பனாமா ஆவணங்கள் விவகாரத்தில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: 'பிரதமரைப் பதவி நீக்கம் செய்யப் போதுமான ஆதாரம் இல்லை'

பனாமா ஆவணங்கள் விவகாரத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபை பதவி நீக்கம் செய்யப் போதுமான ஆதாரம் இல்லை என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வியாழக்கிழமை வெளியானதும் அதை வரவேற்ற பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் ஆதரவாளர்கள்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வியாழக்கிழமை வெளியானதும் அதை வரவேற்ற பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் ஆதரவாளர்கள்.

ஊழல் புகாரை விசாரிக்க சிறப்புக் குழு அமைக்க உத்தரவு
 பனாமா ஆவணங்கள் விவகாரத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபை பதவி நீக்கம் செய்யப் போதுமான ஆதாரம் இல்லை என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேலும், அவரது குடும்பத்தினருக்கு எதிரான ஊழல் புகாரை விசாரிக்க கூட்டு விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்றும், இரண்டு மாதங்களுக்குள் விசாரணையை முடித்து குழு அறிக்கை அளிக்க வேண்டுமெனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
பிரதமர் ஷெரீஃபின் முந்தைய பதவிக் காலங்களின்போது முறைகேடாக ஈட்டிய தொகை மூலம் பிரிட்டன் தலைநகர் லண்டனில் சொத்து வாங்கியதாக வழக்கு தொடரப்பட்டது.
வட அமெரிக்க நாடான பனாமாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் குறித்த ஆவணங்கள் வெளியானபோது, ஷெரீஃபின் அயல்நாட்டு சொத்து விவரங்கள் குறித்த சர்ச்சை எழுந்தது. அவரது மகன்கள் மற்றும் மகள் அயல்நாட்டில் பதிவு செய்து நிர்வகித்து வரும் நிறுவனங்கள் மூலம் அந்த சொத்துகளை வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், ஜமாத்-இ-இஸ்லாமி, பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் பிரதமரைத் தகுதி நீக்கமும் பதவி நீக்கமும் செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இது தொடர்பான விசாரணை கடந்த ஆண்டு நவம்பர் முதல் நடைபெற்றது. முப்பத்தைந்து நாட்கள் நடைபெற்ற விசாரணை கடந்த பிப்ரவரி மாதம் 23-ஆம் தேதி நிறைவுற்றது. இதனிடையே லண்டனில் நவாஸ் ஷெரீஃப் குடும்பத்தினருக்கு சொந்தமாக உள்ள குடியிருப்புகளை வாங்க கத்தார் இளவரசர் பணம் அளித்ததாக நீதிமன்றத்தில் கடிதம் ஒன்றைத் தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
பாகிஸ்தான் அரசியலைப் பரபரப்பில் ஆழ்த்திய உச்ச நீதிமன்ற விசாரணை நிறைவடைந்து ஏறத்தாழ இரு மாதங்கள் கழித்து தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 3 நீதிபதிகள் பிரதமரைப் பதவி நீக்கம் செய்யப் போதுமான ஆதாரங்கள் இல்லை எனவும், போதுமான அடிப்படை உள்ளதாக இரு நீதிபதிகளும் தீர்ப்பு அளித்தனர். 547 பக்கங்கள் கொண்ட பெரும்பான்மைத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்களின் விவரம்:
பனாமா ஆவணங்கள் முறைகேடு என்று குறிப்பிடப்படும் விவகாரத்தில் பிரதமர் நவாஸ் ஷெரீஃபை பதவி நீக்கம் செய்யப் போதுமான ஆதாரங்கள் இல்லை. ஆயினும் வழக்கு விசாரணையின்போது குறிப்பிட்டபடி, கத்தார் பணம் பரிமாற்றம் எவ்வாறு நடைபெற்றது என்பது தெரிய வேண்டும்.
ஊழல் புகார், முறைகேடாக ஈட்டிய தொகை வெளிநாடுகளில் பரிமாற்றம் செய்யப்பட்டதாக எழுந்த புகார்கள் குறித்து பல்வேறு அமைப்புகள் கொண்ட கூட்டு விசாரணைக் குழு விசாரித்து அறிக்கை அளிக்க வேண்டும்.
