மசூத் அஸாரின் பயங்கரவாதம் ஏற்கெனவே நிரூபணமானவை: சீனாவுக்கு இந்தியா பதிலடி

""ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாரின் பயங்கரவாதச் செயல்கள், ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டவை; அவற்றுக்கு தனிப்பட்ட ஆதாரங்கள் எதுவும் தேவையில்லை'' என்று சீன அரசுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

""ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாரின் பயங்கரவாதச் செயல்கள், ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டவை; அவற்றுக்கு தனிப்பட்ட ஆதாரங்கள் எதுவும் தேவையில்லை'' என்று சீன அரசுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத் துறைச் செயலர் எஸ்.ஜெய்சங்கர், பெய்ஜிங்கில் அந்நாட்டு வெளியுறவு இணையமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளை புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த எஸ்.ஜெய்சங்கர் கூறியதாவது: பயங்கரவாதி மசூத் அஸாருக்கு ஐ.நா. அமைப்பு தடை விதிக்க வேண்டும் என்று இந்தியா மட்டுமன்றி மற்ற நாடுகளும் வலியுறுத்தி வருவதை சீனத் தரப்பிடம் விவரித்தேன்.
மசூத் அஸாரின் பயங்கரவாதச் செயல்களுக்கு உறுதியான ஆதாரங்கள் தேவை என்று சீன வெளியுறவு அமைச்சகம் கேட்டிருக்கிறது. பயங்கரவாதச் செயல்களுக்காக, "ஜெய்ஷ்-ஏ-முகமது' அமைப்புக்கு ஐ.நா. குழு ஏற்கெனவே தடை விதித்துவிட்டது. மசூத் அஸாரின் பயங்கரவாதச் செயல்கள் அனைத்தும் ஏற்கெனவே ஆவணப்படுத்தப்பட்டு விட்டன.
மசூத் அஸாருக்கு ஐ.நா. குழு தடை விதிக்க வேண்டும் என்று இந்திய அரசு கடந்த ஆண்டு இரு முறை கொண்டு வந்த தீர்மானத்துக்கு சீன அரசு தடை விதித்துவிட்டது.
நிகழாண்டில் அந்தத் தீர்மானத்தை இந்திய அரசு கொண்டு வரவில்லை. மசூத் அஸாரின் பயங்கரவாதச் செயல்களை நன்றாகத் தெரிந்துகொண்ட பிறகே, சர்வதேச நாடுகள், அவருக்குத் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
என்.எஸ்.ஜி விவகாரம்: அணுசக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பில், இந்தியா உறுப்பினராவதற்கு சீன தரப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால், அந்த அமைப்பில் இந்தியா முறைப்படி உறுப்பினராக வேண்டும் என்று சீன அரசு விரும்புகிறது. 48 உறுப்பினர்களைக் கொண்ட அந்த அமைப்பில் இந்தியா உறுப்பினராவதற்கு பெரும்பாலான நாடுகளின் ஆதரவு இருப்பதை சீன அரசிடம் தெரிவித்தேன்.
இதுதவிர, வர்த்தகம், பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவற்றில் இந்தியத் தரப்பின் கவலைகள் முன்வைக்கப்பட்டன. இதற்காக, இரு நாடுகளின் வர்த்தகத் துறை அமைச்சர்கள் விரைவில் கூடி விவாதிப்பது என்று ச்சுவார்த்தையின்போது முடிவெடுக்கப்பட்டது என்று ஜெய்சங்கர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com