அமெரிக்க அதிபர் தேர்தலில் யாருக்கு ஆதரவு? குழப்பத்தில் இந்தியர்கள்!

அமெரிக்காவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு வாக்களிப்பது என்பது குறித்து அந்நாட்டு வாழ் இந்தியர்களுக்கு குழப்பம் நீடித்து வருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் யாருக்கு ஆதரவு? குழப்பத்தில் இந்தியர்கள்!

அமெரிக்காவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு வாக்களிப்பது என்பது குறித்து அந்நாட்டு வாழ் இந்தியர்களுக்கு குழப்பம் நீடித்து வருகிறது.
வெளிநாட்டுக் கொள்கையளவில் குடியரசுக் கட்சியினர் இந்தியாவுக்கு ஆதரவாக இருந்து வந்தபோதிலும், அமெரிக்க வாழ் இந்தியர்கள் பொதுவாக ஜனநாயகக் கட்சிக்கே கூடுதல் ஆதரவு அளித்து வருகின்றனர். அமெரிக்க வாழ் சிறுபான்மையினர் என்ற அளவில் அந்நாட்டு வாழ் இந்தியர்களின் வாக்குகளைப் பெறுவதில் ஜனநாயகக் கட்சியினர் எப்போதுமே அதிக முயற்சி எடுப்பார்கள்.
ஆனால் இந்தத் தேர்தலில் ஜனநாயகக்க கட்சி வேட்பாளர் ஹிலாரிக்கு அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்குகள் தானாக கிடைத்து விடாது என்று கூறப்படுகிறது. குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், பயங்கரவாதத்துக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை வெளியிட்டு வருவதால் அவர்களின் ஆதரவு அவருக்குதான் என்கிற நிலை எழுந்துள்ளது.
முன்னெப்போதும் இல்லாத வகையில், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் ஆதரவு அமைப்பு ஏற்படுத்தப்பட்டு வீடு வீடாகப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. "டிரம்ப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் இந்திய அமெரிக்கர்கள்' என்ற அமைப்பு பல்வேறு நகரங்களில் மும்முரமாகப் பிரசாரம் செய்து வருகிறது. டொனால்ட் டிரம்ப்புக்கு வாக்களிப்பதன் முக்கியத்துவம் என்ன என்று அவர்கள் விளக்கி வருகிறார்கள்.
அந்த அமைப்பின் துணைத் தலைவரும் நியூயார்க்கில் பிரபல வழக்கறிஞருமான ஆனந்த் அஹுஜா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் இது குறித்துத் தெரிவித்ததாவது:
நாட்டின் நடப்பு உலகத்தோடு ஒவ்வாதிருப்பதைக் கண்டிக்கும் விதமாக, ஆட்சியாளர்களை எதிர்த்து வாக்களித்து வெற்றி பெறச் செய்வது உலகெங்கும் தற்போதைய அரசியல் நடைமுறையாக உள்ளது. அமெரிக்காவும் இதற்கு விதிவிலக்கல்ல. ஒபாமாவின் 8 ஆண்டு கால ஆட்சியும் அதன் கொள்கைகளும் அலுப்பூட்டுவதாக உள்ளன. அரசியலை முழு நேரத் தொழிலாகக் கொண்டு செயல்படும் அரசியல்வாதிகளை மக்கள் வெறுக்கத் தொடங்கிவிட்டனர். தொழிலதிபரான டிரம்ப் பயங்கரவாதிகளுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார். இன்று உலகின் தலையாய பிரச்னை பயங்கரவாதம். அரசியல் ரீதியாக அவர் கூறுவது சர்ச்சையைக் கிளப்பலாம். ஆனால் தீவிர இஸ்லாம் உலகில் என்னவெல்லாம் பிரச்னையை ஏற்படுத்துகிறது என்பதை அவர் நன்கு அறிந்திருக்கிறார்.
வெளிநாட்டினர் அமெரிக்காவில் குடியேறுவதற்கு எதிரானவர் என்று அவர் மீது தவறான குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. சட்ட விரோதமாக ஏராளமானவர்கள் அமெரிக்காவில் குடியேறி வருகின்றனர். நியாயமாக குடியேற வேண்டியவர்களின் நிலை இதனால் கேள்விக் குறியாகிறது என்றார் ஆனந்த் அஹுஜா.
மற்றொரு பிரபல வழக்கறிஞர் ராஜீவ் கன்னா கூறியதாவது: டிரம்ப் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர் இந்தியாவின் சிறந்த கூட்டாளியாக இருப்பார்.
குறிப்பாக, பயங்கரவாத எதிர்ப்பில் அவர்தான் சரியான முறையில் செயல்படுவார். இந்தியா, அமெரிக்கா மட்டுமல்லாமல், பயங்கரவாதம் இன்று உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது.
பெண்கள் குறித்த அவருடைய கருத்துகளை நான் ஏற்கவில்லை. அந்த விஷயத்தில் அவர் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும். பில் கிளிண்டன் அதிபராக இருந்தபோது நான் அவரது ஆதரவாளராக இருந்தேன். பெண்கள் விஷயத்தில் அவருடைய நடத்தையும் கெளரவமானதல்ல. இப்போது ஹிலாரியை எடுத்துக் கொண்டால், இராக்கில் போர் தொடுத்தது உள்பட அவர் பல தவறான அரசியல் முடிவுகளை எடுத்துள்ளார். அரசு ரகசியங்கள் அடங்கிய மின்னஞ்சல்களை அவர் கையாண்ட விதம், தகுந்த சோதனைகள் நடத்தாமல் அமெரிக்காவுக்குள் அகதிகள் அனுமதிக்கப்படுவது- இவையெல்லாம் அவருடைய தவறான முடிவுகளைக் காட்டுகிறது. அதுபோன்ற தவறுகளை இனியும் நாடு தாங்காது என்றார் ராஜீவ் கன்னா.
"டிரம்ப்புக்கு எதிரான வாக்கு'


ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரிக்கு வாக்களிக்கப் போவதாகத் தெரிவிக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்களில் ஒரு சாரார் கூறுகையில், அவருக்கு ஆதரவான வாக்கு என்பதைவிட, டிரம்ப்புக்கு எதிராக வாக்களிக்கவுள்ளோம் என்றே கருத வேண்டும் என்கிறார்கள்.
ஒஹையோ மாகாணம், கிளீவ்லாண்ட் நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 30,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசிக்கின்றனர். இந்தியா குறித்தும் பயங்கரவாதம் குறித்தும் டிரம்ப் மேற்கொண்ட நிலைப்பாட்டினால் அவருக்கே இவர்கள் ஆதரவு தெரிவித்து வந்தனர். ஆனால் தேர்தல் நெருங்கும் நிலையில், பெண்கள் மீதான அவரது கருத்துகள் கசப்புணர்வைத் தூண்டியுள்ளன.
வெளிநாட்டினர், குறிப்பாக, முஸ்லிம்களின் குடியேற்றத்தைத் தடுப்பேன் என்று டிரம்ப் கூறி வருகிறார். நாளை, இந்தியர்களுக்கு எதிராகவும் அவர் செயல்படக் கூடும் என்று கிளீவ்லாண்ட்வாசிகள் சிலர் அச்சம் தெரிவித்தனர்.
"ஹிலாரி நம்பகமானவர் அல்ல என்பதில் இந்திய வம்சாவளிப் பெண்கள் தெளிவாக உள்ளனர்; ஆனால் பெண்களைக் குறித்து டிரம்ப் கூறி வரும் கருத்துகள் ஏற்கத் தக்கதல்ல. அதனால் அவருக்கு வாக்களிக்க முடியாது' என்று கிளீவ்லாண்டில் பல்லாண்டுகளாக வசித்து வரும் மீனா சேட்டி கூறினார்.
டிரம்ப் தெரிவித்து வரும் கருத்துகளைத் தொடர்ந்து, அவருக்கு வாக்களிப்பது இழுக்கு எனத் தோன்றினாலும், ஹிலாரிக்கு முழு ஆதரவு தெரிவிப்பதிலும் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்குத் தயக்கம் இருப்பது தொடர்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com