"பிரிட்டனை விட்டு வெளியேறும் இந்தியர்களுக்கு ஊக்கத் தொகை'

பிரிட்டனின் மக்கள் தொகை எண்ணிக்கையை குறைக்கும் வகையில், சொந்த நாட்டுக்கு திரும்பச் செல்லும் இந்தியர்களுக்கு 9 ஆயிரம் பவுண்டுகளை (சுமார் ரூ.7.5 லட்சம்) ஊக்கத் தொகையாக அளிக்க வேண்டும்

பிரிட்டனின் மக்கள் தொகை எண்ணிக்கையை குறைக்கும் வகையில், சொந்த நாட்டுக்கு திரும்பச் செல்லும் இந்தியர்களுக்கு 9 ஆயிரம் பவுண்டுகளை (சுமார் ரூ.7.5 லட்சம்) ஊக்கத் தொகையாக அளிக்க வேண்டும் என்று பிரிட்டன் சுதந்திரா கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஜான் ரீஸ் இவான்ஸ் என்பவர் தெரிவித்துள்ளார்.

கிரேட்டர் மான்செஸ்டர் நகரில் இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியபோது, இந்த யோசனையை தெரிவித்தார். அதை டெய்லி மிர்ரர் பத்திரிகை பிரசுரித்துள்ளது. அதில் அவர், "ஆண்டுக்கு 13 பில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமாக இருக்கும் பிரிட்டன் அரசின் வெளிநாட்டினர் உதவி பட்ஜெட் தொகையை 1 பில்லியன் பவுண்டுகளாக குறைக்க வேண்டும்; 12.3 பில்லியன் பவுண்டுகளை பிரிட்டனில் இருந்து வெளியேறி தங்களது சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்லும் இரட்டை குடியுரிமை வைத்திருப்போருக்கு அளிக்க வேண்டும். அதாவது, பிரிட்டன் வாழ் இந்தியர்கள், பிரிட்டன் வாழ் தான்சானியா மக்களுக்கு அளிக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.
இந்த கருத்தை முகநூலில் வெளியிட்ட பதிவுகளிலும் அவர் முன்வைத்துள்ளார். அதில், வெளிநாடுகளில் தொழில்களைத் தொடங்கிக் கொள்வதற்கு ஊக்கத் தொகை பயனுடையதாக இருக்கும்; எனினும் பிரிட்டனுக்கு அவர்கள் 7 ஆண்டுகளில் திரும்பி வந்தால், அந்தத் தொகையை திருப்பி அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இவானின் இந்த கருத்தை பிரிட்டன் சுதந்திரா கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நிர்வாகி பீட்டர் விட்டல் கண்டித்துள்ளார்.
தீவிர வலதுசாரி கட்சியாக கருதப்படும் பிரிட்டன் சுதந்திரா கட்சியின் தலைவர் பதவிக்கு இவான் உள்பட 11 பேர் போட்டியிடுகின்றனர். இதில் பீட்டர் விட்டல் முன்னணியில் உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com