வட கொரியா பிரச்னைக்கு தீர்வு காண்பதில் இந்தியா உதவ முடியும்

வட கொரியா பிரச்னைக்குத் தீர்வு காண்பதில் இந்தியாவால் உதவ முடியும் என்று பசிபிக் பகுதிகளுக்கான அமெரிக்க ராணுவத் தளபதி ஹாரி ஹாரீஸ் தெரிவித்துள்ளார்.
வட கொரியா பிரச்னைக்கு தீர்வு காண்பதில் இந்தியா உதவ முடியும்

வட கொரியா பிரச்னைக்குத் தீர்வு காண்பதில் இந்தியாவால் உதவ முடியும் என்று பசிபிக் பகுதிகளுக்கான அமெரிக்க ராணுவத் தளபதி ஹாரி ஹாரீஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் தெரிவித்ததாவது: உலக அரங்கில் இந்தியாவின் குரல் மிகவும் ஓங்கி ஒலிக்கக் கூடியது. இதன் காரணமாக இந்தியாவின் கருத்துகளை அனைவரும் செவிமடுப்பார்கள்.
அந்த வகையில், வட கொரியாவின் நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள நிலைமையின் தீவிரத்தை அந்த நாட்டுக்கு இந்தியாவால் புரிய வைக்க முடியும் என்று நம்புகிறோம். எனினும், இந்த விவகாரத்தில் என்ன பங்கு வகிப்பது என்பதை இந்தியாதான் முடிவு செய்ய வேண்டும் என்றார் அவர்.
வட கொரியா கடந்த ஜூலை மாதம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துப் பார்த்தது.
அணு ஆயுதத்தைச் சுமந்து, அமெரிக்கா மீது தாக்குதல் தொடுக்கும் திறன் கொண்டதாகக் கூறப்படும் அந்த ஏவுகணைப் பரிசோதனையைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது.
அந்த ஏவுகணை சோதனைக்கு சர்வதேச நாடுகளுடன் இணைந்து இந்தியாவும் கண்டனம் தெரிவித்தது. மேலும், வட கொரியா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை இந்தியாவும் அமல்படுத்தி வருகிறது.
இந்த ஆண்டுத் தொடக்கத்தில் வட கொரியாவுடனான தனது வர்த்தக உறவை இந்தியா துண்டித்துக் கொண்டது. இதனை அதிபர் டிரம்ப் நிர்வாகம் வெகுவாகப் பாராட்டியது.
அண்மையில், பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள, அமெரிக்காவின் முப்படைத் தளங்களும் அமைந்துள்ள குவாம் தீவு அருகே ஏவுகணைப் பரிசோதனை செய்யப் போவதாக வட கொரியா மிரட்டல் விடுத்தது.
அதற்குப் பதிலடியாக, வட கொரியா தனது மிரட்டல் போக்கைக் கைவிடாவிட்டால் உலகம் இதுவரை கண்டிராத மிக சக்தி வாய்ந்த தாக்குதலை அந்த நாடு சந்திக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் மிரட்டல் விடுத்திருந்தார்.
இந்தச் சூழலில், வட கொரியா பிரச்னையில் இந்தியாவின் பங்கு குறித்து பசிபிக் பகுதிகளுக்கான அமெரிக்கத் தளபதி பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com