வெனிசூலா நாடாளுமன்ற அதிகாரங்கள் பறிப்பு

வெனிசூலா நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டதாக அரசியல் நிர்ணய சபை வெள்ளிக்கிழமை அறிவித்தது.
வெனிசூலா அரசியல் நிர்ணய சபையில் கையுயர்த்தி வாக்களிக்கும் உறுப்பினர்கள் (கோப்புப்படம்).
வெனிசூலா அரசியல் நிர்ணய சபையில் கையுயர்த்தி வாக்களிக்கும் உறுப்பினர்கள் (கோப்புப்படம்).

வெனிசூலா நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டதாக அரசியல் நிர்ணய சபை வெள்ளிக்கிழமை அறிவித்தது.

வெனிசூலா நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையாக உள்ள நிலையில், அதிபர் நிக்கோலஸ் மடூரோ அனைத்து அதிகாரங்களையும் தன்னிடம் குவிக்கத் திட்டமிட்டார். எனவே நாடாளுமன்றத்தைவிட அதிக அதிகாரங்களைக் கொண்ட அரசியல் நிர்ணய சபையை அமைத்துப் புதிய அரசியல் சாசனம் இயற்றத் திட்டமிட்டார். அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலை எதிர்க்கட்சிகள் அனைத்தும் புறக்கணித்தன. மடூரோவின் சோஷலிஸ்ட் கட்சியினர் மட்டுமே போட்டியிட்ட அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்த மாதம் நடைபெற்று 545 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அரசியல் நிர்ணய சபையில் அதிபர் மடூரோவின் மனைவியும் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் நிர்ணய சபை கடந்த சில நாட்களாகக் கூடி பல்வேறு தீர்மானங்களை எடுத்து வருகிறது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் வெனிசூலா நாடாளுமன்றத்தின் அதிகாரங்களைப் பறிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
புதிய அரசியல் சாசனம் இயற்றுவதற்காக அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையே அதிக அதிகாரம் உள்ள அமைப்பு என்று குறிப்பிட்ட அந்தத் தீர்மானம் அனைத்து உறுப்பினர்களாலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், அந்தத் தீர்மானத்தை அங்கீகரிக்கப் போவதில்லை என்று அமெரிக்கா தெரிவித்திருக்கிறது.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹெதர் நோவர்ட் செய்தியாளர்களிடம் கூறியது:
வெனிசூலா சட்டங்களையும் சர்வதேச சட்டங்களையும் புறந்தள்ளி நடைபெற்ற தேர்தல் மூலம் உருவாக்கிய அரசியல் நிர்ணய சபையை அமெரிக்கா அங்கீகரிக்கவில்லை. அந்த நாட்டில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட, உலக நாடுகள் அங்கீகரித்துள்ள நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டதாகக் கூறப்படுவதை அமெரிக்கா ஏற்காது.
அனைத்து அதிகாரங்களையும் தன்னிடம் குவித்துக் கொள்ள எண்ணும் மடூரோவின் சர்வாதிகாரத் திட்டங்களை அமெரிக்கா தனது முழு பலத்தைக் கொண்டு தடுக்கும். சர்வதேச நடவடிக்கைகள் மூலமாகவும் பொருளாதார ரீதியாகவும் நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் நிக்கோலஸ் மடூரோவின் சர்வாதிகாரப் போக்கை முறியடிப்போம் என்றார் அவர்.
புதிய அரசியல் நிர்ணய சபை கூடிய பின்னர், பல எதிர்க்கட்சித் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். சிலர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

நாட்டைவிட்டு வெளியேறினார் அட்டர்னி ஜெனரல்


வெனிசூலா அட்டர்னி ஜெனரல் பதவியிலிருந்து நீக்கப்பட்ட லூயிஸா ஓர்டேகா, அந்நாட்டைவிட்டு வெளியேறி கொலம்பியா வந்தார்.
வெனிசூலா அதிபர் நிக்கோலஸ் மடூரோவின் நெருங்கிய ஆலோசகராக இருந்தார் அட்டர்னி ஜெனரல் லூயிஸா ஓர்டேகா. எனினும், அதிபரின் ஜனநாயக விரோத நடவடிக்கைகள், நாடாளுமன்றத்தை மீறும் வகையில் மடூரோ செயல்படுவது, எல்லையற்ற அதிகாரங்களைத் தன்னிடம் குவித்துக் கொள்ள அவர் திட்டமிட்டது உள்ளிட்டவை, அட்டர்னி ஜெனரலாக இருந்த லூயிஸா ஓர்டேகாவுக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை.
மேலும், அதிபருக்கே அனைத்து அதிகாரங்களும் இருக்கும்படியாகப் புதிய அரசியல் சாசனம் இயற்றும் ஒரே குறிக்கோளுடன் அரசியல் நிர்ணய சபையை அமைப்பதை லூயிஸா ஓர்டேகா எதிர்த்தார். இருவரிடையே மோதல் வெடித்தது. இதைத் தொடர்ந்து அவரை அட்டர்னி ஜெனரல் பதவியிலிருந்து நீக்குவதாக அதிபர் மடூரோ கடந்த வாரம் அறிவித்தார். லூயிஸா ஓர்டேகாவும் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள அவரது கணவரும் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று அஞ்சப்பட்டது.
இந்த நிலையில், அவர்கள் இருவரும் வெனிசூலாவைவிட்டு வெளியேறி கொலம்பியா வந்து சேர்ந்தனர். அவர்கள் கொலம்பியாவில் அரசியல் அகதிகளாகப் புகலிடம் கோரியுள்ளனரா என்பது குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com