இஸ்ரேலின் ஜெருசலேம் கனவு மெய்ப்படுமா? -3

முதலாம் உலகப் போர்.
இஸ்ரேலின் ஜெருசலேம் கனவு மெய்ப்படுமா? -3

முதலாம் உலகப் போர்.
90 லட்சம் ராணுவ வீரர்கள், 70 லட்சம் பொதுமக்களின் உயிர்களை பலி வாங்கிய அந்தப் போரில், உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் அனைத்துமே இரு அணிகளாகத் திரண்டு பங்கேற்றன.
அந்தப் போர் தொடங்கிய 1914-ஆம் ஆண்டிலேயே, எதிரணியைச் சேர்ந்த ஓட்டோமன் பேரரசுக்கு எதிராக பிரிட்டன் போர் பிரகடனம் செய்தது.
எனினும், அந்தப் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்த பாலஸ்தீனத்தில் பிரிட்டனால் முழு கவனத்தையும் செலுத்த முடியவில்லை. இருந்தாலும், அந்தப் பகுதியின் எதிர்காலம் குறித்து பிரிட்டன் நாடாளுமன்றம் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு வந்தது.
இந்தச் சூழலில்தான், 1917-ஆம் ஆண்டில் பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த ஆர்தர் பால்ஃபோர் பிரிட்டன் மற்றும் அயர்லாந்து வாழ் யூதர்களுக்காக ஒரு பிரகடனத்தை வெளியிட்டார்.
"பாலஸ்தீனத்தில் யூதர்கள் தங்களுக்கென்று ஒரு தாயகத்தை அமைத்துக் கொள்வதற்கு பிரிட்டன் அரசு முழு ஆதரவை வழங்குகிறது' என்ற அந்தப் பிரகடன வாசகங்கள்தான், பாலஸ்தீனத்தில் யூத குடியேற்றத்துக்கு வழங்கப்பட்ட வெளிப்படையான முதல் அங்கீகாரம்.
அந்தப் பிரகடனத்துக்குப் பிறகு பிரிட்டன் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, ஜெருசலேம் நகரை 1917-ஆம் ஆண்டு டிசம்பரில் கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து, பாலஸ்தீனம் பிரிட்டனின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
இந்த நிலையில், அந்தப் பகுதி முழுவதையும் "பாலஸ்தீனம்' என்ற ஆட்சிப் பிரதேசமாக பிரிட்டன் 1922-ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதற்கிடையே, பிரிட்டன் ஆட்சிக்கு எதிராக யூதர்கள் அல்லாதோர் அடிக்கடி ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்தச் சூழலில்தான், இரண்டாம் உலகப் போர் மூண்டது. அந்தப் போரின்போது யூதர்கள் துன்புறுத்தப்பட்டதையும், சுமார் 60 லட்சம் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டதையும் கண்ட பிரிட்டன், போரின் முடிந்ததும், அவர்கள் சுதந்திரமாக வாழ்வற்கான ஒரு தனி நாட்டை அமைக்கும் வகையில் பாலஸ்தீனத்தில் தனது ஆட்சியதிகாரத்தை முடித்துக் கொள்ள 1947-ஆம் ஆண்டு விருப்பம் தெரிவித்தது.
அதையடுத்து, பாலஸ்தீனத்தை அரேபியர்களின் ஆட்சிக்குட்பட்ட ஒரு பகுதி, யூதர்கள் பகுதி, ஜெருசலேம் நகருக்கான சர்வதேசப் பகுதியாகப் பிரிக்கும் தீர்மானத்தை ஐ.நா. இயற்றியது.
இந்த ஏற்பாட்டை யூதர்கள் ஏற்றுக் கொண்டாலும், அரபு குழு ஏற்க மறுத்தது. இதன் விளைவாக பாலஸ்தீனத்தில் உள்நாட்டுச் சண்டை வெடித்தது.
இந்த களோபரத்துக்கு இடையே, 1948-ஆம் ஆண்டில் இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்டதாக பிரகடனப்படுத்தப்பட்டது. பிறகு இஸ்ரேலுக்கும், பாகிஸ்தான் மற்றும் அரபு நாடுகளின் கூட்டுப் படைக்கும் நடந்த சண்டையில், முன்பு பிரிட்டன் நிர்வாகத்தின்கீழ் இருந்த 26 சதவீத இடத்தை இஸ்ரேல் கைப்பற்றியது. அரபு கூட்டுப் படையைச் சேர்ந்த ஜோர்டான், ஜுடேயா, சமாரியா ஆகிய பகுதிகளைக் கைப்பற்றி, அதற்கு "மேற்குக் கரை' என்று பெயரிட்டது. காஸா பகுதியை எகிப்து கைப்பற்றியது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற
6 நாள் சண்டையில் எகிப்து, ஜோர்டான் ஆகிய நாடுகளின் வசமிருந்த பாலஸ்தீனப் பகுதிகளையும் இஸ்ரேல் கைப்பற்றியது. 
இந்த வகையில், தனது ராணுவ பலத்தைக் கொண்டு நிலப் பிரதேசங்களைக் கைப்பற்றிய இஸ்ரேல், அந்தப் பகுதிகளில் யூதர்களைக் கொண்டும் நிரப்ப ஆரம்பித்தது.
அப்போது தொடங்கியதுதான் 
யூதர்களின் தீவிர குடியேற்றம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com