பொருநை போற்றுதும்! 15 - டாக்டர் சுதா சேஷய்யன்

தாமிரவருணி என்னும் பெயரே மகிமை மிக்கது. கிருஷ்ணருடைய பத்தினிகளில் சத்யபாமை ஒருத்தி என்பது நமக்குத் தெரியும். பூதேவிதான் சத்யபாமையாக அவதரித்தாள் என்றும் சொல்வதுண்டு.
பொருநை போற்றுதும்! 15 - டாக்டர் சுதா சேஷய்யன்

தாமிரவருணி என்னும் பெயரே மகிமை மிக்கது. கிருஷ்ணருடைய பத்தினிகளில் சத்யபாமை ஒருத்தி என்பது நமக்குத் தெரியும். பூதேவிதான் சத்யபாமையாக அவதரித்தாள் என்றும் சொல்வதுண்டு. கிருஷ்ணருக்கும் சத்யபாமைக்கும் 10 மகன்களும் 4 மகள்களும் தோன்றினார்கள். இந்த மகள்களில் ஓருத்தியின் பெயர் தாம்ரவருணி. தாமிரவருணியால் பூமித்தாய் பெருமையடைகிறாள் என்பதைச் சொல்லாமல் சொல்லும் செய்தியோ இது!
சாக்ஷôத் பராசக்தி அம்பாள், ஸ்ரீ புரம் என்னும் நகரில் வாசம் செய்வதாக தேவி மஹாத்மியம் கூறும். ஸ்ரீ புர நகரில், வெளிச் சுற்றுக் காப்பாக ஏழு மதில்கள் உள்ளனவாம். பற்பல வகையான உலோகங்களால் ஆன இம்மதில்களில், மிகவும் உள்ளே உள்ள ஏழாவது மதில், தங்கத்தால் ஆனது. இந்தத் தங்க மதிலுக்குள்ளே இருக்கும் மைய நகரத்தில், 17 பிராகாரங்களும் அவற்றுக்குள் அமைந்திருக்கும் மையப்பகுதியில் அம்பாளின் சிந்தாமணி க்ருஹமும் இருக்கின்றன. 17 பிராகாரங்களில், வெளியிலிருந்து ஏழாவது பிராகாரம் "முக்தா பிராகாரம்' (முத்தால் ஆனது). இந்தப் பிராகாரம், பிற பிராகாரங்களைக் காட்டிலும் அழகு மிக்கது. சாதோதகம், சதமுக்தா, மஹாவர்ணி போன்ற நதிகளோடு இங்கே தாம்ரவர்ணி என்றொரு நதியும் பாய்கிறது. அஷ்டதிக் பாலர்களான எண் திசைத் தலைவர்கள், இந்தப் பிராகாரத்தில் வசிக்கிறார்கள்.
வைகுண்டத்திலும் ஸ்ரீபுரத்திலும் வாசம் செய்கிற தாமிரவருணி, நமக்கு அருள்பாலிப்பதற்காகத்தான் நெல்லைச் சீமையில் நெளிந்து வளைந்து ஓடுகிறாள் போலும்!
இசையில் இசைந்த பொருநை: பொருநைக் கரையின் பண்ணிசைப் பங்களிப்பு என்றொரு பட்டியல் இட்டால், தமிழ்க் கீர்த்தனைகள் யாத்துக்கொடுத்த விளாத்திகுளம் மாரியப்ப சுவாமிகள், ஹரிதாஸ் கிரி சுவாமிகளின் பக்கபலமாகத் திகழ்ந்த ஹார்மோனியம் முத்து நடேச பாகவதர், வானமாமலை இரட்டையர்கள் என்றழைக்கப் பெற்றவர்களும் ஜீயர் சாஹித்தியங்களை இயற்றியவர்களுமான ஸ்ரீநிவாச ஐயங்கார்அழகப்ப ஐயங்கார் சகோதரர்கள், இந்தச் சகோதரர்களின் தந்தையும் கைதேர்ந்த சங்கீத வித்வானுமான அழகர் ஐயங்கார், வீணை இசை வித்தகரான ஆழ்வார்குறிச்சி குமாரசாமி முதலியார், இசை நூல்கள் பலவற்றைத் தொகுத்தவரும் அந்தக் காலத்திலேயே (1960-70 களில்) தபால் மூலம் இசை வகுப்புகள் எடுத்தவருமான கல்லிடைக்குறிச்சி சுந்தரம் ஐயர், கீதப் பிரபந்தங்கள் இயற்றிய குருமூர்த்தி சாஸ்திரிகள், இசை மட்டுமல்லாமல் தமிழ் "வேதாந்தம்' ஜோதிடம் போன்றவற்றிலும் தேர்ச்சி பெற்று, வேதாந்த பாகவதர், ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், கருவை பொன்னம்மாள் ஆகியோரின் குருவாகவும் விளங்கிய வாசுதேவ நல்லூர் பல்லவி சுப்பையா பாகவதர், இவருடைய மகனும் அண்ணாமலைப் பல்கலையின் வீணை வாத்தியாருமான வி.