அமெரிக்க அதிபர் தேர்தல்: பயங்கரவாதம், வேலைவாய்ப்பு குறித்து கடும் மோதல்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப், ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன் இடையேயான முதல் நேரடி விவாதம் திங்கள்கிழமை நடைபெற்றது.
அமெரிக்க அதிபர் தேர்தல்: பயங்கரவாதம், வேலைவாய்ப்பு குறித்து கடும் மோதல்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப், ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன் இடையேயான முதல் நேரடி விவாதம் திங்கள்கிழமை நடைபெற்றது.
நியூஜெர்சி மாகாணம், ஹாஃப்ஸ்டிரா பல்கலைக்கழக அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நேரடி விவாதம் உலகெங்கும் தொலைக்காட்சி மூலமாக நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
அமெரிக்காவின் வளமை, பாதுகாப்பு, நாடு செல்ல வேண்டிய பாதை ஆகிய மூன்று பொருள்களின் கீழ் இடைவிடாத விவாதம் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது. என்.பி.சி. தொலைக்காட்சியைச் சேர்ந்த லெஸ்டர் ஹோல்ட் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். ஒரு பொருளின் கீழ் ஒவ்வொரு வேட்பாளரும் தங்களின் கருத்தை இரண்டு நிமிடங்களில் தெரிவித்த பின்னர் அதைக் குறித்து வாதம் செய்தனர்.
பயங்கரவாதம், வேலைவாய்ப்பு, சர்வதேச உறவுகள் முக்கிய இடம் பிடித்த இந்த விவாதத்தில் இருவரும் பல முறை கடுமையாக மோதிக் கொண்டனர்.
பயங்கரவாதம் குறித்து டிரம்ப் கூறியது: இராக் நாட்டில் அமெரிக்க ராணுவம் தாக்குதலில் இறங்கியிருக்கக் கூடாது. ஆனால் அவ்வாறு சென்ற பிறகு, அதிபர் ஒபாமாவும் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த ஹிலாரியும் தவறான முடிவெடுத்து ராணுவம் வெளியேறியபோது அந்த நாட்டில் ஒரு வெற்றிடம் உருவானது. அதைப் பயன்படுத்திக் கொண்டு இஸ்லாமிய தேச பயங்கரவாதக் குழு தோன்றியது என்று டிரம்ப் கூறினார்.
அந்தக் கருத்தை ஏற்கவில்லை என்று பதிலளித்த ஹிலாரி, இணையதளம் மூலம் ஆள்சேர்ப்பு, பயங்கரவாதப் பிரசாரம் செய்துவரும் ஐ.எஸ். பயங்கரவாதிகளைத் தடுப்பதற்கு தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
"ஐ.எஸ். பயங்கரவாதிகளை தோற்கடிக்கும் என்னுடைய இந்தத் திட்டத்தை முன்பே வெளியிட்டிருக்கிறேன். அதே வேளையில், வான்வழித் தாக்குதல்களையும் அதிகரிக்க வேண்டும்' என்றார்.
நிதானமின்றிச் செயல்படும் டிரம்ப், அதிபர் பதவிக்கு அருகதையற்றவர் என்று ஹிலாரி கூறினார். ஆனால் தனது வேகமான செயல்பாடும் முன்கோபமும் தன்னுடைய பலம் என்று அதற்கு டிரம்ப் பதிலளித்தார்.
ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் பாதுகாப்புக்கு அமெரிக்கா ஆண்டுதோறும் கோடிக்கணக்கான டாலர்களை செலவழிக்கிறது. நம்முடைய பணம் வீணடிக்கப்படுகிறது. தங்களுடைய பாதுகாப்புக்கு ஆகும் செலவுகளில் அந்த நாடுகளும் கணிசமான பங்கை ஏற்க வேண்டும் என்றார் டிரம்ப்.
ஒபாமாவின் தவறான கொள்கைகளால் பல நிறுவனங்கள் அமெரிக்காவைவிட்டு வெளியேறி வருகின்றன என்றும் அமெரிக்கர்கள் வேலைவாய்ப்பை இழந்து வருகின்றனர் என்றும் டிரம்ப் குற்றம் சாட்டினார். இந்த விவகாரத்தில் ஒருவரையொருவர் குறுக்கிட்டுப் பேசி கடும் மோதல் ஏற்பட்டது.
இரண்டாவது விவாதம் செயின்ட் லூயிஸ் நகரில் அக். 9-ஆம் தேதி நடைபெறுகிறது. இறுதி விவாத நிகழ்ச்சி நெவாடா மாகாணம், பாரடைஸ் நகரில் அக். 19-ஆம் தேதி நடைபெறும்.
இதுவரை நடைபெற்று வந்த பிரசாரத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட பல்வேறு கருத்துக் கணிப்புகளில் டிரம்ப்-ஹிலாரி இடையே கடும் போட்டி நிலவுவதாகத் தெரியவந்துள்ளது. இருவரின் ஆதரவு நிலைகளில் ஓரிரு சதவீத வித்தியாசமே உள்ளது. தொழிலதிபரான டொனால்ட் டிரம்ப் நிதானமாகச் செயல்படுவாரா என்பது குறித்துக் கேள்வி எழுப்பப்படும் அதே வேளையில், ஹிலாரி நம்பகத் தன்மையுள்ளவரா என்ற ஐயம் வாக்காளர்களிடையே எழுந்துள்ளது.

