பாகிஸ்தான் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்: ஐ.நா.வில் சுஷ்மா ஸ்வராஜ் பதிலடி

மற்றவர்களைக் குறை கூறுவதற்கு முன்பு பாகிஸ்தான் தனது செயல்பாடுகளை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்
பாகிஸ்தான் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்: ஐ.நா.வில் சுஷ்மா ஸ்வராஜ் பதிலடி

மற்றவர்களைக் குறை கூறுவதற்கு முன்பு பாகிஸ்தான் தனது செயல்பாடுகளை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஐ.நா.வில் அந்நாட்டுக்கு பதிலளித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச் சபையின் 71-ஆவது கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், காஷ்மீரில் பாதுகாப்புப் படையால் சுட்டுக் கொல்லப்பட்ட பர்ஹான் வானியை இளம் தலைவர் என்று புகழ்ந்து பேசினார். காஷ்மீரில் இந்தியா நிகழ்த்தி வரும் அட்டூழியங்களுக்கான எதிர்வினைதான் உரி தாக்குதல் என்று அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்நிலையில், அவரது பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் ஐ.நா. பொதுசபைக் கூட்டத்தில் சுஷ்மா ஸ்வராஜ் திங்கள்கிழமை பேசியதாவது:
காஷ்மீரை அபகரித்து விடலாம் என்ற கனவை பாகிஸ்தான் கைவிட வேண்டும். காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை யாராலும் மாற்ற முடியாது. காஷ்மீரில் பயங்கரவாதத்தைத் தூண்டிவிடுவதால் ஒன்றும் நடந்துவிடப்போவதில்லை.
என்ன நிபந்தனை விதித்தோம்?: பேச்சுவார்த்தைக்கு இந்தியா நிபந்தனைகளை விதிப்பதாக அவர் (நவாஸ் ஷெரீஃப்) பேசியுள்ளார். என்ன நிபந்தனைகளை அவருக்கு நாங்கள் விதித்தோம் என்பதைத் தெரிவிக்க வேண்டும். மத்திய அரசு பதவியேற்றபோது நிபந்தனை விதித்தா? அவரை வரவேற்றோம். பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு செல்லும் முன்பு நிபந்தனை எதுவும் விதிக்கப்பட்டதா?
சமீபத்தில் பாகிஸ்தானுடன் உறவை மேம்படுத்த பல முயற்சிகளை இந்தியா மேற்கொண்டது. ஆனால் அதற்கு பதிலாக பதான்கோட்டிலும், உரியிலும் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பாகிஸ்தானுக்குத் தொடர்பு உள்ளது என்பதற்கு எங்களிடம் வலுவான ஆதாரங்கள் உள்ளன.
பாக். நடத்தும் அடக்குமுறை: காஷ்மீர் குறித்து இந்தியா மீது பாகிஸ்தான் பிரதமர் கூறும் குற்றச்சாட்டுகள் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாதவை. உரிமை மீறல்களை நிகழ்த்துவதாக மற்றவர்களைக் குறைகூறுவதற்கு முன்பு பாகிஸ்தான் தன்னைத்தானே சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாண மக்கள் மீது அந்நாட்டு அரசு மிகவும் மோசமான ஒடுக்குமுறை நடவடிக்கைகளைக் கையாண்டு வருகிறது. இதுதான் அரசே நடத்தும் ஒடுக்குமுறைகளில் மிகவும் மோசமானது.
தனிமைப்படுத்த வேண்டும்: ஐ.நா.வால் பயங்கரவாதிகள் என்று அறிவிக்கப்பட்டவர்கள் ஒருநாட்டில் (பாகிஸ்தான்) மட்டுமே சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். இதுபோன்ற நாடுகளைத் தனிமைப்படுத்த வேண்டும். ஐ.நா. போன்ற அமைப்புகளில் இருந்து அந்த நாடுகளை நீக்க வேண்டும். இந்த நாடுகள் பயங்கரவாதிகளைப் பாதுகாத்து வளர்த்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றன. அவர்களை சர்வதேச சமூகம் தனிமைப்படுத்த வேண்டும்.
முதல் முறையாக...: நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பயங்கரவாதத்துக்கு எதிரான ஒப்பந்தத்தை ஐ.நா.வில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தத்தையும் மேற்கொள்ள வேண்டும் என்றார் சுஷ்மா ஸ்வராஜ். ஐ.நா. சபையில் பலூசிஸ்தான் விவகாரத்தை இந்தியா இப்போது முதல் முறையாக எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் பங்களிப்பு: ஐ.நா.வில் 20 நிமிடங்கள் பேசிய சுஷ்மா ஸ்வராஜ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் குறித்தும் பேசினார். "பருவநிலை மாற்றப் பிரச்னையைத் தீர்க்க இந்தியா தனது பங்களிப்பை முழுமையாக செலுத்தும். அதே நேரத்தில், இந்த விவகாரத்தில் வளர்ந்த நாடுகளும் தங்கள் பொறுப்புகளை முழுமையாக உணர்ந்து செயல்பட வேண்டும்' என்று அவர் குறிப்பிட்டார்.
ஐ.நா.வில் சுஷ்மா ஸ்வராஜின் பேச்சுக்கு பிரதமர் நரேந்திர மோடி சுட்டுரை மூலம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com