இனவாதத் தாக்குதல்: சாதனை படைத்த ஒபாமாவின் 'டுவிட்டர்' பதிவு

அமெரிக்காவில் கடந்த சனிக்கிழமை நிகழ்த்தப்பட்ட இனவெறித் தாக்குதல் குறித்து அந்த நாட்டின் முன்னாள் அதிபர் ஒபாமா வெளியிட்டுள்ள சுட்டுரை (டுவிட்டர்) பதிவு, இதுவரை இல்லாத அதிக
ஒபாமாவின் சுட்டுரைப் பதிவுடன் இணைக்கப்பட்டுள்ள படம்.
ஒபாமாவின் சுட்டுரைப் பதிவுடன் இணைக்கப்பட்டுள்ள படம்.

அமெரிக்காவில் கடந்த சனிக்கிழமை நிகழ்த்தப்பட்ட இனவெறித் தாக்குதல் குறித்து அந்த நாட்டின் முன்னாள் அதிபர் ஒபாமா வெளியிட்டுள்ள சுட்டுரை (டுவிட்டர்) பதிவு, இதுவரை இல்லாத அதிக எண்ணிக்கையில் விருப்பங்களை (லைக்ஸ்) பெற்று சாதனை படைத்துள்ளது.
எனினும், அந்தச் சம்பவத்துக்கு இனவாதிகள் மட்டுமன்றி நடுநிலைவாதிகளும் காரணம் என்ற அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கருத்துக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
அமெரிக்காவில் வெள்ளை இனத்தவர்களின் உரிமையை வலியுறுத்தி, வர்ஜீனியா மாகாணம், சார்லட்ஸ்வில் நகரில் இந்த மாதம் 11 மற்றும் 12-ஆம் தேதிகளில் ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்துவதாக இனவாத அமைப்புகள் அறிவித்திருந்தன.
எனினும், அந்த ஆர்ப்பாட்டத்துக்கு வர்ஜீனியா மாகாண அரசு தடை விதித்தோடு, சார்லட்ஸ்வில் நகரில் அவசர நிலையையும் அறிவித்தது. அந்தப் போராட்டங்களுக்கு எதிராக நடுநிலைவாதிகளும் எதிர்ப்பு ஊர்வலங்களை நடத்தினர்.
இதனால், இனவாதிகளுக்கும், நடுநிலைவாதிகளுக்கும் ஆங்காங்கே கைகலப்பு ஏற்பட்டு பலர் காயமடைந்தனர்.
இந்தச் சூழலில், எதிர்ப்பு ஆர்ப்பாட்டக் கும்பல் மீது இனவாதி ஒருவர் கடந்த 12-ஆம் தேதி காரை வேகமாக ஓட்டி வந்து மோதச் செய்தார். இதில் ஒரு பெண் உயிரிழந்தார்; பலர் காயமடைந்தனர்.
இந்தச் சூழலில், முன்னாள் அதிபர் ஒபாமா தனது சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
பிறக்கும்போதே யாரும் நிறம், இனம், மதத்தின் அடிப்படையில் பிறரை வெறுப்பதில்லை. வெறுப்பு என்பது ஒருவருக்குக் கற்றுத் தரப்படுகிறது. வெறுப்பைக் கற்றுத் தர முடிந்தால், அன்பையும் எளிதில் கற்றுத் தர முடியும் என்று தனது பதிவுகளில் ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பதிவுடன், ஜன்னல் வழியாக சில குழந்தைகளுடன் ஒபாமா உரையாடும் படமும் இணைக்கப்பட்டுள்ளது .
ஒபாமாவின் அந்த முதல் பதிவு, 32 லட்சத்துக்கும் மேற்பட்டோரது விருப்பத்தைப் பெற்றுள்ளது.
சுட்டுரை வலைதளத்தில் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான விருப்பங்களைப் பெற்றுள்ளது ஒபாமாவின் இந்தப் பதிவுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து டுவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
முன்னாள் அதிபர் ஒபாமாவின் சுட்டுரைப் பதிவு, இதுவரை இல்லாத அதிக எண்ணிக்கையில் விருப்பங்களைப் பெற்றுள்ளது.
காலை 10.07 மணிக்கு (கிழக்கு அமெரிக்க நேரப்படி) அந்தப் பதிவு உலக சாதனை படைத்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சார்லட்ஸ்வில் கார் தாக்குதல் பற்றி குறிப்பிடுகையில் இனவாதிகள், நடுநிலைவாதிகள் ஆகிய இரு தரப்பினருமே வன்முறையில் ஈடுபட்டதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ள கருத்துக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.
இதுகுறித்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், 'இனவாதிகளுக்கு டிரம்ப் மறைமுக ஆதரவு தருவது வெட்கக்கேடானது' என்று தெரிவித்தார்.
எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் மட்டுமன்றி, ஆளும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களில் ஒரு சாராரும் டிரம்ப்பின் இந்தக் கருத்துக்குக் கண்டனம் தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com