தேசிய புலனாய்வு அமைப்பு (எஃப்.ஐ.ஏ.), தேசிய ஊழல் கண்காணிப்பு அமைப்பு (என்.ஏ.பி.), பாகிஸ்தான் பங்கு பரிவர்த்தனை ஒழுங்காற்று ஆணையம், ராணுவ உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ., ராணுவ புலனாய்வுத் துறை ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் கொண்ட கூட்டு விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும்.
அந்தக் குழு தனது விசாரணையை 60 நாட்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும்.
விசாரணை நிலவரம் குறித்த இடைக்கால அறிக்கைகளை உச்ச நீதிமன்றத்தில் இரு வாரங்களுக்கு ஒரு முறை தாக்கல் செய்ய வேண்டும்.
கூட்டு விசாரணைக் குழுவின் முன் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், அவரது மகன்கள் ஹசன் ஷெரீஃப், ஹுசேன் ஷெரீஃப் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
'அரசு நிலைப்பாட்டுக்கு வெற்றி'
உச்ச நீதிமன்றத் தீர்ப்பானது, சிறப்பு விசாரணைக் குழு அமைக்க வேண்டுமென்ற அரசின் நிலைப்பாட்டுக்கு கிடைத்த வெற்றி என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் காஜா ஆசிப் கூறினார்.
தீர்ப்பை வரவேற்று அவர் கூறியதாவது: பனாமா ஆவணங்கள் விவகாரம் வெளியானபோதே, அது தொடர்பாக முறையான விசாரணை நடைபெற வேண்டும் என்று பிரதமர் நவாஸ் ஷெரீஃப் கூறினார். அதற்காக விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர் பிரதமர்தான். இப்போது உச்ச நீதிமன்றம் விசாரணைக் குழு அமைத்துள்ளது என்றார் அவர்.
உச்ச நீதிமன்ற வழக்கின் பின்னணி
பனாமா சட்ட ஆலோசனை நிறுவனத்தின் ஆவணங்களை சர்வதேச புலனாய்வுப் பத்திரிகையாளர்கள் அமைப்பு கடந்த ஆண்டு வெளியிட்டது. உலகம் முழுவதும் அரசியல்வாதிகள், கலை, விளையாட்டுத் துறையினர் வருமான வரிச் சட்ட கெடுபிடிகள் இல்லாத சிறு நாடுகளில் பெயரளவில் நிறுவனங்கள் அமைத்துள்ளது அந்த ஆவணங்கள் மூலம் அம்பலமாயிற்று.
இதுபோன்ற நிறுவனங்கள் பெரும்பாலும் கருப்புப் பணத்தைப் பதுக்கி வைக்கப் பயன்படுகின்றன என்று கூறப்படுகிறது.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் குடும்பத்தினருக்கு பிரிட்டனில் சொத்து இருப்பது பனாமா ஆவணங்களிலிருந்து தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து ஊழல் மற்றும் வெளிநாடுகளில் சட்ட விரோதமாக சொத்து வைத்திருத்தல் ஆகிய குற்றங்களுக்காக அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சான் கட்சித் தலைவர் இம்ரான் கான் உள்பட பலர் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
நவாஸ் ஷெரீஃப் பதவி விலக வேண்டும்: இம்ரான் கான்


பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பதவி விலக வேண்டும் என்று பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான் கான் வலியுறுத்தினார்.
உச்ச நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்கின் மீது தீர்ப்பு வெளியானதும் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பிரதமர் மீதான ஊழல் புகாரை இந்தத் தீர்ப்பு உறுதி செய்துள்ளது. இது எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த வெற்றியாகும். பிரதமருக்கு 60 நாள் கெடு விதிக்கப்பட்டுள்ளது. கூட்டு விசாரணைக் குழுவின் விசாரணை அறிக்கை அவர் குற்றவாளி எனக் கூறுவது உறுதி.
நாட்டை ஆளும் தார்மிக உரிமையை பிரதமர் இழந்துவிட்டார். விசாரணை முடிவுக்கு காத்திராமல் அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com