வட கொரிய அதிபர் சகோதரர் மர்மச் சாவு: ரசாயன வீச்சு மூலம் படுகொலை என மலேசிய போலீஸ் தகவல்

தடை செய்யப்பட்ட ரசாயனத்தை வீசி வட கொரிய அதிபரின் சகோதரர் படுகொலை செய்யப்பட்டதாக மலேசிய போலீஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
கிம் ஜோங்-உன், கிம் ஜோங்-நாம். (வலது) ரசாயனம் வீசியதாகக் கருதப்படும் சிதி அய்சியாவின் பாஸ்போர்ட் படமும், விமான நிலைய கண்காணிப்பு கேமராவில் பதிவான படமும்.
கிம் ஜோங்-உன், கிம் ஜோங்-நாம். (வலது) ரசாயனம் வீசியதாகக் கருதப்படும் சிதி அய்சியாவின் பாஸ்போர்ட் படமும், விமான நிலைய கண்காணிப்பு கேமராவில் பதிவான படமும்.

தடை செய்யப்பட்ட ரசாயனத்தை வீசி வட கொரிய அதிபரின் சகோதரர் படுகொலை செய்யப்பட்டதாக மலேசிய போலீஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னின் சகோதரர் கிம் ஜோங்-நாம் (45) மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் கடந்த வாரம் படுகொலை செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது. மர்ம நபர்கள் அவர் உடலில் விஷ ஊசி செலுத்தியதாக கூறப்பட்டது.
ஆனால் அவரது உடலில் ஊசி செலுத்திய சிறு துளை எதுவும் இல்லாததால் அவரது சாவு குறித்த மர்மம் நீடித்து வந்தது. இந்த நிலையில், அவருடைய உடலில் இருந்த மர்ம ரசாயன அம்சங்கள் குறித்து நடத்திய நச்சியல் ஆய்வு பற்றிய முதல் கட்ட அறிக்கையை மலேசிய காவல் துறைத் தலைவர் காலித் அபுபக்கர் வெள்ளிக்கிழமை வெளியிட்டார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:
கிம் ஜோங்-நாம் முகத்திலும் கண்களிலும் வி.எக்ஸ். என்னும் ரசாயனம் இருந்தது நச்சியல் ஆய்வில் தெரிய வந்துள்ளது. அந்த ரசாயனத்தின் ஒரு துளி பட்டால் கூட, ஒரு மனிதரின் மத்திய நரம்பு மண்டலம் உடனடியாக பாதிப்புக்கு உள்ளாகி உயிருக்கே ஆபத்து விளைவிக்கும்.
ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட அந்த ரசாயனம் எவ்வாறு மலேசியாவுக்குள் வந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும். ஆனால் மிகச் சிறிய அளவில் அந்த ரசாயனப் பொருள் எடுத்து வரப்பட்டால் அதனைக் கண்டுபிடித்திருக்க முடியாது.
கிம் ஜோங்-நாம் படுகொலை செய்யப்பட்டபோது, அவரை இரு பெண்கள் நெருங்குவதும், அவருடைய முகத்தில் மர்மப் பொருளை அழுத்துவது போன்ற காட்சியும் கோலாலம்பூர் விமான நிலைய கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
அந்த இரண்டு பெண்களும் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் கைதானதிலிருந்து ஒவ்வாமை காரணமாக உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
வி.எக்ஸ். ரசாயனம் என்பது உலகின் மிகக் கொடிய ரசாயன ஆயுதமாகக் கருதப்படுகிறது. வட கொரியா ஏராளமான ரசாயன ஆயுதங்களைக் குவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதில் வி.எக்ஸ். ரசாயனமும் உள்படும்.
அந்த ரசாயனத்தை வீசுவதன் மூலம் பெரும் அளவில் அப்பாவிப் பொதுமக்களின் உயிர்களைப் பறிக்க முடியும் என்பதால், வி.எக்ஸ். கொடிய ரசாயன ஆயுமாக அறிவிக்கப்பட்டு, ஐ.நா. அதனைத் தடை செய்துள்ளது.
எனினும் சில நாடுகள் தங்களது ரகசிய ரசாயன ஆயுதக் குவியலில் அதனைக் கணிசமான அளவு வைத்திருப்பதாக கூறப்படுகிறது.


கிம் ஜோங்-நாம் மர்ம சாவு தொடர்பாக, இதுவை 2 பெண்கள் உள்பட நால்வர் கைதாகியுள்ளனர். அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், ஒருவர் வட கொரியாவைச் சேர்ந்தவர்; ஏனைய மூவரும் மலேசியா, இந்தோனேசியா, வியத்நாமைச் சேர்ந்தவர்கள்.
மறைந்த கிம் ஜோங்-நாம், முன்னாள் அதிபர் கிம் ஜோங்-இல்லின் மூத்த மகனாவார். கள்ள பாஸ்போர்ட் பயன்படுத்தி 2001-இல் ஜப்பானுக்குள் நுழைந்தபோது அவர் பிடிபட்டார். ஜப்பானில் உள்ள டிஸ்னிலாண்ட் கேளிக்கை வளாகத்துக்கு அவர் செல்ல முயன்றதாக செய்தி வெளியானது. இந்த விவகாரத்தையடுத்து, அப்போதைய அதிபரான அவரது தந்தை, கிம் ஜோங்-நாமை குடும்பத்திலிருந்தும் அரசியலிலிருந்தும் ஒதுக்கினார். இளைய மகனான கிம் ஜோங்-உன்னை வாரிசாக அறிவித்தார். அப்போதிலிருந்து சீனாவைச் சேர்ந்த மக்காவ் பகுதியில் கிம் ஜோங்-நாம் வசித்து வந்தார். 2011-இல் தந்தை காலமானதும் கிம் ஜோங்-உன் வட கொரியாவின் புதிய அதிபரானார். இந்த நிலையில், நீண்ட காலமாகப் பிரிந்திருந்த சகோதரர் கிம் ஜோங்-நாமின் மர்ம சாவானது படுகொலை என ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
முன்னதாக, அவர்களின் தாய் மாமன் 2013-இல் படுகொலை செய்யப்பட்டது
நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com