வட கொரியாவின் புதிய ஏவுகணை சோதனை தோல்வி: போர்ப் பதற்றம் அதிகரிப்பு

வட கொரியா புதிய ஏவுகணை சோதனை நிகழ்த்தியதாகவும் அந்த சோதனை தோல்வி அடைந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
ஐ.நா. பாதுகாப்புக் குழு கூட்டத்தில் பேசும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்ஸன். உடன், ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி
ஐ.நா. பாதுகாப்புக் குழு கூட்டத்தில் பேசும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்ஸன். உடன், ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி

வட கொரியா புதிய ஏவுகணை சோதனை நிகழ்த்தியதாகவும் அந்த சோதனை தோல்வி அடைந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக தென் கொரிய அரசு செய்தி நிறுவனமான யோன்ஹாப் வெளியிட்டிருக்கும் செய்தி அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: வட கொரியாவின் தெற்கு பியோன்கன் மாகாணத்தில் உள்ள ஏவுகணை சோதனை தளத்திலிருந்து புதிய, அடையாளம் தெரியாத ஏவுகணை வெள்ளிக்கிழமை நள்ளிரவு செலுத்தப்பட்டது. அந்த ஏவுகணை சோதனை தோல்வியில் முடிவுற்றதாகத் தெரிகிறது என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே அமெரிக்க கடற்படையின் பசிபிக் கடற்படைப் பிரிவு செய்தித் தொடர்பாளர் டேவ் பென்ஹம் வாஷிங்டனில் இது குறித்துத் தெரிவித்ததாவது: வட கொரியாவின் புதிய ஏவுகணை அமெரிக்காவின் ஹவாய் மாகாண நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 10.33 மணிக்கு (இந்திய நேரப்படி நள்ளிரவு 2.03 மணி) செலுத்தப்பட்டது. வட கொரியாவின் புக்சாங் போர் விமான தளத்திலிருந்து செலுத்தப்பட்ட அந்த ஏவுகணை எந்த ரகத்தைச் சேர்ந்தது என்பது குறித்து அமெரிக்க கடற்படை ஆய்வு செய்து வருகிறது. அந்த ஏவுகணை வட கொரிய எல்லையைத் தாண்டவில்லை. ஏவுகணை சோதனை தோல்வி அடைந்தது.
அந்த ஏவுகணையால் வட அமெரிக்காவுக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படவில்லை. நட்பு நாடுகளான தென் கொரியா, ஜப்பான் ஆகியவற்றின் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படாமல் தடுக்க அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது. அந்த வாக்குறுதியை எப்போதும் காப்போம் என்றார் அவர்.
தென் கொரிய மற்றும் அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் அளித்த தகவல்களின்படி, வட கொரியா சோதனை மேற்கொண்ட புதிய ஏவுகணை கேஎன்-17 வகை ஏவுகணை ரகத்தைச் சேர்ந்தது என்று நம்பப்படுகிறது. ஆயினும் அது தொடர்பாக அதிகாரபூர்வமான தகவல் எதையும் ராணுவ வட்டாரங்கள் வெளியிடவில்லை.
வட கொரியா அண்மையில் இரு முக்கிய நிகழ்வுகளைக் கொண்டாடியது. கொரிய பிரிவினைக்குப் பிறகு வட கொரிய நாட்டை உருவாக்கிய முதல் அதிபர் கிம் இல்-சுங்கின் பிறந்த தினம் (ஏப். 15), அந்த நாட்டின் ராணுவ நிறுவன தினம் (ஏப். 25) ஆகிய இரு முக்கிய நாட்களில் அணு ஆயுத சோதனை அல்லது ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அணு ஆயுத சோதனை எதுவும் நிகழ்த்தப்படவில்லை. சீனாவின் அழுத்தம் காரணமாகவே அணு ஆயுத சோதனை நடைபெறவில்லை என்றும் அதற்கு வழி வகுத்த சீன அதிபரைப் பாராட்டுவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், வட கொரியா புதிய ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. வட கொரியா விவகாரத்தில் பொறுமை இழந்து வருகிறோம் என்று டிரம்ப் ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வட கொரிய விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்ஸன் கூறியதாவது:
வட கொரியாவுடனான உறவை உலக நாடுகள் துண்டிக்க வேண்டும். அந்த நாட்டின் ஏவுகணை ஆராய்ச்சித் திட்டங்களுடன் தொடர்புள்ள நிறுவனங்கள், தனி நபர்கள் அனைவரின் மீதும் தடை விதிக்க வேண்டும். வட கொரியாவின் அணு ஆராய்ச்சித் திட்டங்களுக்கு உதவிடும் நிறுவனங்கள் மற்றும் நபர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், அதற்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்க அமெரிக்கா தயாராக உள்ளது என்றார்.
அமெரிக்க கடற்படையின் விமானம் தாங்கிக் கப்பலான 'கார்ல் வின்ஸன்' கொரிய தீபகற்பத்துக்குத் தெற்கே பிலிப்பின்ஸ் கடல் பகுதியில் உள்ளது. வட கொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அனுப்பப்பட்ட அந்தக் கப்பல், தென் கொரியா மற்றும் ஜப்பானுடன் இணைந்து போர்ப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
மேலும், தென் கொரியாவில் அதிநவீன ஏவுகணைத் தடுப்பு ஆயுதங்களை அமெரிக்கா ஈடுபடுத்தியுள்ளது. இந்த நடவடிக்கைகள் போர் பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.


 பிலிப்பின்ஸ் கடல் பகுதியில் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் அமெரிக்க கடற்படைக் கப்பல் கார்ல் வின்ஸன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com