கினாள். அன்னை லலிதா தேவியோடு போரிட்டு வெல்ல முடியாத பண்டாசுரன், வலிமைமிக்க தனது முப்பது மைந்தர்களை போருக்கு அனுப்பினான். பண்டாசுரனுக்கு ஈடான அவர்களை அழிக்க ஸ்ரீ லலிதா தேவியின் உடலிலிருந்து ஆவிர்பவித்தாள் அண்டத்தைக் காக்கும் அம்பிகையின் செல்ல மகளான ஸ்ரீ பாலா. அவள் உருவில் இளையவளானாலும் ஆற்றலில் வலியவள். 

லலிதாவின் மகளான பாலா தன் அன்னை லலிதாவிடம் கவசங்களையும், ஆயுதங்களையும் பெற்று வெள்ளை அன்னங்கள் பூட்டிய ரதத்தில் ஏறிக் கொண்டு, பண்டாசுரன் மகன்களுடன் போரிட்டு அனைவரையும் அழித்தாள். பண்டனின் புதல்வர்கள் முப்பது பேரையும் அழித்ததால் "பண்டபுத்ர வதோத்யுக்த பாலா விக்ரம நந்திதா' ஸ்ரீபாலா லீலாவிநோதி நீ - எனவும் லலிதா ஸஹஸ்ர நாமத்தில் வஸின்யாதி வாக்தேவதைகள் இத்தேவியைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். 

அவள் போரிடும் லாவகத்தைக் காண விண்ணில் கூடிய தேவர்கள் பூமாரிப் பொழிந்தனர். போரில் வெற்றியுடன் திரும்பிய குழந்தை பாலாவை ஆனந்தம் பெருக தன்னுடன் அணைத்துக் கொண்டாள் அம்பிகை. அன்னை லலிதாவோடு அப்படியே ஐக்கியமாகிவிட்டாள் என்கிறது புராணம். ஆம்! பாலாம்பிகை வேறு, லலிதாம்பிகை வேறல்ல. இருவரும் ஒருவரே! 

அத்தகு பெருமை பெற்ற ஸ்ரீ பாலாவின் திருக்கோயில்கள் ஒரு சிலவே தமிழகத்தில் உள்ளன. செங்கல்பட்டை அடுத்த செம்பாக்கத்தில் ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் கோயில் அருகில் ஸ்ரீமத் ஒüஷத லலிதா மகா திரிபுரசுந்தரி ஸ்ரீ சக்ர ராஜசபை ஸ்ரீபீடம் ஸ்ரீபாலா சமஸ்தான ஆலயம் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் மஹாசகஸ்ர லிங்கம், ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி, தருணி திரிபுரசுந்தரி, ஸ்ரீ சக்ரம், ஸ்ரீவாராஹி, ஸ்ரீமாதங்கி உள்ளிட்ட மூர்த்திகள் அருள்பாலிக்கின்றனர். 

இவ்வாலயத்தில் நடைபெறும் வசந்த நவராத்திரி திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக மார்ச் 23 -ஆம் தேதி இரவு 7.00 மணியளவில் பண்டாசுர சம்ஹாரம் நடைபெறுகிறது. தமிழகத்திலேயே இங்குதான் இந்நிகழ்ச்சி, மிகவும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெறுகிறது. 

தொடர்புக்கு: 97899 21151/ 94453 59228.

- ரஞ்சனா பாலசுப்ரமணியன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com