நேபாள பொதுத் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

நேபாள நாடாளுமன்றத்துக்கும் மாகாணப் பேரவைகளுக்கும் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை தொடங்கியது.

நேபாள நாடாளுமன்றத்துக்கும் மாகாணப் பேரவைகளுக்கும் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை தொடங்கியது.
நேபாளத்தில் புதிய அரசியல் அமைப்பு சட்டம் இயற்றிய பிறகு அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கும், 7 மாகாணங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றது.
கடந்த நவ. 26-ஆம் தேதி முதல் கட்டத் தேர்தலும், இரண்டாம் கட்டத் தேர்தல் கடந்த வியாழக்கிழமையும் நடைபெற்றன. 
இதில் 66 சதவீத வாக்குகள் பதிவாகின. 
இதையடுத்து, வாக்கு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை தொடங்கியது.
நேபாள கம்யூனிஸ்ட்-ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கூட்டணி 5 இடங்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு தொகுதியில் நேபாள கம்யூனிஸ்ட்-மாவோயிஸ்ட் சென்டர் கட்சி வெற்றி பெற்றதாகவும் ஒரு தொகுதியில் சுயேச்சை வெற்றி பெற்றார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் மொத்த 275 இடங்களில் 165 உறுப்பினர்கள் இந்தத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மீதமுள்ள 110 இடங்களுக்கு விகிதாசார அடிப்படையில் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள்.
கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் நேபாளத்தில் நடந்த உள்நாட்டுச் சண்டையில் 16,000-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அதன் பின்னர் அமைந்த அரசின் கீழ் புதிய அரசியல் சாசனம் இயற்ற முடிவாகியது. அதன்படி, கடந்த 2015-ஆம் ஆண்டு புதிய சாசனம் இயற்றப்பட்டது. அதன் கீழ் நேபாளம் 7 மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது. சமவெளிப் பகுதியில் பாரம்பரியமாக வசித்து வரும் மதேசிகள் என்னும் இந்திய வம்சாவளியினர் புதிய மாகாணப் பிரிவால் பாதிக்கப்படுவதாக போராட்டம் நடத்தினர். அவர்களின் கவலைகளைக் களைய அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, புதிய தொகுதி வரையறுப்பு அடிப்படையில் நாடாளுமன்றத்துக்கும் மாகாணப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com