கெட்ட அனுபவங்கள்
ஹிலாரியின் உடல் நலம் உறுதியாக இல்லை என்றும், அதிபராகவும் முப்படைகளின் தலைவராகவும் செயல்படுவதற்குத் தேவையான சக்தி அவருக்கு இல்லை என்றும் டிரம்ப் கூறினார்.
அதற்கு பதிலளித்த ஹிலாரி, 100 நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுவிட்டு, மணிக் கணக்கில் நாடாளுமன்றக் குழு கூட்டங்களில் கலந்து கொண்டு பேசிவிட்டு உடல் உறுதியைப் பற்றிப் பேசலாம் என்றார்.
இதையடுத்து, டிரம்ப்புக்கு அரசியல் அனுபவம் இல்லை என்றும், தனக்கு ஏராளமான அனுபவம் இருப்பதாகவும் ஹிலாரி தாக்கினார்.
அதற்கு பதிலடியாக, "ஹிலாரிக்கு ஏராளமான அனுபவம் இருக்கிறது என்பதை ஏற்கிறேன். ஆனால் அவை எல்லாமே கெட்ட அனுபவங்கள். நாடு மேலும் 4 ஆண்டுகளுக்கு அதைத் தாங்காது' என்றார்.

மின்னஞ்சல் விவகாரம்
தொழிலதிபரான டிரம்ப் செலுத்திய முழு வரி விவரங்களை ஏன் இதுவரை வெளியிடவில்லை என்று ஹிலாரி தாக்கினார்.
அதற்கு பதிலடியாக, ஹிலாரி பயன்படுத்திய தனியார் கணினி சேமிப்பகத்திலிருந்து அழித்த 33 ஆயிரம் மின்னஞ்சல் விவரங்களை அவர் வெளியிடும்போது தனது வரி விவரங்களை வெளியிடுவேன் என்றார் டிரம்ப்.
தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும் டிரம்ப் வரி செலுத்திய
வரிகள் குறித்து அவர் வெளியிடாதது ஏன் என்று ஹிலாரி கேள்வி எழுப்பி வருகிறார். வருமான வரித் துறையின் முழு ஆய்வு முடியும் வரை தனது வரி விவரங்களை வெளியிட முடியாது என்று டிரம்ப் கூறி வருகிறார்.

விவாதத்தில் யாருக்கு வெற்றி?
நேரடி விவாதத்தையடுத்து சி.என்.என்.-ஓ.ஆர்.சி. எடுத்த உடனடி கருத்துக் கணிப்பில் ஹிலாரிக்கு 62 சதவீதத்தினரும் டிரம்ப்புக்கு 27 சதவீதத்தினரும் ஆதரவு தெரிவித்தனர்.
டிரம்ப்பைவிட, ஹிலாரி தனது கருத்துகளைத் தெளிவாகக் கூறினார். விவாதத்தின் அடிப்படையில ஹிலாரிக்கு 56சதவீத ஆதரவும் டிரம்ப்புக்கு 39 சதவீத ஆதரவும் உள்ளது. இதற்கு முந்தைய நிலையில் 45%-46% என்ற அளவில் இருவரும் கடும் போட்டியில் இருந்தனர்.
பயங்கரவாதம், வெளியுறவுக் கொள்கை உள்ளிட்ட விவகாரங்களில் ஹிலாரிக்கு கூடுதல் ஆதரவு கிட்டியது. கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டதில் 50 சதவீதத்தினர் தங்கள் முந்தைய ஆதரவு நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்றர். வழக்குரைஞரான ஹிலாரி வாதத்தில் திறமைசாலியாக இருந்தார் எனவும்,
தொழிலதிபரான டிரம்ப் போதிய அழுத்தத்துடன்
வாதிடவில்லை என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com