எஸ். கோமதிசங்கர ஐயர், பழைய கீர்த்தனைகளைப் பலருக்கும் கொடுத்த வெங்கு பாகவதர், வீணையிசையிலும் நாட்டியத்திலும் திறமை பெற்றவராகவும் ஓதுவாமூர்த்திகளுக்கும் இசை நுட்பம் கற்பித்தவராகவும் விளங்கிய நெல்லை செந்தில்வேல் அண்ணாவி, இவருடைய குமாரரும் தஞ்சை துளஜா அரசரால் கெüரவிக்கப்பட்டவருமான மகாதேவ அண்ணாவி, இவருடைய திருக்குமாரர்களான சிவானந்தம் "குருமூர்த்தி' வடிவேல் நட்டுவனார்கள், இவர்களின் வழித்தோன்றல்களான ஆரணி சமஸ்தான வித்வான் முத்துசுவாமி நட்டுவனார், வீணை வேணு ஆகியோர், வீணை வாசிப்பு முறையிலேயே புதுமைகளைப் புகுத்திய சேரன்மாதேவி சுப்பிரமணிய சாஸ்திரியார், கடம் வித்வானாகச் சிறப்புற்ற சேரன்மாதேவி சுந்தரம் ஐயர், நாடக-நடனக் குழுக்களிலும் அகில இந்திய வானொலியிலும் இசைப் பணியாற்றித் தம்முடைய ஏழு குழந்தைகளை இசைத் துறையில் சிறப்புறச் செயல்பட வைத்த காருகுறிச்சி எஸ். நாராயண ஐயர், இன்னும் பலப் பலர் என்று முடிவில்லாப் பட்டியலாகவே அது பொலிவுறும்.
சுரண்டைக்கு மேற்காகவும் சுந்தரபாண்டியபுரத்திற்கு மேற்காகவும் சிற்றாற்றின் கரையிலிருக்கிறது சாம்பவர் வடகரை என்னும் சின்னஞ்சிறிய ஊர். ஐயப்பன் கோயிலுக்குப் பிரசித்தி பெற்ற இவ்வூரில், 1859 - ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத 2 -ஆம் நாள், முத்துசாமி நாடாருக்கும் அன்னம்மை அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார் ஆபிரகாம். தமிழாசிரியராகப் பணிபுரியத் தொடங்கி, தாத்தாவின் வழியில் தமிழ் மருத்துவத்தில் ஆர்வம் கொண்டு, பின்னர், தமிழிசைபால் ஈர்க்கப்பட்டு, வரையறுக்கமுடியாத அளவு தமிழிசைக்கும் தமிழ் மொழிக்கும் பங்களித்தார். அளப்பரிய அறிவித்திறன் கொண்டதால் ஆபிரகாம் பண்டிதர் என்றே வழங்கப்பெற்ற இவர், தஞ்சையில் குடியேறி அங்கேயே தங்கியதால், தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் என்றே பலரும் இவரை அறிவார்கள். தம்முடைய "கருணாமிர்த சாகரம்' முதல் புத்தகத்தை 1917- இல் வெளியிட்டபோது, "தென்னிந்திய சங்கீதத்தில் தேர்ந்த வித்வ சிரோமணிகள் பெயரும் முக்கியக் குறிப்புகளும்' என்று தலைப்பிட்டு, இசை வித்தகர்கள் பலரின் பெயர்களைக் கொடுத்துள்ளார். மேற்குறிப்பிட்டுள்ள இசைவாணர்கள் பலரையும் அப்பட்டியலில் காணலாம். தவிரவும், நெல்லைச் செந்தில்வேல் அண்ணாவியின் மகன் மகாதேவ அண்ணாவியின் சங்கீத நாட்டியத் திறமை கண்டு, தஞ்சை துளஜாஜி அரசர் அண்ணாவியைத் தஞ்சைக்கு அழைத்தது, எட்டையபுர சமஸ்தானாதிபதிகளான