இஸ்ரேலின் ஜெருசலேம் கனவு மெய்ப்படுமா? -1

இஸ்ரேல் தேசம் உருவாக்கப்பட்டு 70 ஆண்டுகள் கடந்துவிட்டன.ராணுவம், தொழில்நுட்பம், பொருளாதாரம், கலாசாரம் போன்றவற்றில் அந்நாடு பல முன்னேற்றங்களைக் கண்டு பல நாடுகள் வியந்து வருகின்றன. 
இஸ்ரேலின் ஜெருசலேம் கனவு மெய்ப்படுமா? -1


இஸ்ரேல் தேசம் உருவாக்கப்பட்டு 70 ஆண்டுகள் கடந்துவிட்டன.
ராணுவம், தொழில்நுட்பம், பொருளாதாரம், கலாசாரம் போன்றவற்றில் அந்நாடு பல முன்னேற்றங்களைக் கண்டு பல நாடுகள் வியந்து வருகின்றன. 

இருந்தும், அந்த நாடு தனது தலைநகராகக் கூறிக் கொள்ளும் ஜெருசலேமை மட்டும் ஏற்றுக்கொள்ள ஏறத்தாழ எந்த நாட்டுக்கும் மனமில்லை.

இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரித்துள்ள சுமார் 160 நாடுகள், ஜெருசலேமுக்குப் பதிலாக டெல்-அவிவ் நகரில்தான் தங்கள் தூதரகங்களை அமைத்துள்ளன.
இஸ்ரேல் பிரதமர்-அதிபர் இல்லங்கள், பிரதமர் அலுவலகம், நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம், முக்கிய அமைச்சரகங்கள், அரசு அலுவலகங்கள் அனைத்தையும் ஜெருசலேமில் அமைத்து, 'இதுதான் எங்கள் நாட்டின் தலைநகர்' என்று இஸ்ரேல் உரக்கக் கூறினாலும், அந்த நாடுகள் டெல்-அவிவை விட்டு அசையவில்லை.

ஒரு அன்னையைப் போல இஸ்ரேலை தன் மடியில் வைத்துப் பாதுகாத்து வரும் அமெரிக்காவே அந்த விஷயத்தில் இத்தனை ஆண்டுகளாக மெளனம் காத்து வந்த நிலையில், இப்போதுதான் ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரிக்கவிருக்கும் அறிவிப்பை அதிபர் டொனால்ட் டிரம்ப் கொளுத்திப் போட்டுள்ளார்.

உலகம் முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ள அந்த அறிவிப்பு, மிகப் பெரிய பின்விளைவுகளை உண்டாக்கும் என்றும், பாலஸ்தீனப் பிரச்னைக்கு தீர்வே எட்ட முடியாத அளவுக்கு நிலைமை மோசமாகிவிடும் என்றும் சிலர் எச்சரித்துள்ளனர்.

ரஷியா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் நிரந்த உறுப்பு நாடுகளும், ஜெர்மனி உள்ளிட்ட உலக அரசியலில் செல்வாக்கு மிக்க நாடுகளும் இந்த அறிவிப்புக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன.

பாலஸ்தீன விவகாரத்தில் இஸ்ரேலுக்கு எதிரான இஸ்லாமிய நாடுகள்தான் என்றில்லாமல், கிட்டத்தட்ட உலக நாடுகள் அனைத்துமே ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அமெரிக்கா அறிவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?
ஏற்கெனவே அனைத்து அரசு இயந்திரங்களையும் ஜெருசலேமில் அமைத்து, அந்த நகரை இஸ்ரேல் தனது தலைமைப் பீடமாக்கிவிட்ட நிலையில், அதற்கு அங்கீகாரம் கொடுப்பதற்கு மட்டும் உலக நாடுகள் தயக்கம் காட்டுவது ஏன்?
இதற்கு அவ்வளவு எளிமையாக பதில் அளித்துவிட முடியாது.

காரணம், ஜெருசலேம் என்பது வெறும் நிலப்பரப்போ, கட்டடங்கள் நிறைந்த நகரமோ கிடையாது. அது ஒரு புனித பூமி.

யூதர்களுக்கும், உலகம் முழுவதும் சுமார் 300 கோடி பேர் பின்பற்றி வரும் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களுக்கும் அந்த நகரம்தான் புண்ணிய பூமி.
அந்த நகரை தங்கள் தலைநகராக்கியே தீர வேண்டும் என்று இஸ்ரேல் என்ன காரணத்துக்காக கனவு காண்கிறதோ, அதே காரணத்துக்காகத்தான் அந்த நகரை விட்டுத் தர பாலஸ்தீனமும் மறுத்து வருகிறது.

இஸ்ரேலின் புனித வரலாறு இன்று நேற்றல்ல.. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே அந்த நகருக்கான மதச் சண்டைகள் ஆரம்பித்து விட்டன.

இருந்தாலும், அந்த நகரம் தற்போது இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது எப்படி? மதச் சண்டைகளின் தொட்டிலாக இன்றும் தொடர்வது ஏன்?
இதற்கு, இஸ்ரேல் பிறந்த வரலாற்றை சற்று தெரிந்து கொள்ள வேண்டும்.

உலகம் முழுவதும் வெறுப்புகளையும், துன்புறுத்தல்களையும் சந்தித்து வந்த யூத மதத்தினர், இரண்டாம் உலகப் போரின்போது ஐரோப்பாவில் நாஜிக்களின் சொல்லவொண்ணா கொடூரங்களுக்கு ஆளானதைத் தொடர்ந்து, அவர்களுக்கென்று ஒரு தனி தேசத்தை அமைப்பதற்கான யோசனை உதித்தது.
உலகப் போரின் முடிந்த பிறகு, ஏறத்தாழ 6 கோடி யூதர்கள் படுகொலை செய்யப்பட்ட விவரங்கள் விலாவாரியாக வெளிவந்த பிறகு அதிர்ச்சியில் உறைந்த உலக நாடுகளுக்கு யூதர்களின்பால் இரக்கம் பெருக்கெடுத்தது.

அதன் தொடர்ச்சியாக, கடந்த 1940-களில் பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருந்த பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியில் நாஜி படுகொலையால் பாதிக்கப்பட்ட யூதர்கள் கூட்டம் கூட்டமாகக் குடியேறினர்.

ஜெருசலேம் பகுதியின் கட்டுப்பாடுகள் குறித்து அதுவரை பாலஸ்தீனர்கள், யூதர்கள் ஆகிய இரு பிரிவினருமே வேண்டா வெறுப்பாகக் கடைப்பிடித்து வந்த பிரிட்டன் விதிமுறைகள் முடிவுக்கு வந்த பிறகு, 1948-ஆம் ஆண்டு மே 14-ஆம் தேதி இஸ்ரேல் தன்னை தனி நாடாக அறிவித்தது.

அப்போது தொடங்கியதுதான் இந்த ஜெருசலேம் தலைநகர் பிரச்னை.

-நாகா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com