அடுத்த ஐ.நா. பொதுச் செயலர்: குட்டெரெஸ் தொடர்ந்து முன்னிலை

ஐ.நா.வின் அடுத்த பொதுச் செயலர் பதவிக்கு நடைபெற்ற 5-ஆம் சுற்றுத் தேர்வில் போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமர் அன்டோனியோ குட்டெரெஸ் தொடர்ந்து முன்னிலை வகித்தார்.
அடுத்த ஐ.நா. பொதுச் செயலர்: குட்டெரெஸ் தொடர்ந்து முன்னிலை

ஐ.நா.வின் அடுத்த பொதுச் செயலர் பதவிக்கு நடைபெற்ற 5-ஆம் சுற்றுத் தேர்வில் போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமர் அன்டோனியோ குட்டெரெஸ் தொடர்ந்து முன்னிலை வகித்தார்.
இவ்வாண்டு இறுதியில் தற்போதைய ஐ.நா. செயலர் பான் கி-மூன் பதவிக் காலம் நிறைவடைகிறது. இதையடுத்து, அடுத்த பொதுச் செயலரைத் தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.
ஐ.நா.வின் சக்திவாய்ந்த பாதுகாப்புக் குழுவில் இடம்பெற்ற அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய 5 நிரந்தர உறுப்பு நாடுகள் மட்டுமே இதுவரை பொதுச்செயலர் பதவி வகிக்கும் நபரை முடிவு செய்வதில் மிக முக்கியப் பங்காற்றி வந்தன. அவற்றின் பரிந்துரையின் அடிப்படையில்தான் ஐ.நா. பொதுக் குழு முடிவெடுத்து வந்தது.
இந்நிலையில், அந்த அமைப்பின் வரலாற்றில் முதல் முறையாக, பொதுச் செயலர் பதவிக்கு விவாதம், நேர்காணல் உள்ளிட்ட தேர்வு முறையைப் பின்பற்ற முடிவு செய்யப்பட்டது. பொதுச் செயலர் பதவி வகிக்க விரும்பும் 12 நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவர்கள் கலந்து கொண்ட விவாதங்கள், நேர்காணல்கள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து, பாதுகாப்புக் குழுவில் வாக்கெடுப்பு பல்வேறு சுற்றுகளாக நடைபெற்று வருகிறது.
முதல் கட்ட வாக்கெடுப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. அதில் போட்டியிட்ட 12 பேரில் போர்ச்சுகலின் முன்னாள் பிரதமர் அன்டோனியோ குட்டெரெஸ் தொடர்ந்து அடுத்தடுத்த நடந்த சுற்றுகளிலும் முன்னிலை வகித்து வருகிறார். பதினைந்து உறுப்பு நாடுகள் கொண்ட ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் திங்கள்கிழமை நடைபெற்ற சுற்றில் குட்டெரெஸ் 12 ஆதரவு வாக்குகள் பெற்றார். இவர் போர்ச்சுகல் பிரதமர் பதவி தவிர, ஐ.நா. அகதிகள் நல ஆணையத்தின் தலைவராக 10 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார்.
இந்த வாக்கெடுப்புகளின் முடிவுகள் எதுவாக இருந்தாலும், இறுதி முடிவு 5 நிரந்தர உறுப்பு நாடுகளிடம்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் பெரும்பான்மை ஆதரவும் நிரந்தர உறுப்பு நாடுகள் அனைவரின் ஏகோபித்த ஆதரவும் பெற்ற நபர் இறுதியில் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. அடுத்த கட்டத் தேர்வு அக். 5-ஆம் தேதி நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com