ஜெகதீச்வர ராமகுமர எட்டப்பர், ஜெகதீச்வர ராம வேங்கடேச்வர எட்டப்பர், வேங்கடேச்வர எட்டப்பர், ராஜஜெகதீச்வரராம வேங்கடேச்வர எட்டப்பர் ஆகியோர் இசைக்கும் இசைவாணர்களுக்கும் பேராதரவு அளித்தது போன்ற தகவல்களை மிகவும் விரிவாகப் பதிவு செய்துள்ளார். எட்டையபுர சமஸ்தான அரசர்களாக விளங்கியவர்கள் தாங்களே இசை வித்தகர்களாகவும் பாடல் இயற்றுபவர்களாகவும் திகழ்ந்தார்கள். "முருகா உன்னை நம்பினேனையா' என்னும் சுரஜதி (ஜெகதீச்வர ராம வேங்கடேச்வரர்), "சிவகுருநாதனை' என்னும் முகாரி ராகக் கீர்த்தனை (வேங்கடேச்வரர்), "முருகா தருகிலையா' என்னும் கமாஸ் ராகக் கீர்த்தனை மற்றும் "வாவா நீ வள்ளி மணாளா' என்னும் பைரவி ராகக் கீர்த்தனை (ராஜஜெகதீச்வரராம வேங்கடேச்வரர்) ஆகியவற்றை எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம்.
பொருநைக் கரை சங்கீதக்காரர்களில் இன்னும் சிலரையும் ஆபிரகாம் பண்டிதர் குறிப்பிடுகிறார். முத்தையா பாகவதரின் சகோதரரும் ஹரிகதை விற்பன்னருமான வீரவநல்லூர் ஹரிஹர பாகவதர், திருநெல்வேலி வீணை வித்தகர் ராமகிருஷ்ண பாகவதர், தளவாய் முதலியாரின் சமகாலத்தவரான வீணை பரதம் வல்லுநர் ராமசாமி அண்ணாவி, எட்டையபுர சமச்தானப் புலவர் "தாளம் எக்ஸ்பர்ட்' ராமச்சந்திர பாகவதர், "நடனாதி வாத்திய ரஞ்சனம்' நூல் எழுதிய நெல்லை கெங்கைமுத்துப் பிள்ளை, திருநெல்வேலிப் பிரகாசபுரக் கீர்த்தனைகர்த்தா சட்டம்பிள்ளை, நெல்லை ஃபிடில் வித்வான் சாமள ஐயர், சொக்கம்பட்டி சங்கீத சாஹித்திய வித்வான் சின்னச்சாமித் தேவர், வீணை வித்வானாகவும் தூரதேச வித்வான்களை ஆதரிப்பவராகவும் திகழ்ந்த நெல்லைச் சின்னையா பாகவதர், சங்கீத நுட்ப வித்தகர் நெல்லைச் சீனிவாச ஐயர், ஆலய நட்டுவாங்கப் பரம்பரைக்காரரும் ஓதுவாராக விளங்கியவருமான திருச்செந்தூர் சுப்பராய அண்ணாவி, அதி ரமணீயமாகப் பாடிய ஸ்ரீ வைகுண்டம் சுப்பையர், வீணை வாசிப்பிலும் கீர்த்தனைகள் செய்வதிலும் அதி சமர்த்தராகத் திகழ்ந்த கல்லிடைக்குறிச்சி கார்பார் தம்பிரான் தாண்டவராயர், கீர்த்தனைகர்த்தா திருநேல்வேலி வீரபத்திரம் பிள்ளை, சிûக்ஷ நன்றாகச் சொல்லிக் கொடுத்த திருநெல்வேலி வெங்கட்டராமையர், ராகம் தானம் வல்லவர் திருநெல்வேலி ஃபிடில் வெங்குப் பிள்ளை ஆகியோரைச் சிறப்பாகக் கூறுகிறார்.
அன்னம்மாச்சார்யரின் "பாவயாமி கோபால பாலம்', "ஜோ அச்சுதானந்த', "ஸ்ரீ மந்நாராயண' போன்ற பாடல்கள், கேட்போர் உள்ளங்களைக் கொள்ளை அடிப்பவை. இவற்றுக்கும், என்றென்றும் ரசிகர்களின் நெஞ்சில் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருக்கும் ராஜாஜியின் "குறை ஒன்றுமில்லை' பாடலுக்கும் இசை அமைத்தவர் கடையநல்லூர் எஸ். வேங்கடராமன் அவர்கள்.
தொடரும்


 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com