தற்கொலைக்குத் தூண்டும் 'ப்ளூ வேல்'  விளையாட்டுக்கு எதிராக வந்தாச்சு அன்பினைப் பரப்பும் 'பிங்க் வேல்' !

உலகமெங்கும் 130 பேருக்கு மேலான உயிர்களை பழிவாங்கி பெரும் அச்சுறுத்தலாக வளர்ந்து வரும் 'ப்ளூ வேல்'  விளையாட்டுக்கு எதிராக, சக மனிதர்கள் மீதான அன்பினை பரப்பும் 'பிங்க் வேல்' ...
தற்கொலைக்குத் தூண்டும் 'ப்ளூ வேல்'  விளையாட்டுக்கு எதிராக வந்தாச்சு அன்பினைப் பரப்பும் 'பிங்க் வேல்' !

சென்னை: உலகமெங்கும் 130 பேருக்கு மேலான உயிர்களை பழிவாங்கி பெரும் அச்சுறுத்தலாக வளர்ந்து வரும் 'ப்ளூ வேல்'  விளையாட்டுக்கு எதிராக, சக மனிதர்கள் மீதான அன்பினை பரப்பும் 'பிங்க் வேல்' என்னும் விளையாட்டு பிரபலமாகி வருகிறது.   

ரஷ்யாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரால் உருவாக்கப்பட்ட 'ப்ளூ வேல்' என்னும் விளையாட்டு, தற்பொழுது உலகெங்கும் பதின் பருவ இளைஞர்கள் பலரது உயிரைக் காவு வாங்கும் விளையாட்டாக உருவெடுத்துள்ளது.

உங்களைப் பற்றிய விபரங்களை முதலில் பதிவு செய்து கொண்ட பின் துவங்கும் இந்த விளையாட்டானது 50 டாஸ்க்குகளை கொண்டதாகும். முழுக்க மனோதத்துவத்தினை அடிப்படையாக கொண்டு இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

முதலில் சாதாரணமாக தனியாக திகில் திரைப்படம் பார்த்தல், உயரமான இடங்களில் நின்று புகைப்படம் எடுத்து அனுப்புதல், இடுகாட்டிற்கு நள்ளிரவில் தனியாகச் செல்லுதல் என்று துவங்கும் இந்த பட்டியலானது, உடலில் ரத்த காயங்களை உண்டாக்கி கொள்ளுதல், கத்தியால் திமிங்கிலத்தின் படத்தினை உடலில் வரைதல் என்று வலுவடைந்து இறுதியாக ஐம்பதாவது டாஸ்க்காக உங்களை தற்கொலை செய்து கொள்ளுமாறு தூண்டுவதில் முடியும். 

சுருக்கமாக மனோதத்துவ ரீதியாக உங்களை கொஞ்சம் கொஞ்சமாக தனிமைப்படுத்தி, கழிவிரக்கம் கொள்ளச் செய்து இறுதியில் தற்கொலைக்கு தூண்டுவதே இந்த அபாயகரமான ப்ளூ வேல் விளையாட்டின் நோக்கமாகும்.

ஆனால் இத்தகைய கொடூர விளையாட்டுக்கு எதிராக சக மனிதர்கள் மீதான அன்பினை பரப்பும் 'பிங்க் வேல்' என்னும் விளையாட்டும் பயன்பாட்டில் உள்ளது. இந்த விளையாட்டினை பிரேசிலினைச் சேர்ந்த ஆப் வடிமைப்பளார் ஒருவர் தயாரித்துள்ளார். பனானா தேவ் என்பது இவரது புனை பெயராகும். தற்பொழுது ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ ஓ எஸ் ஸ்டோர்களில் இந்த ஆப்பினை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

ப்ளூ வேல் போலவே இந்த விளையாட்டும் 50 டாஸ்க்குகளை கொண்டதாகும். ஆனால் இந்த விளையாட்டு ஒவ்வொரு படியிலும் எந்த வித ஆபத்தும் இல்லாமல் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக உங்கள் உடலில் எளிதில் அழியக்கூடிய மார்க்கர் பேனா மூலமாக உங்களைப் பற்றிய ஒரு நல்ல விஷயத்தினை எழுதிக் கொள்ளலாம்.

இதர டாஸ்க்குகளாக உங்களது தாத்தா, பாட்டியினை போனில் அழைத்துப் பேசுதல், கண்ணாடியினைப் பார்த்து உங்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக உரையாற்றுதல், தெருவில் நின்று உங்களை நீங்களே விரும்புவதாக உரக்கச் சொல்லுதல் ஆகியவை அடங்கும்.

ஐம்பதாவது டாஸ்க்காக உயிரை மாய்த்துக் கொள்ளும் 'ப்ளூ வேல்' போல் இல்லாமல், மற்றொரு உயிரை நீங்கள் முயற்சி செய்து காக்க வேண்டும் என்பதே இந்த விளையாட்டின் நோக்கமாகும்.

அன்பை பரப்புதலே அடிப்படை என்று கூறும் இந்த விளையாட்டினை தற்பொழுது வரை உலகில் 50000 பேர் டவுன்லோட் செய்துள்ளனர். முகநூலில் மூன்று லட்சம் பேரும்,  இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் நாற்பது ஆயிரம் பேரும் பின்தொடர்கின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com