மசூத் அஸார் விவகாரம்: இந்தியாவுக்கு எதிராக மீண்டும் செயல்பட சீனா திட்டம்?

ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த மசூத் அஸாரை சர்வதேசப் பயங்கரவாதியாக அறிவிக்குமாறு இந்தியா விடுத்த கோரிக்கைக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீனா விதித்த தடை அடுத்த சில நாள்களில் முடிவுக்கு வரவுள்ளது

இதையடுத்து மீண்டும் அதற்கான தடையை சீனா பிறப்பிக்க வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது. பதான்கோட் பயங்கரவாதத் தாக்குதலில் சதித் திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா கோரிக்கை விடுத்திருந்தது. அந்தக் கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ள 15 நாடுகளில் சீனாவைத் தவிர பிற நாடுகள் அனைத்தும் இந்தியாவின் கோரிக்கைக்கு ஆதரவு அளித்தன. அதேவேளையில், மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக் கூடாது என்று நிரந்தர உறுப்பு நாடுகளில் ஒன்றான சீனா, தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி முட்டுகட்டை போட்டது.
இதனால் இந்தியாவின் கோரிக்கை நிறைவேறவில்லை. நிரந்தர உறுப்பு நாடானது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தடை விதித்தாலும், அந்த நடவடிக்கை 6 மாதங்களில் காலாவதியாகிவிடும் என்று விதி உண்டு. அதன் பிறகு சம்பந்தப்பட்ட நாடு மீண்டும் அதற்கு தடை கோர வேண்டும். இல்லையென்றால் 14 நாடுகளின் ஒப்புதலுடன் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்து அவருக்குத் தடை விதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு அதிகாரம் உண்டு.
தற்போது சீனா விதித்த தடைக்கான காலம் நிறைவடைய இன்னும் 10 நாள்களே உள்ளன. மீண்டும் வீட்டோ அதிகாரத்தை அந்நாடு பயன்படுத்தாத பட்சத்தில் இந்தியாவின் கோரிக்கை ஏற்கப்படும். அவ்வாறு ஏற்கப்பட்டால், சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு மசூத் அஸாரின் சொத்துகள் முடக்கப்படும்; வேறு எந்த நாட்டுக்கும் அவரால் பயணிக்க முடியாது. இருப்பினும், இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டையே சீனா கொண்டிருப்பதால், மீண்டும் அந்நாடு வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்த வாய்ப்புள்ளதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com