தென் கொரியாவையொட்டிய கிழக்கு கடல் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற அந்நாட்டு கடற்படையின் போர்ப் பயிற்சியின்போது ஏவுகணையைச் செலுத்தும் போர்க்கப்பல்.
தென் கொரியாவையொட்டிய கிழக்கு கடல் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற அந்நாட்டு கடற்படையின் போர்ப் பயிற்சியின்போது ஏவுகணையைச் செலுத்தும் போர்க்கப்பல்.

வட கொரியா மீது ராணுவ நடவடிக்கை: அமெரிக்கா எச்சரிக்கை சீனா மீது சாடல்

தேவைப்பட்டால் வட கொரியா மீது ராணுவ நடவடிக்கை எடுப்போம் என்று ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி எச்சரித்தார்.

தேவைப்பட்டால் வட கொரியா மீது ராணுவ நடவடிக்கை எடுப்போம் என்று ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி எச்சரித்தார்.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஐ.சி.பி.எம். ஏவுகணையை வட கொரியா கடந்த செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாகப் பரிசோதனை செய்தது. அந்த ஏவுகணை 6,700 கி.மீ. பறந்து தாக்க வல்லது என்று அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் உறுதி செய்தனர். புதிய ரக ஏவுகணையில் அணு ஆயுதம் பொருத்தி அமெரிக்காவைத் தாக்கும் திறன் தங்களிடம் உள்ளதாக வட கொரியா மிரட்டியுள்ளது.
இந்த நிலையில், ஐ.நா.வின் முந்தைய கடுமையான பொருளாதாரத் தடைகளை மீறி வட கொரியா மீண்டும் ஏவுகணைப் பரிசோதனைகளை மேற்கொண்டது தொடர்பாக அமெரிக்காவின் அழைப்பின் பேரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அவசரக் கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் பேசிய அமெரிக்காவுக்கான தூதர் நிக்கி ஹேலி தெரிவித்தது:
சர்வதேசப் பாதுகாப்புக்கு கூடுதல் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. வட கொரியாவின் புதிய ஏவுகணை பரிசோதனையானது, ஆபத்தானது மட்டுமல்ல, பொறுப்பற்ற செயலுமாகும். உலக அமைதியில் சற்று கூட அக்கறையில்லாத நாடாக வட கொரியா தன்னை அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிறது. வட கொரியா மீது அமெரிக்கா தனது முழு பலத்தைப் பிரயோகிக்கத் தயாராக உள்ளது. அப்படிப்பட்ட நடவடிக்கை தேவைப்பட்டால் அமெரிக்கா தனது முழு ராணுவ பலத்தையும் காட்டும். ஆனால் அந்த வழியை அமெரிக்கா தேர்ந்தெடுக்க விரும்பவில்லை. அமெரிக்காவை மிரட்டுபவர்களை எதிர்கொள்ள எங்களுக்கு வேறு பல வழிகள் உள்ளன.
வட கொரியாவுக்கு வேறு பல நாடுகளின் உதவி தொடர்ந்து கிடைத்து வருவதால்தான் அந்த நாடு இத்தகைய நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. வட கொரியாவுடன் வர்த்தக உறவு வைத்துக் கொண்டிருப்பவர்கள் அமெரிக்காவுடனும் வர்த்தக ரீதியில் உறவாட வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் அந்தப் போக்கு நீடிக்க முடியாது. உலக நாடுகளின் பாதுகாப்பு பற்றித் தீவிரமாக சிந்திக்காதவர்களுடனான உறவை அமெரிக்க மறு பரிசீலனை செய்யும்.
வட கொரியாவின் செயல்களைக் கண்டித்து அமைதி வழிக்குக் கொண்டு வருவதில் சீனாவுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. வட கொரியாவின் வர்த்தகத்தில் சீனாவின் பங்களிப்பு 90 சதவீதமாகும். ஆனால் இந்த விவகாரத்தில் சீனா போதிய அளவு அக்கறையுடன் செயல்படவில்லை.
வட கொரியா செய்வது தவறு என்று அழுத்தமாகக் கூறாமல், அந்த நாட்டுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளைக் கொண்டு வரக் கூடாது என்கிற வகையில் செயல்பட்டால், சர்வாதிகாரத்துடன் நீங்கள் கைகோத்துச் செயல்பட விரும்புகிறீர்கள் என்று பொருள்.
