ரசாயன குண்டு வீசவில்லை: சிரியா

கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் ரசாயன குண்டு வீச்சு நிகழ்த்தவில்லை என்று சிரியா வெளியுறவுத் துறை அமைச்சர் வாலித் முவல்லம் திட்டவட்டமாகக் கூறினார்.
சிரியாவில் நிகழ்த்தப்பட்ட ரசாயனத் தாக்குதலில் காயமடைந்ததாகக் கூறப்படும் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க எடுத்துச் செல்லும் மருத்துவ உதவியாளர்கள்.
சிரியாவில் நிகழ்த்தப்பட்ட ரசாயனத் தாக்குதலில் காயமடைந்ததாகக் கூறப்படும் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க எடுத்துச் செல்லும் மருத்துவ உதவியாளர்கள்.

கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் ரசாயன குண்டு வீச்சு நிகழ்த்தவில்லை என்று சிரியா வெளியுறவுத் துறை அமைச்சர் வாலித் முவல்லம் திட்டவட்டமாகக் கூறினார்.
தலைநகர் டமாஸ்கஸில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:
கான் ஷேகுன் பகுதியில் சிரியா போர் விமானம் ரசாயன குண்டு வீச்சு நிகழ்த்தவில்லை. முதல் விமானத் தாக்குதல் கடந்த செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணிக்கு நிகழ்த்தப்பட்டது. அல்-நுஸ்ரா முன்னணிக்கு சொந்தமான ஆயுத கிடங்கு மீது குண்டு வீச்சு நிகழ்த்தப்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த ரசாயன ஆயுதங்கள் வெடித்துச் சிதறின.
அல்-நுஸ்ரா முன்னணியும் இஸ்லாமிய தேச பயங்கரவாத இயக்கமும், பிற இயக்கங்களும் நகர்ப்புறங்களிலும், மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளிலும் ரசாயன ஆயுதங்களைத் தொடர்ந்து பதுக்கி வருகின்றன.
இந்த விவகாரத்தில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படுவதில் சிரியா அரசுக்கு எந்த ஆட்சேபமும் கிடையாது. அனைவரும் ஏற்கும்படியான விசாரணை நடத்தப்பட வேண்டும். வெறும் புகார், குற்றச்சாட்டுகள் மூலம் சிரியா அரசுப் படைகள் மீது பழி சுமத்த முடியாது.
நான் மீண்டும் அழுத்தமாகக் கூறுகிறேன்: சிரியா ரசாயன ஆயுதத்தைப் பயன்படுத்தியதில்லை; பயன்படுத்தவில்லை; வருங்காலத்திலும் பயன்படுத்தாது. எமது குடிமக்களுக்கு எதிராக ரசாயன ஆயுதத்தைப் பயன்படுத்த மாட்டோம். சிரியா குடிமக்கள் மீதே குண்டு வீச்சு நிகழ்த்தும் பயங்கரவாதிகளுக்கு எதிராகக் கூட ரசாயன குண்டுகளை வீச மாட்டோம் என்று அவர் கூறினார்.
இத்லிப் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதியில் ரசாயனத் தாக்குதல் நிகழ்த்தவில்லை என்று சிரியா ராணுவம் கடந்த செவ்வாய்க்கிழமை திட்டவட்டமாகக் கூறியது.
பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பகுதியில் அமைந்த ஆயுத கிடங்கைக் குறி வைத்து சிரியா போர் விமானங்கள் தாக்குதல் நிகழ்த்தியபோது, அங்கு வைக்கப்படிருந்த ரசாயன ஆயுதங்கள் வெடித்துச் சிதறின என்று ரஷியாவும் தெரிவித்தது.
புதன்கிழமை நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் சிரியாவில் நடத்தப்பட்ட ரசாயன குண்டு வீச்சுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சிரியாவில் இயங்கி வந்த அல்-காய்தாவிலிருந்து தோன்றிய பயங்கரவாத இயக்கம் அல்-நுஸ்ரா. தற்போது ஃபதே அல்-ஷாம் என்று அறியப்படும் அந்த பயங்கரவாத அமைப்பு, ரசாயன குண்டு வீச்சுக்குப் பழி வாங்கியே தீருவோம் என்று அறிவித்தது.
பலி எண்ணிக்கை 86-ஆக அதிகரிப்பு: பெய்ரூட், ஏப். 6: சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் செவ்வாய்க்கிழமை நிகழ்த்தப்பட்ட ரசாயன குண்டு வீச்சில் பலியானவர்களின் எண்ணிக்கை 86-ஆக உயர்ந்தது.
இதுகுறித்து சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளதாவது:
சிரியாவில் நிகழ்த்தப்பட்ட ரசாயன குண்டு வீச்சில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 86-ஆக அதிகரித்துள்ளது. அதில், 30 சிறுவர்கள், 20 பெண்களும் அடங்குவர். இந்த குண்டு வீச்சில் பலரைக் காணவில்லை; ஆதலால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com