நியூயார்க் குண்டு வெடிப்பு எதிரொலி: வெளிநாட்டவர் குடியேற்ற சட்டத்தை திருத்த டிரம்ப் வலியுறுத்தல்

நியூயார்க்கில் நடந்த குண்டு வெடிப்புக்கு கண்டனம் தெரிவித்த அதிபர் டிரம்ப், அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டவருக்கான குடியேற்ற சட்டங்களில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று
நியூயார்க் நகரின் டைம்ஸ் சதுக்க மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகளின் பைகளை சோதனையிடும் காவல் துறையினர். 
நியூயார்க் நகரின் டைம்ஸ் சதுக்க மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகளின் பைகளை சோதனையிடும் காவல் துறையினர். 

நியூயார்க்கில் நடந்த குண்டு வெடிப்புக்கு கண்டனம் தெரிவித்த அதிபர் டிரம்ப், அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டவருக்கான குடியேற்ற சட்டங்களில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
நியூயார்க் நகர பாதாள மெட்ரோ நிலையங்களை இணைக்கும் சுரங்க நடைபாதையில் திங்கள்கிழமை காலை தற்கொலைத் தாக்குதல் முயற்சி நடைபெற்றது.
தனது உடலில் பைப் வெடிகுண்டைப் பொருத்திய நபர் அதனை வெடிக்கச் செய்தார். ஆனால் அந்த வெடிகுண்டு சரியாக வெடிக்கவில்லை. இதில் அந்த நபர் பலத்த காயமடைந்தார். பொதுமக்கள் மூன்று பேர் காயமடைந்தனர்.
பைப் வெடிகுண்டு மூலம் தற்கொலைத் தாக்குதல் நடத்த திட்டமிட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். கையிலும் வயிற்றுப் பகுதிகளில் பலத்த தீக்காயமடைந்த அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இருபத்தேழு வயதான அகாயதுல்லா என்னும் இந்த நபர் வங்கதேசத்திலிருந்து 7 ஆண்டுகளுக்கு முன்பு உறவினர்களுடன் வசிக்க அனுமதிக்கும் விசா பெற்று அமெரிக்கா வந்தார். இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளால் கவரப்பட்ட அவர் அமெரிக்காவில் தாக்குதல் நடத்த முயற்சி செய்ததாக காவல் துறையினரிடம் தெரிவித்தார்.
தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த அதிபர் டிரம்ப், குடியேற்றச் சட்ட விதிமுறைகளில் சீர்திருத்தம் தேவை என்று கூறினார்.
சிரியா, யேமன் உள்ளிட்ட 8 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வருவதற்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கும் ஆணையை டிரம்ப் பிறப்பித்திருந்தார். அதற்கு சில மாகாண உயர் நீதிமன்றங்கள் தடை விதித்திருந்த நிலையில், அவரது ஆணையைச் செயல்படுத்தலாம் என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் அண்மையில் அனுமதி வழங்கியது.
இந்த நிலையில், நியூயார்க் நகரில் தற்கொலைத் தாக்குதல் முயற்சி நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 
டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பது:
நியூயார்க் பயங்கரவாதத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். இன்றைய நிலையில், முதலாவதாகவும் முக்கியமானதாகவும் நாம் செய்ய வேண்டியது, வலுவற்ற அமெரிக்க குடியேற்ற சட்டத்தை சீர்திருத்தம் செய்வதுதான். தற்போதைய குடியேற்ற சட்டத்தின் கீழ் போதிய கண்காணிப்பு இல்லையென்பதால் பயங்கரவாதப் போக்கு உள்ள நபர்கள் நாட்டுக்குள் நுழைந்துவிடும் நிலைமை உள்ளது.
தற்போது நியூயார்க் தாக்குதலுக்காகக் கைது செய்யப்பட்டுள்ள நபரின் உறவினர்கள் ஏற்கெனவே இங்கு வசிப்பதன் அடிப்படையில், அவர் விசா பெற்று அமெரிக்காவில் குடியேறியுள்ளார். இது போன்ற தொடர் சங்கிலி விசா வழங்கும் விதிமுறைகளின் கீழ் நாட்டுக்குள் வர விழைவோர் குறித்து போதிய விசாரிப்பு, கண்காணிப்பு இருப்பதில்லை. இது போன்ற தொடர் சங்கிலிக் குடியேற்ற முறையை நாடாளுமன்றம் ரத்து செய்ய வேண்டும்.
தற்போதைய நடைமுறை அமெரிக்காவின் பாதுகாப்புக்கும் பொருளாதாரத்துக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. நமது நாட்டில் குடியேற்றத்தைப் பாதுகாப்பு மிக்கதாகச் செய்ய நான் உறுதியுடன் நடவடிக்கை எடுத்து வருகிறேன். 
இதுபோன்ற பயங்கரவாதச் செயல்களைத் தடுக்க வேண்டுமானால், வெளிநாட்டவர் குடியேற்றச் சட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டியுள்ளது.
பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றார். 
இது அமெரிக்காவில் கடந்த இரு மாதங்களில் நடைபெறும் இரண்டாவது பயங்கரவாதத் தாக்குதலாகும். 
சென்ற அக்டோபர் மாதம் நியூயார்க் நகரில் ஹட்ஸன் நதியையொட்டிய வீதியில் வாகனத்தை வேகமாக ஓட்டி வந்து மோதச் செய்ததில் 8 பேர் கொல்லப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து, தற்போது நியூயார்க் மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் சுரங்க நடைபாதையில் தற்கொலைத் தாக்குதல் முயற்சி நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்துக்குப் பிறகு நியூயார்க் நகரில் முக்கிய இடங்களில் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மெட்ரோ ரயில் பயணிகள் கடுமையான சோதனைக்குப் பின்னரே பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com