தொழில்நுட்பத் திருட்டு: சீனாவுக்கு எதிரான விசாரணைக்கு டிரம்ப் உத்தரவு: தொடங்கியது வர்த்தகப் போர்

அமெரிக்கத் தொழில்நுட்பங்களைத் திருடியது, நியாயமற்ற வர்த்தகத்தில் ஈடுபட்டது குறித்து சீனாவுக்கு எதிராக விசாரணை நடத்துமாறு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.
தொழில்நுட்பத் திருட்டு: சீனாவுக்கு எதிரான விசாரணைக்கு டிரம்ப் உத்தரவு: தொடங்கியது வர்த்தகப் போர்

அமெரிக்கத் தொழில்நுட்பங்களைத் திருடியது, நியாயமற்ற வர்த்தகத்தில் ஈடுபட்டது குறித்து சீனாவுக்கு எதிராக விசாரணை நடத்துமாறு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.
முறையான அனுமதியின்றி அமெரிக்க தொழில்நுட்பங்கள், அறிவுசார் சொத்துகளை சீனா பயன்படுத்தியது என்ற புகார் எழுந்தது. சீனாவில் அமெரிக்கப் பொருள் விற்பனையாக வேண்டுமானால் அதன் தொழில்நுட்பத்தை பலவந்தமாக ஒப்படைக்கச் சொல்வதாகப் புகார் கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்தப் புகார்கள் குறித்து அதிபரின் வர்த்தக மேம்பாட்டுத் துறை தலைமை அதிகாரி விசாரிக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதற்கான உத்தரவில் டிரம்ப் திங்கள்கிழமை கையெழுத்திட்டார்.
அந்த உத்தரவில் டிரம்ப் குறிப்பிட்டிருப்பது:
அமெரிக்கத் தொழில்நுட்பம் மற்றும் அறிவுசார் சொத்துகளை வெளிநாடுகள் களவாடுவதன் மூலம் ஆண்டுதோறும் நாட்டுக்கு கோடிக்கணக்கான டாலர் நஷ்டம் ஏற்படுவதுடன், லட்சக்கணக்கான அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகளும் பறிபோகின்றன. அமெரிக்க தொழில்நுட்பத்தைத் திருடி உருவாக்கப்படும் போலிப் பொருள்கள் நமது பொருளாதாரத்தை அழித்து வருகிறது. நீண்ட காலமாகவே நம் நாடு சூறையாடப்பட்டு வருகிறது. ஆனால் முந்தைய அரசுகள் இதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு உடனடியாக முடிவு கட்டியாக வேண்டும். அமெரிக்க தொழில்நுட்பங்களை பலவந்தமாக ஒப்படைக்க உத்தரவிடுவது, அமெரிக்க அறிவுசார் சொத்துகளைக் கட்டாயப்படுத்திப் பெறுவது, தொழில் ரகசியங்களை அளிக்கச் சொல்வது போன்ற சீனாவின் தொழிலக நடவடிக்கைகளைக் குறித்து தேசிய வர்த்தக மேம்பாட்டுத் துறை தலைமை அதிகாரி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடுகிறேன்.
அதிபர் என்ற முறையில் அமெரிக்க தொழிலாளர்கள், தொழில் துறை, தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பாதுகாப்பது எனது கடமையாகும். தங்கள் நாட்டுக்குள் அமெரிக்க நிறுவனத்தின் பொருள்கள் விற்பனையாக வேண்டுமானால் அதன் தொழில்நுட்பத்தையே ஒப்படைக்க வேண்டும் என்று பலவந்தம் செய்வதை எதிர்ப்போம் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தகத் துறை விவகாரங்களில் அதிபருக்கு ஆலோசனை வழங்கி வருபவர் வர்த்தக மேம்பாட்டுத் துறை தலைமை அதிகாரி. அமைச்சரவை மூலமாக அல்லாமல், அவர் நேரடியாக அதிபருக்கு ஆலோசனை வழங்குவார். சிறப்பு அதிகாரங்கள் பெற்றுள்ள அவரது விசாரணைகளும் உத்தரவுகளும் சட்ட ரீதியாக செல்லுபடியாகும்.
அதிபர் டிரம்ப் உத்தரவு வெளியிடப்பட்ட தகவல் வெளியானதும், வர்த்தக மேம்பாட்டுத் துறை தலைமை அதிகாரி ராபர்ட் லைத்திஸர் தொழில்நுட்பத் திருட்டு நடைபெற்றுள்ளதா என்று அறிய விரிவான விசாரணை மேற்கொள்வேன் என்று கூறினார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், தொழில்நுட்பத் திருட்டு, நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகள் மூலம் அமெரிக்கத் தொழில்துறையே நசிந்துவிடும் ஆபத்து உள்ளது. தொழில்நுட்பத் திருட்டு நடைபெற்றுள்ளதா, அறிவுசார் சொத்துகள் களவாடப்பட்டதா, நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டனவா என்று அறிய உடனடியாக விசாரணை தொடங்கப்படும். தேவைப்பட்டால் அமெரிக்க தொழில்துறையைப் பாதுகாக்க மேற்கொண்டு நடவடிக்கைகளுக்கும் உத்தரவிடவும் அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது என்றார்.
டிரம்ப் உத்தரவுக்கு அமெரிக்காவில் பரவலான வரவேற்பு கிடைத்துள்ளது.
இரு கட்சி எம்.பி.க்களும், தொழில் துறையினரும் அதிபரின் உத்தரவை வரவேற்றுள்ளனர்.
பதிலடி கொடுப்போம் - சீனா மிரட்டல்
தொழில்நுட்பத் திருட்டு தொடர்பாக சீனாவுக்கு எதிரான விசாரணையை மேற்கொள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவுக்குத் தக்க பதிலடி கொடுப்போம் என்று சீனா மிரட்டியுள்ளது.
சீன வர்த்தகத் துறை அமைச்சகம் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பது: சீனாவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம். இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக உடன்படிக்கைகள் உள்ளன. வர்த்தகம் தொடர்பாக சர்வதேச விதிமுறைகள் உள்ளன. அவற்றை மீறும் வகையில் அமெரிக்கா செயல்பட முடியாது. அறிவுசார் சொத்து விவகாரங்களில் நாங்கள் எப்போதுமே சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம்.
சீனாவுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டால் இரு நாட்டு வர்த்தக உறவுகள் பாதிக்கப்படும். வர்த்தகப் போரில் யாருக்கும் வெற்றி தோல்வி கிடையாது. சீனாவின் நலனையும் உரிமைகளையும் விட்டுக் கொடுக்க முடியாது. தேவைப்பட்டால் தக்க பதிலடி கொடுப்போம் என்று சீனா தெரிவித்திருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com