ஐ.நா.வில் வட கொரியாவுக்கு எதிராக அமெரிக்கா விரைவில் கடுமையான தீர்மானத்தைக் கொண்டு வர உள்ளது. அதில் என்ன நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று பாதுகாப்பு கவுன்சில் நாடுகள் ஆழமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். உலக நாடுகள் ஒற்றுமையாகச் செயல்பட்டால், அந்த சர்வாதிகார நாட்டின் ராணுவத்துக்குத் தேவையான பெட்ரோலியம் போன்ற பொருள்கள் கிடைக்காமல் தடுக்க முடியும்.
அதன் அத்தியாவசிய செலவுக்கு இப்போது கிடைத்து வரும் ரொக்கம் கிடைக்காத நிலையை ஏற்படுத்த முடியும்.
வட கொரியா மீது மட்டுமல்லாமல், அந்த நாட்டுக்கு உதவி வரும் நாடுகள் மீதும் நடவடிக்கை எடுக்க அமெரிக்கா தயங்காது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்படும் தீர்மானங்களை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகளை அமெரிக்கா சகித்துக் கொள்ளாது என்று நிக்கி ஹேலி பேசினார்.
ஐ.நா. செயலரின் அரசியல் விவகார ஆலோசகர் இது தொடர்பாகத் தெரிவிக்கையில், பாதுகாப்பு கவுன்சில் தடைகளை மீறும் நடவடிக்கைகளை வட கொரியா கைவிட்டு, நேர்மையான முறையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட முன்வர வேண்டும் என்றார்.
சீன நிறுவனங்களுக்கு எதிராகப் பொருளாதாரத் தடை?
வாஷிங்டன், ஜூலை 6: வட கொரியா மீது சீனா போதிய நடவடிக்கை எடுக்கத் தவறியதைக் கண்டிக்கும் வகையில், சீன நிறுவனங்களுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளைக் கொண்டு வர அமெரிக்க திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது.
வட கொரியா மீது ஏற்கெனவே பல கடுமையான பொருளாதாரத் தடைகளை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதித்துள்ளது. ஆனாலும் அந்நாட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை சீனா வழங்கி வருகிறது. இந்த நிலையில், சீனாவைக் கண்டிக்கும் வகையிலும், வட கொரியாவுக்கும் பாதிப்பு ஏற்படும் வகையிலும் அமெரிக்கா புதிய வியூகம் வகுத்து வருவதாகத் தெரிகிறது.
ஈரானுக்கு எதிராக இதே போன்ற நடவடிக்கைகள் மூலம் முன்னர் அமெரிக்கா வெற்றிகரமான பலன்களைக் கண்டுள்ளது. ஈரானுக்கு உதவி வந்த நாடுகள் மீதும் அமெரிக்கா தடை விதித்து, அதன் அணு சக்தி சோதனைகளைக் கட்டுப்படுத்தியது. அதே போல இப்போது வட கொரியாவுக்கு உதவி வரும் சீன நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் மீது பொருளாதாரத் தடை விதித்து தண்டிக்க அமெரிக்கா யோசித்து வருவதாகத் தெரிகிறது.
ராணுவ நடவடிக்கை கூடாது: ரஷியா
வட கொரியா மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்வதற்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்ற அவசரக் கூட்டத்தின்போது ஐ.நா.வுக்கான துணைத் தூதர் விளாதிமீர் ஸஃப்ரோன்கோவ் கூறியது: வட கொரியா மீது பொருளாதார நடவடிக்கைகள் எடுப்பது எந்தப் பலனையும் அளிக்காது. அது போன்ற நடவடிக்கைகளால் இவ்விவகாரத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் முட்டுக்கட்டை போட்டதுபோலாகிவிடும். தீர்வு காணாமல் முடக்கி வைப்பதற்குதான் பொருளாதார நடவடிக்கைகள் பயன்படும்.
அதே சமயத்தில் அணு ஆயுதப் பரிசோதனையில் ஈடுபடுவதில்லை என்று வட கொரியா சுயமாகத் தடை விதித்துக் கொள்ள வேண்டும். புதிய ஏவுகணை சோதனைகளில் ஈடுபட மாட்டோம் எனவும் அந்த நாடு அறிவிக்க வேண்டும்.
அந்நாட்டுக்கு எச்சரிக்கை விடுப்பது போல அமெரிக்காவும் தென் கொரியாவும் இணைந்து ராணுவப் பயிற்சியில் ஈடுபடுவதையும் அதி நவீன ராணுவ தளவாடங்களை ஈடுபடுத்துவதையும் நிறுத்த வேண்டும். பதற்றம் தணிந்து இயல்பு நிலை திரும்ப இந்த நடவடிக்கைகள் உதவும்.
வட கொரியா விவகாரத்தில் ராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காணும் முடிவை ரஷியா ஏற்காது. ராணுவ நடவடிக்கைக்கு எந்த விதமான நியாயமான காரணத்தையும் கூறி விட முடியாது. அப்படிப்பட்ட காரணங்களை ரஷியா ஏற்றுக் கொள்ளாது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com